
கிராமத்து இளைஞர் ஹரீஷ் படித்துவிட்டு வேலைக்கு போகாமல் நண்பர்களுடன் ஊரைச்சுற்றுபவர். அதுமட்டுமல்ல, கிராமத்தில் எந்த இளம்பெண்ணை பார்த்தாலும் ‘அந்த பொண்ண முடிச்சிட்டண்டா’ என நண்பர்களிடம் சும்மாங்காட்டியும் அள்ளிவிடும் வெத்துவேட்டு. அப்படித்தான் மிலிட்டிரிகாரர் தென்னவனின் மகளான மாளவிகா மேனனையும் ‘மடித்துவிட்டதாக’ நண்பர்களிடம் சுட்டிக்காட்டுகிறார்.
சில நிகழ்வுகள் அதை உண்மை என்று அவரது நண்பர்களை நம்பவைக்கின்றன. ஒரு நாள் திடீரென மாளவிகா கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. பஞ்சாயத்தில் அதற்கு காரணமாக ஹரீஷை நோக்கி கைகாட்டுகிறார் மாளவிகா. ஆனால் ஹரீஷோ தான் காரணமில்லை என மறுத்தாலும் ஹரீஷின் நண்பர்கள் சொன்ன சாட்சியால், பஞ்சாயத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கிறார்கள்.
மாளவிகா மேனன் எதற்காக ஹரீஷை நோக்கி கைகாட்டினார்..? அவரது உண்மையான கர்ப்பத்துக்கு காரணம் யார்..? திருமணத்துக்குப்பின் இருவரது வாழ்க்கையில் வசந்தம் வீசியதா..? இல்லை புயல் வீசியதா என்பதை இன்றைய இளைஞர்களுக்கு படிப்பினை தரும் வகையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
நாயகன் ஹரீஷ் வெத்துவேட்டு பாத்திரத்திற்கு மொத்த பொருத்தம். ஒருகட்டத்தில் மாளவிகாவை காதலிக்க, திருமணம் செய்ய ஆசைப்படும் ஹரீஷ், அவர் கர்ப்பமாக இருப்பதற்கு தன்னை காரணமாக சுட்டிக்காட்டிய பின்னர் அவர் மீது வெறுப்பை உமிழ்வது, இன்றைய பல இயக்குனர்களின் உண்மையான ‘காதல்’ மனநிலையை காட்டுகிறது.
பச்சை தாவணி அணிந்து வரும் காட்சியில் கிளி என்றே சொல்லும் அளவுக்கு அழகாக இருக்கிறார் மாளவிகா மேனன். நடிப்பும் அதேபோல அழகு தான். இளவரசு, ஆடுகளம் நரேன், தென்னவன், சுஜாதா, மீரா கிருஷ்ணன், ஸ்ரீலட்சுமி கூட்டணியின் நடிப்புதான் படத்திற்கு பலம். கஞ்சா கருப்பு, பிளாக் பாண்டி காமெடி எடுபடவில்லை. தாஜ்நூரின் இசையில் ‘கண்ணான அந்த கண்ண’ என்கிற பாடல் ரிப்பீட் கேட்கும் ரகம்.
சும்மா சுற்றும் இளைஞர்கள் இந்த அளவுக்கு அருவருக்கும் விதமாக நடந்துகொள்வார்களா என்ன..? அதேபோல இடைவேளைக்குப்பின் தனது கர்ப்பத்துக்கு காரணம் யார் என மாளவிகா சொல்லாமல் இருப்பதும், அதைப்பற்றி ஹரீஷ் கேட்காமல் இருப்பதும் வேண்டும் என்றே கதையை ‘ஜவ்’வாக இழுத்திருப்பதை இயக்குனர் மணிபாரதி தவிர்த்திருக்கலாம். பந்தாவிற்காக தேவையில்லாமல் பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் இளைஞர்கள் இந்தப்படத்தை பார்த்து திருந்தினால் சரி தான்.
Comments are closed.