
தமிழ் சினிமாவில் மிக நீண்ட பயணம் செய்து ஆயிரத்து ஐநூறு படங்கள் என்கிற மைல் கல்லை மிக எளிதாக தாண்டி கின்னஸ் சாதனை படைத்தவர் ஆச்சி என நம் அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் மனோரமா. 78வயதான இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.
1958ல் ‘மாலையிட்ட மங்கை’ படத்தில் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கிய இவர் தனது நகைச்சுவையான நடிப்பால் அனைவரையும் மகிழ்வித்து ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம்பிடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அனைத்து நடிகர்களின் படங்களில் மட்டுமல்ல, இன்றைய இளம் நடிகர்களின் படங்களிலும் தனது பங்களிப்பை தந்து அவர்களை கௌரவித்தவர் நடிகை மனோரமா ஒருவர்தான்.
சொல்லப்போனால் ஐந்து முதல்வர்களுடனும் பணியாற்றிய பெருமைக்குரிய நடிகையும் இவர் மட்டும் தான். தன் உடல்நிலை சரியில்லாத நிலையில் கூட கடந்த வருடம் வெளியான ‘சிங்கம்-2’ படத்தில் நடித்திருந்தது கலைமீது இவர் கொண்டிருக்கும் அளவற்ற பற்றிற்கு எடுத்துக்காட்டாகும்.
கொஞ்ச நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனோரமா கடவுளின் ஆசியால் சற்றே உடல் நலம் தேறி மீண்டும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பினார். ஆனால் காலதேவன் அவருக்கு ஒய்வு கொடுக்க விரும்பி அவரை இப்பூவுலகில் இருந்து பொன்னுலகிற்கு அழைத்து சென்றுவிட்டான். திரையுலகம் உள்ளவரை தனது படங்கள் மூலம் நம் மனதில் வாழும் ஆச்சியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Comments are closed.