
நடிகர்சங்க தேர்தலில் விஷால் தீவிரமாக களம் இறங்க முக்கிய காரணங்களில் ஒன்று பொதுச்செயலாளராக இருந்த ராதாரவியின் அவமதிப்பான வார்த்தைகள் தான். அதனால் தான் தேர்தலில் நிற்கும்போது கூட ராதாரவிக்கு எதிராக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக சவால் விட்டு, அதில் வென்றும் காட்டினார்..
ஆனால் அந்த பிரச்சனைக்கு அத்துடன் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொம்பன் முத்தையா இயக்கத்தில் ‘மருது’ என்கிற படத்தில் ராதாரவியுடன் இணைந்து நடித்துள்ளார் விஷால்.. இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற செய்தி வெளியானபோதே பலரும் ஆச்சர்யப்பட்டார்கள்.. ஆனால் அந்த ஆச்சர்யத்தை இன்னும் அதிகமாக்கும் விதமாக ராதாரவியுடன் இணைந்து நடித்தது குறித்து மனப்பூர்வமாக கருத்து தெரிவித்துள்ளார் விஷால்.
“நடிகர் சங்க தேர்தல் பிரச்சனையில் ராதாரவி எதிர் தரப்பில் நின்றார் என்று பகைமை பாராட்டுவதும் அவர் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்பதும் முட்டாள்தனம் என்பேன். நடிகர் சங்க தேர்தலில் அவர் ஒரு கோணத்தில் நின்றார். நான் ஒரு கோணத்தில் நின்றேன், அவ்வளவுதான்.
அவர் என் படத்தில் நடிப்பது பற்றி படக்குழுவுக்கு மட்டுமல்ல வேடிக்கை பார்க்க வந்த மக்களுக்கும் கூட எதிர்பார்ப்பு, பரபரப்பு இருந்தது. நாளைக்கு வருகிறார். இன்றைக்கு வருகிறார் என்ன நடக்கப்போகிறதோ என்று எதிரிகளைப் போல விறுவிறுப்பு காட்டினார்கள். ராதாரவி அண்ணன் வந்தார். நடித்தார். அவர் சிறந்த அனுபவம் உள்ள நடிகர்.
சங்கம் வேறு; நடிப்பு வேறு. சங்கம் வேறு; தொழில்வேறு இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது. ராதாரவி அண்ணன் வந்தார் என்னைக் கட்டிப் பிடித்தார். “இப்போது நிறைய தொடர்ச்சியாக படங்கள் நடிக்கிறேன். வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்துக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் சொல்லுப்பா செய்றேன்” என்றார். அவர் ஒரு மூத்த நடிகர். அவர் மரியாதைக்குரியவர் என்பதை என்றும் நான் மறந்ததில்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
Comments are closed.