பென்சில் – விமர்சனம்

225

pencil review

ஹைடெக் பள்ளிக்கூடம்.. மாணவனின் வன்மம் என ஏற்கனவே பலமுறை அரைக்கப்பட மாவையே அதிகம் புளிக்காமல் மாற்றி புதிய பேக்கிங்கில் தந்திருக்கிறார்கள்.

நகரத்திலேயே நம்பர் ஒன் பள்ளிக்கூடம்.. அதில் பிளஸ் டூ படிக்கும் பர்ஸ்ட் ரெண்க்க் மாணவன் ஜி.வி.பிரகாஷ்.. படிப்பே ஏறாத ஆனால் சூப்பர்ஸ்டாரின் மகன் என்கிற அந்தஸ்தில் வலம் வரும் மாணவன் ஷாரிக் ஹசன். ஜி.வி.பிரகாஷுக்கு உடன் படிக்கும் கமிஷனர் பொண்ணான ஸ்ரீதிவ்யா மீது காதல். நாம் நினைப்பது போல இந்த காதலுக்கு குறுக்காகவோ அல்லது ஸ்ரீதிவ்யாவை தன் பக்கம் இழுக்கும் முயற்சியையோ இன்னொரு மாணவனான ஷாரிக் செய்யாவிட்டாலும் கூட ஜி.விக்கும் ஷாரிக்குக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

அதீத சுதந்திரம், நடிகரின் மகன் என்கிற செல்வாக்கு எல்லாம் ஷாரிக்கை தவறுமேல் தவறாக செய்ய தூண்டுகின்றன. ஆசிரியர்களை துச்சமாக மதிக்கும் ஷாரிக்கை கண்டிக்காமல், அவரின் செயல்களுக்கு நிர்வாகமும் வக்காலத்து வாங்குகிறது.. உடன் படிக்கும் மாணவிகள் சிலரை தனது இச்சைக்கு இரையாக்கும் ஷாரிக், தனது ஆசிரியை ஒருவரின் அந்தரங்க வீடியோவை வைத்து அவரையும் மிரட்டுகிறார். தனது எதிரியான ஜி.வி.பிரகாஷின் ஆராய்ச்சி கட்டுரைகளை கொளுத்துகிறார். இப்படி பலரின் எதிர்ப்பை சம்பாதித்த ஷாரிக் ஒரு சுபயோக சுபதினத்தில் அவரது வகுப்பறையிலேயே வைத்து பென்சிலால் குத்தி கொல்லப்படுகிறார் (டைட்டில் ஓகே ஆகிவிட்டதா.?). கொன்றது யார் என்பதற்கு க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

இதுதான் ஜி.வி.பிரகாஷின் அறிமுகப்படம் என்பதும் அவரின் மற்ற படங்கள் வெளிவந்தபின், இதில் பல காட்சிகள் படமாக்கப்பட்டு இருப்பதும் காட்சிக்கு காட்சி வித்தியாசப்படும் அவரது நடிப்பே சொல்லி விடுகிறது. இருந்தாலும் மாணவன் கேரக்டரை நன்றாகவே செய்திருக்கிறார். ஸ்ரீதிவ்யாவும் இடைவேளைக்குப்பின் கதையின் பளுவை தன்மீது சுமத்திக்கொண்டாலும், குருவி தலையில் பனங்காய் வைத்தது போல கொஞ்சம் ஓட்டாமல் தனித்தே நிற்கிறார். அதீத சுதந்திரமும் செல்வாக்கும் கிடைத்தால் ஒரு மாணவன் எப்படி தவறான பாதைக்கு திருப்ப படுகிறான் என்பதற்கு ஷாரிக் ஹாசனின் கதாபாத்திரம் நல்ல உதாரணம்.. பார்ப்பதற்கு சினவயது ஷாருக் போலவே இருக்கும் ஷாரிக்கின் நடிப்பு ஒகே என்றாலும் ஒரு மாணவனை இப்படியா வில்லத்தனமாக காட்டுவது..?

ஆசிரியர்களாக வரும் அபிஷேக், திருமுருகன், சுஜா வாருணி, விடிவி கணேஷ் மற்றும் பிரின்சிபல் ஆக வரும் டி.பி.கஜேந்திரன் உட்பட அனைவருமே சரியான தேர்வுதான்.. ஐ எஸ் ஓ ஆபிசராக வரும் ஊர்வசியும் கலகலப்பூட்டுகிறார்.. ஒரு கொலை, பல கோணங்கள் என்கிற ரீதியில் இடைவேளைக்குப்பின் காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்த முயற்சித்து, ஆனால் ஓவர் டோஸ் ஆக்கிவிட்டார்கள்..

துப்பறியும் நாவல்களை படிப்பதாலேயே ஸ்ரீதிவ்யா ஹேர்பின்னால் பூட்டுக்களை திறக்கிறாராம்.. கொலைக்கான காரணங்களை ஆராய்கிராராம். ஜி.வி.பிரகாஷ் இஷ்டத்துக்கு பாஸ்வேர்டு போட்டால் கம்ப்யூட்டர், செக்யூரிட்டி சிஸ்டம் எல்லாமே ‘ஜீபூம்பா’ என திறந்துவிடுவது எல்லாம் சரியான காதுகுத்து. நல்ல வேளையாக காதலை மிகைப்படுத்தி காட்சிகள் அதிகம் வைக்கவிலை என்பது ஆறுதல்.. மருந்துக்கு கூட வெளி லொகேஷன்கள் இடம்பெறவில்லை என்றாலும் ஒரு பள்ளிக்கூடத்தையே விதவிதமான ஆங்கிளில் போரடிக்காமல் படம் முழுதும் காட்ட முயன்றிருக்கிறது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு.

தனியார் பள்ளிகளில் மாணவர்களின் தவறுகளையோ அல்லது தங்களது தவறுகளையோ ஒரு நிர்வாகம் மறைக்கவே முயல்கிறது என்பதையும் கல்வியை வியாபரமாக்கிவிட்டதால் ஆசிரியர்களை கூட அரசியல்வாதிகள் போல பேரம் பேசி இழுக்க முயற்சிப்பதையும், பள்ளியின் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்வதற்காக தகுதியில்லாவிட்டாலும் கூட வி.ஐ.பி மாணவர்களை சேர்த்துக்கொள்வதும் அவர்களின் தவறுகளை தண்டிக்காமல் அவர்களை மறைமுகமாக ஊக்குவிப்பது என இயக்குனர் மணி நாகராஜ் இன்றைய ஹைடெக் கல்வி முறையின் அவலத்தை தோலுரித்து காட்ட முயன்றிருப்பதை பாராட்டலாம்.

Comments are closed.