காஞ்சனா-2 – விமர்சனம்

310

ஏ.. லாரன்ஸுக்கு வழக்கம்போல பேய்னா பயம்லா. சேனல்ல கேமராமேனா வேலை பாக்குற அவரு கூட வேல பாக்குற தாப்ஸி பொண்ண லவ் பண்ணுதாரு.. சேனலோட ரேட்டிங்க ஏத்துறதுக்காக பேய் நிகழ்ச்சி ஒன்ன படம்பிடிக்க கும்பலா மகாபலிபுரம் போறாவுக.. ஏ..போன இடத்துல சும்மா இல்லாம, அங்க பொதஞ்சு கெடக்குற பேயை உசுப்பி விட்டுதாக..

ஏ.. அது ஒன்னுக்கு ரெண்ணா ரெண்டா கெளம்பி வந்து எல்லாத்தையும் போட்டு குமுறு குமுறுன்னு குமுறுதுலே.. வழக்கமா ஒருத்தருக்கு தாம்ல பேய் பிடிக்கும். ஏலே இங்க லாரன்ஸ், தாப்ஸி ரெண்டு பேரையும்லா பிடிக்குது. லாரன்ஸோட அம்மா கோவை சரளா இருக்குதுலா.. அது போய் ஒரு சர்ச் பாதருகிட்ட விஷயத்தை சொல்லி பையனை காப்பாத்த சொல்லி கெஞ்சுது..

பாதரு மந்திரத்தை போட்டு விசாரிக்கிறப்பத்தான், ஏ இன்னொரு லாரன்ஸ், அவரு கட்டிக்கப்போற நித்யா மேனன் ரெண்டு பேத்தையும், இந்த ஜெயபிரகாஷ் இருக்காருல்ல.. அவரு கொன்ன சங்கதி தெரியவருது. ஏ கூடவே அந்த லாரன்ஸோட கூட்டாளிங்க ஆம்பள, பொம்பள, கொழந்த, கெழவினு எல்லாத்தையும் சேர்த்துல கொன்னு பொதைக்குறாரு மனுஷன்..

ஏலே.. இப்ப புரிஞ்சுதா.. ரெண்டுபேரும் எதுக்கு பேயா வந்துருக்காங்கன்னு.. அதாம்ல.. வந்த சோலிய முடிச்சாங்களா, இல்லையாங்குறதுதாம்ல கிளைமாக்சு.

இந்த லாரன்ஸ் இருக்காருல்ல.. ஏயப்பா அவரு பெரிய ஆளுதாம்ப்பா.. நீங்க உள்ள போய் உக்காருங்க.. எடவேள வரைக்கும் உங்க மண்ட முடி நட்டுக்கிட்டு நிக்கிற மாதிரி ரெண்டு நிமிஷத்துக்கு ஒருக்கா பயமுறுத்தாறுல்லா. ஆனா எடவேளைக்கு அப்புறமா பொழுதன்னைக்கும் பேயவே காட்டிக்கிட்டு இருக்கறதுனால கொஞ்சம் பயம் விட்டு போயுறுதுலா.. ஏலே, பேய்னா எப்பவாச்சும் ஒருக்கா காட்டுனாத்தான்ல பயம் நிக்கும்.

ஏ..இதுல லாரன்ஸ் டபுள் ஆக்ட் பண்ணிருக்காருப்போ.. அதுலயும் நாலு கெட்டப்புல வேற வர்றாரு.. இந்த தாப்ஸி பொண்ணு இருக்குல, ஏ அது பேய் பிடிச்சதும் ஜோதிகா கணக்கா மூஞ்சிய மாத்த ட்ரை பண்ணுதுப்பா.. பாத்து சிரிச்சு கிரிச்சு வச்சுடாதீங்க.. இந்த நித்யா பொண்ணு தான் பாவம்லா.. கால இழுத்து இழுத்து நடந்து நல்லா வித்தியாசமா நடிச்சுருக்குலா..

ஏலே.. உங்கள அடிக்கடி பயப்படுத்துற மாதிரியே, அடிக்கடி நல்லா சிரிக்கவும் வைக்குறாங்கல்லா.. அட.. ராத்திரி பயப்படாம ஒன்னுக்கு போறதுக்காக மயில்சாமிய பாத்ரூமுக்கு வாட்ச்மேனா போடுறாருன்னா காமெடி எப்படி இருக்கும்னு பாத்துக்குங்கலா. கோவை சரளா பின்னி பெடலேடுக்குது.. மனோபாலா, சாம்ஸ், ஸ்ரீமன்னு எல்லோரும் அடிக்குற கூத்துக்கு, சின்னப்புள்ளங்கள கூட்டிட்டு போனீங்கன்னா, மக்கா.. சும்மா ஸ்பிரிங் மாதிரி குதிச்சு குதிச்சு சிரிக்கும்லா..

சரிலே.. இந்த பேய் ரெண்டும் வருதுல்ல.. அது வில்லனை கொல்லத்தான வருது.. அதுக்குத்தான அப்புராணி புள்ளங்க ரெண்டு பேத்தையும் புடிக்குது.. சரி புடிச்சுட்டு போகட்டும்.. எதுக்குலா அந்த நல்ல மந்திரவாதி ஒருத்தன போட்டு கொல்லுதுங்க.. கோவை சரளாவையும் ரேணுகாவையும் போட்டு மிதிக்குதுங்க..

ஏ.. பேய்ப்படம்னாலும் அதுலயும் கொஞ்சமாச்சும் லாஜிக் இருக்கனும்ல.. அத இந்த லாரன்ஸ் தம்பி அப்பப்ப வசதியா தூக்கி வீசிர்றாருலா.. ஆனா அவரோட பிளான் என்னலா.. ஏ படம் பாக்க வர்றவங்கள ஒரு மணி நேரம் பயத்துல மெரட்டணும்.. அரை மணி நேரம் சிரிக்க வைக்கணும்.. அது ரெண்டையும் சரியா செஞ்சுடுதாருல்லா.. அப்புறம் என்னா.. புள்ளகுட்டிகள கூட்டிட்டு கெளம்புங்கலா படத்துக்கு..

Comments are closed.