ஒரு நாள் இரவில் – விமர்சனம்

240

oru nal iravil  poster
சிங்கப்பூர் சென்று சம்பாதித்துவிட்டு சொந்த ஊர் திரும்புகிறார் சத்யராஜ். கட்டுப்பாடான அவர், எங்கே தனது மகள் காதல் கத்திரிக்காய் என வந்து நிற்பாளோ என பயந்து, அவளது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி திருமணம் செய்துகொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்குகிறார்.

இந்த நிலையில் வழக்கமாக தனக்கு ஆட்டோ ஓட்டும் ட்ரைவர் வருணுடன் ஒரு நாள் இரவில் ஆட்டோவில் வரும்போது சாலையில் நிற்கும் கால்கேர்ள் அனுமோலை பார்க்கிறார். அதுவரை சத்யசந்தனாக இருந்த சத்யராஜின் மனம் திடீரென சபலப்பட, அவரை அழைத்துக்கொண்டு வீட்டை ஒட்டியே வாடகைக்கு விடாமல் பூட்டிவைத்துள்ள தனது கடை ஒன்றிற்கு அழைத்துச்செல்கிறார்.

இருவரையும் அந்த அறைக்குள் வைத்து ஷட்டரை வெளியே பூட்டிவிட்டு அவர்களுக்கு டிபன் வாங்கச்செல்லும் வருண், வரும் வழியில் குடித்துவிட்டு ஆட்டோ ஓட்டியதாக போலீசாரால் மடக்கப்பட்டு ஸ்டேஷனுக்கு அழைத்துச்செல்லப்படுகிறார். விலைமாதுவான அனுமோல் நேரம் செல்லச்செல்ல பசியால் கத்தி ஊரைக்கூட்ட முயல்கிறார். கடையின் பின்புறம் இருக்கும் தனது வீட்டிற்கு இந்த விபரம் தெரிந்தால் அவமானம் என பதைபதைக்கிறார் சத்யராஜ்.

இந்த இக்கட்டில் இருந்து சத்யராஜால் வெளியேற முடிந்ததா என்பதை இதயம் பதைபதைக்க சொல்லி முடித்திருக்கிறார்கள்.

அவமானம்.. இந்த ஒற்றைச்சொல் தான் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. ஆசைப்பட்டு அனுபவிக்க விலைமாதை அழைத்து வந்துவிட்டு, அவமானப்பட்டு விடுவோமோ என்கிற குற்ற உணர்ச்சி காமத்தை வெல்வது வரை தனது நடிப்பில் துளிகூட இயல்பு குறையாமல் நடித்துள்ளார் சத்யராஜ். அந்த கதாபாத்திரத்திற்கு அவரைத்தவிர வேறு யாரையும் நினைத்து பார்க்க முடியவில்லை.

விலைமாதுவான அனுமோல், ஆரம்பத்தில் அடம்பிடித்து, பின் சூழல் உணர்ந்து சாந்தமாவதுடன், பெண்கள் குறித்த சத்யராஜின் குறுகிய பார்வையை திறந்துவிட்டு போகும்போது நம் மனதில் தங்குகிறார்.. கதையின் திருப்பத்திற்கு காரணமான ஆட்டோ ட்ரைவரான புதுமுகம் வருண் கதையின் கனத்தால் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்கிறார்.

இயக்குனராக வரும் யூகிசேது ஆட்டோ ட்ரைவரான வருணுடன் இரவு நேர சவாரியில் மாட்டிக்கொண்டு தவிக்கும் காட்சிகளில் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஒருநாள் இரவு முழுவதும் பூட்டிய அறையில் மாட்டும் சத்யராஜுக்கு வாழ்க்கையின் பல யதார்த்த உண்மைகள் விளங்குவதுதான் படத்தின் அடிநாதம். அதில் துளிகூட சாரம் குறையாமல் படமாக்கி வெற்றிவாகை சூடியுள்ளார் இயக்குனராக புரமோஷன் பெற்றுள்ள ஆண்டனி.

Comments are closed.