
பாலிவுட் நடிகர் சல்மான்கான் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிக்கொன்றாரே, அதாவது அப்படி குற்றம் சாட்டப்பட்டு பின்னர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டாரே அந்த வழக்கையே இரண்டு மணி நேர சினிமாவாக மாற்றியிருக்கிறார்கள்.. இன்னும் சொல்லப்போனால் இந்தியில் வெளியான ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக் தான் இந்த மனிதன்..
பொள்ளாச்சியில் மரத்தடி வக்கீலாக கேசுக்காக அலையும் உதயநிதி, மிகப்பெரிய ஆளாக வருவதாக சபதம் போட்டு சென்னைக்கு வருகிறார்.. கோடீஸ்வரர் வீட்டு பையன் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிக்கொன்ற வழக்கில் சீனியர் வக்கீல் பிரகாஷ்ராஜுக்கு எதிராக ஆஜராகிறார்,
அவர் எதிர்பார்த்த பிரபலமும் கூடவே பிரச்சனைகளும் தேடி வருகின்றன. இந்த வழக்கில் இருந்து உதயநிதியை விலகச்செய்ய பலவிதமாக நெருக்கடி கொடுக்கிறார் பிரகாஷ்ராஜ்.. இதைத்தாண்டி குற்றவாளிக்கு உதயநிதியால் தண்டனை வாங்கிக்கொடுக்க முடிந்ததா என்பதற்கு விடைசொல்கிறது க்ளைமாக்ஸ்.
மரத்தடி வக்கீலாக கேஸ் கிடைக்காமல் அல்லாடும் கேரக்டரில் சரியாக பொருந்துகிறார் உதயநிதி. அதே நேரம் ஹைஹோர்ட்டில் பிரபல லாயருடன் மோதும்போது பாடி லாங்குவேஜையும், கோர்ட் மொழிக்கான வசன உச்சரிப்பையும் கொஞ்சம் மாற்றியிருக்க வேண்டாமோ..? கதாநாயகன் தடம் மாறுகின்றபோது அவனை நேர்வழிப்படுத்துகின்ற, அவன் சோர்ந்துபோகும் நேரங்களில் எல்லாம் அவனுக்கு தன்னம்பிக்கை தருகின்ற காதலியாக ஹன்ஷிகா பாந்தமாக ஜொலிக்கிறார்.
சேனல் ரிப்போர்ட்டராக வந்து தனது வேலையை செவ்வனே செய்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.. பிரபல லாயர் ஆதிசேஷனாக வந்து கோர்ட்டுக்குள் குழாயடி சண்டை ரேஞ்சுக்கு இறங்கி சண்டைபோடும் பிரகாஷ்ராஜ் கலப்பான கேரக்டர்தான். உதயநிதியின் தாய்மாமனாக வரும் விவேக், நகைச்சுவியைவிட குணச்சித்திரத்தில் மிளிர்கிறார்.
கேண்டீன் ஓனராக வந்து நியாயத்திற்கு பக்கபலமாக நிற்கும் சங்கிலி முருகன், இன்ஸ்பெக்டர் போஸ்டையே ஏலம் விடும் கான்ஸ்டபிளாக மயில்சாமி, உதயநிதியை நம்பவைத்து கழுத்தறுக்கும் பிரகாஷ்ராஜின் கையாளாக நடித்துள்ள மலையாள நடிகர் கிருஷ்ண குமார் என சின்னசின்ன கேரக்டர்களையும் நன்றாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனாலும் இவர்களைவிட நீதிபதியாக வரும் ராதாரவிதான் படம் முழுவதும் மொத்த நகைச்சுவையையும் குத்தகைக்கு எடுத்து கலகலப்பூட்டுகிறார்.. கோர்ட்டுக்குள்ளேயே பிரகாஷ்ராஜிடம் அபார்ட்மென்ட் விலை பற்றி விசாரிக்கும்போது எங்கே நியாயம் தவறி நீதி வழங்குவாரோ என எண்ணவைத்து, அதே பிரகாஷ்ராஜை பேப்பர் வெயிட்டை எடுத்து அடிக்க பாயும்போது கைதட்டல்களை அள்ளி சபாஷ் பெறுகிறார் ராதாரவி.
சாமான்ய மனிதனுக்கு நீதி கிடைப்பது எளிதா என்கிற ஒன்லைனை இரண்டுமணி நேர படமாக்கிய அஹமத்தின் முயற்சிக்கு பாராட்டுக்கள். அதேசமயம் மிகப்பெரிய வழக்கில் இருந்து குற்றவாளியை தப்பிக்க வைப்பதானாலும் சரி, அல்லது அவருக்கு தண்டனை வாங்கி கொடுப்பதானாலும் சரி.. வாதங்களும் சாட்சிகளும் சாட்சி முறியடிப்புகளும் எதிர்பாராத திருப்பங்களுடன் இன்னும் வலுவாக இருந்திருக்க வேண்டாமா..? அதை கவனித்திருக்கலாம். மற்றபடி ஒரு நல்ல பொழுபோக்கு படமாக இந்த ‘மனிதன்’ முழு தகுதி பெறவே செய்கிறான்.
Comments are closed.