அரேபியாவில் ஆடு மேய்க்கும் மோகன்லால்

76

மலையாளப் படங்கள் இப்போது கொஞ்சம் வருஷமா கமர்ஷியல் பாதையில் அடியெடுத்துவைத்திருப்பது உண்மைதான். ஆனால் ஒரு சில இயக்குனர்கள் மட்டும் இந்தப்பாதையில் வராமல் தங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதை தைரியமாக, படமாக எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இயக்குனர் பிளஸ்ஸியும் அந்த வகையைச் சேர்ந்தவர்தான். இப்போதுகூட சர்ச்சையில் சிக்கியுள்ள களிமண்ணு படத்தை தைரியமாக எடுத்துவிட்டு ரிலீஸிற்காக காத்துக்கொண்டிருக்கிறார். காரணம் அந்தப்படத்தில் மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் நிஜப்பிரவசக்காட்சியை படமாக்கியுள்ளார் பிளஸ்ஸி.

இப்போது இயக்குனர் பிளஸ்ஸியின் அடுத்த படத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் ஆடுஜீவிதம். மோகன்லால் எப்படி இவர் படத்தில் நடிப்பார் என்று உடனே நினைத்துவிடவேண்டாம். ஏற்கனவே பிளஸ்ஸி இயக்கிய தன்மாத்ரா, பிரம்மராம், பிரணயம் என மூன்று படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் மோகன்லால். மூன்று படங்களுமே விருது வாங்குவதற்கான தகுதியைக் கொண்டவை. அதிலும் தன்மாத்ரா படத்தில் ஞாபகசக்திக் குறைபாட்டால் பாதிக்கப்படிருந்த கதாபாத்திரத்தில் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் மோகன்லால்.

இந்த ஆடுஜீவிதம் படம் பென்யமின் என்பவர் எழுதிய ஆடுஜீவிதம் என்ற நாவலைத்தழுவி எடுக்கப்பட இருக்கிறது. இந்தப்படம் பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் ஒருபட்டதாரி இளைஞனைப் பற்றிய கதையைச் சொல்கிறது. மலப்புரத்தில் இருந்து சவூதிக்கு வேலைக்கு செல்லும் பட்டதாரி இளைஞராக மோகன்லால் நடிக்கிறார்.

சின்னமனூர் விஜயகுமார்

Comments are closed.