
கிராமத்தையும் நகரத்தையும் இணைத்து ஜாலியான ஒரு குடும்பப்படமாக வெளியாகியுள்ளது ‘உன்னோடு கா’.
திருநெல்வேலி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் முன்னோர்களுக்குள் ஏற்பட்ட பகையால் காலங்காலமாக இரு தரப்பினர் மோதிக்கொள்கின்றனர்.. ஆனால் இந்த சண்டையை தொடர விரும்பாத அந்த இரு தரப்பினரின் வாரிசுகளான பிரபுவும், தென்னவனும் தங்களது மனைவிமார்களுடன் சென்னைக்கு குடியேறுகின்றனர்..
அருகருகே வீடுகளிலேயே வசித்து கூட்டாக வியாபாரமும் செய்கின்றனர். பிரபுவின் மகன் ஆரிக்கும் தென்னவன் மகள் மாயாவிற்கும் திருமணம் செய்துவிட்டால் இந்த பகையை வளரவிடாமல் ஒரு முடிவுகட்டலாம் என திட்டமிட்டு தங்களது வாரிசுகளை வளர்க்கின்றனர்.. ஆனால் ஆரியும் மாயாவும் சிறுவயது முதலே எலியும் பூனையுமாக தொட்டதற்கெல்லாம் சண்டை போடுகின்றனர்..
இவர்கள் இருவரும் இணைந்தார்களா..? ஊர்ப்பகை முடிவுக்கு வந்ததா என்பதை, கூடவே பாலசரவணன்-மிஷா கோஷல் இருவரின் காதல் கிளைக்கதையுடன் இணைத்து இரண்டேகால் மணி நேரம் கலகலப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
எந்நேரமும் சண்டையிட்டுக்கொள்ளும் ஜோடியாக ஆரியும் மாயாவும் பொருத்தமான தேர்வு.. ஸ்டைலிஷான ஆரியும், பளிச் சிரிப்பழகியான மாயாவும் படம் முழுவதும் நம் மனதை அள்ளுகிறார்கள் என்றால் பாலசரவணன் – மிஷா கோஷல் ஜோடி காமெடியில் கலகலக்க வைக்கிறது.
இவர்களையெல்லாம் விட பிரபு-ஊர்வசி, தென்னவன்-ஸ்ரீரஞ்சனி ஆகியோரின் குடும்ப நட்பும் அதை காட்சிக்கு காட்சி அவர்கள் வெளிப்படுத்தி இருப்பதும் தான் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஒரு பக்கம் மன்சூர் அலிகான், இன்னொரு பக்கம் எம்.எஸ்.பாஸ்கர், இவர்களை தாண்டி ஹைடெக் திருமண புரோக்கராக வரும் சாம்ஸ் என சிலரும் காமெடியால் படத்தை தாங்கி பிடிக்கின்றனர்.
படத்தின் கதையை எழுதியுள்ள அபிராமி ராமநாதன் பேமிலி ஆடியன்ஸை குறிவைத்தே எழுதியுள்ளார் என்பது காட்சிக்கு காட்சி நன்றாக தெரிகிறது.. அதை சோடைபோகாமல் இயக்கியுள்ளார் இயக்குனர் ஆர்.கே. படத்தின் சில முக்கிய காட்சிகளை பற்றி சொல்லவேண்டுமென்றால் என்ன பிரச்சனைகாக இரண்டு தரப்பினரும் மோதிக்கொள்கிறார்கள் என்பது உச்சபட்ச காமெடி.. தங்களது வாரிசுகள் ஓடிப்போய் கல்யாணம் கட்டிக்கொள்ள மெனக்கெடும் அப்பா அம்மாக்கள் புதுசு. சத்யாவின் இசையில் கோழி-சேவல் பற்றிய குழந்தைகள் பாடல் நிச்சயம் குழந்தைகளை கவரும்.
மொத்தத்தில் உன்னோடு கா’ ஒரு ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம் என்பதில் சந்தேகமே இல்லை.
Comments are closed.