வண்ண ஜிகினா – விமர்சனம்

223

யாருமில்லா அனாதையான கால்டாக்ஸி விஜய் ட்ரைவரான விஜய் வசந்துக்கு தான் கருப்பு என்பதும், அதைவிட தன்னுடைய பெயர் பாவாடைசாமி என்பதாலும் தாழ்வு மனப்பான்மை.. பெயரை சொல்லவே கூச்சப்படும் அவரால் பெண்களிடம் பேசிப்பழக முடியவில்லை. நண்பர்களின் ஆலோசனைப்படி பேஸ்புக்கில் வேறொரு பெயரில் வேறொரு அழகிய இளைஞனின் முகத்துடன் உள்ளே நுழைகிறார்.

அழகே உருவான சானியாதாராவின் புகைப்படத்தை பார்த்து அவருடன் நட்பாகிறார். முகம் காட்டாமல் ஆடியோ சாட்டிங்கிலேயே பேசுகிறார். அதேசமயம் அந்த சானியாதாராவே திடீரென்று ஒருநாள் இவரது காரில் ஏறி, இவருடன் நட்பாகி, போகப் போக உரிமையுடன் பழக ஆரம்பிக்கிறார்.

இனி பொய்முகத்தை உடைத்துவிட்டு சானியாவிடம் உண்மையை சொல்லி மன்னிப்பு கேட்டு, தனது காதலையும் தெரிவிக்கலாம் என விஜய் வசந்த் நினைக்கும் வேளையில் வருகிறது மிகப்பெரிய அதிர்ச்சி.. எந்த இளைஞனின் படத்தை பேஸ்புக்கில் பொய்யாக பயன்படுத்தினாரோ அவனும் சானியாவும் ஏற்கனவே காதலர்கள்..

அப்படியானால் சானியா பெயரில் விஜய்வசந்தை காதலித்தது யார்..? விஜய் வசந்தின் பேஸ்புக் காதலுக்கு கிடைத்த முடிவு என்ன..? என்பது பேஸ்புக்கை தவறாக பயன்படுத்த நினைப்பவர்களுக்கு சாட்டியடி கொடுக்கும் க்ளைமாக்ஸ்.

முகம் பார்க்காமலே காதலிப்பது ஒருவகை.. கொஞ்சம் ரிஸ்க் தான் என்றாலும் சுபமான முடிவும் ஏற்படலாம்.. ஆனால் முகத்தையும், பெயரையும் மாற்றி காதலித்தால் விளைவு எப்படி இருக்கும் என்பதைத்தான் ‘வண்ண ஜிகினா’வில் விலாவாரியாக விவரித்திருக்கிறார்கள்.

கேரக்டருக்கு ஏற்ப இருக்கும் விஜய் வசந்த் அதில் அழகாக பொருந்துகிறார்.. சானியாதாராவும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார். எக்ஸ்பிரஷன்கள் தான் கொஞ்சம் சிரமப்படுத்துகின்றன. ஜான்பீட்டர்ஸ் இசையில் பாடல்கள் இரைச்சல் இல்லாமல் இருப்பதே இதமாக இருக்கிறது…

லாஜிக்குகளை எல்லாம் தனது இஷ்டப்படி வளைத்து கதையை இழுத்திருக்கிறார் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி. முகம் காட்டாமல் பேசியே பழக நினைத்தாலும், செல்போன் யுகமாகிவிட்ட இந்த நாளில் இரண்டாவது நாளே மொபைலுக்கு மாரி கடலை போடுவார்களே தவிர, லேப்டாப்பை தூக்கிக்கொண்டு அவ்வளவு சிரமப்பட்டு பேஸ்புக்கிலா ஆடியோ சாட்டிங் பண்ணுவார்கள்..? அப்படியே பொய்முகத்துடன் காதலித்தாலும் ஒருநாள் உண்மையான முகத்தை காட்டியாகவேண்டும் என்கிற சென்ஸ் இந்த இருவரில் ஒருவருக்கு கூடவா இருக்காது..?

இப்படி நிறைய கேள்விகளை எழுப்பிக்கொண்டே போகலாம்.. ஆனாலும் தாழ்வு மனப்பான்மை தேவையில்லை, பேஸ்புக்கில் பொய் வேண்டாம் என்கிற கருத்தை சொன்னதற்காக மட்டுமேனும் இயக்குனர் நந்தா பெரியசாமியை பாராட்டலாம்.

Comments are closed.