
போலீஸ் வேலை என்பது பொறுப்பு தானே தவிர, அதிகாரம் இல்லை என்பதை சொல்லியிருக்கிறது இந்த ‘எட்டுதிக்கும் மதயானை’.
போலீஸில் வேலைபார்க்கும் சத்யாவின் தந்தை பானுசந்தர் திருநெல்வேலிக்கு ட்ரான்ஸ்பராகி குடும்பத்துடன் வருகிறார். வந்த இடத்தில் லோக்கல் கேபிள் சேனலில் தொகுப்பாளராக இருக்கும் ஸ்ரீமுகியை காதலிக்கிறார் சத்யா. டாஸ்மாக் பாரை லீஸுக்கு நடத்தும் தங்கசாமி, சத்யா தனது இறந்துபோன தம்பியின் நண்பன் என்பதால் அவர்மீது பாசம் காட்டுகிறார்.
இந்தநிலையில் சில மர்மநபர்களால் பானுசந்தர் கொல்லப்பட, வாரிசு அடிப்படையில் சத்யாவுக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது. தொடர்ந்து ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மீதும் கொலை தாக்குதல் முயற்சி நடக்க இருப்பதாக தகவல் வர, விசாரணையில் இறங்குகிறார். தன் தந்தையை கொன்றது யாரென்ற அதிர்ச்சியான உண்மை அவருக்கு தெரியவருகிறது. தன் தந்தையின் சாவுக்கு சத்யா பழி தீர்த்தாரா என்பது க்ளைமாக்ஸ்..
சத்யா நடிக்க முயற்சி செய்தாலும் முகத்தில் எக்ஸ்பிரசன்ஸ் வர மறுப்பது நன்றாகவே தெரிகிறது. சாம் ஆண்டர்சனுடன் சேர்ந்துகொண்டு சுற்றுவது, காதலி பின்னால் அலைவது என வழக்கமான நேரக்கடத்தலை தான் உப்புச்சப்பில்லாமல் சத்யாவும் பண்ணுகிறார். போலீஸ் வேளையில் சேர்ந்தபின்னர் கொஞ்சம் மிடுக்கு கூடுவது உண்மை.
ஸ்ரீமுகி நடிக்க தெரிந்த நல்ல நடிகைதான்.. சிரிக்கும்போது தவிர, குறும்பு செய்யும் இடங்களில் எல்லாம் அழகு முகம் காட்டுகிறார். சாம் ஆண்டர்சனை பல இடங்களில் அவரது ‘ராசாத்தி’ வாரிவிடுவது கலாட்டா. பொறுப்பான தந்தையாக பானுசந்தர், வில்லன் போலீஸாக மிரட்டும் வீரமணி ஆகியோரும் நிறைவுதான். இவர்கள் தவிர முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியின் நடிப்பு அவருக்கு இனி படங்களில் நடிக்கும் வாய்ப்பை தேடி அழைத்துவரும்.
போலீஸார் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, சாமான்யர்கள் நீதி கேட்டு வரும்போது அதை மறுப்பது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என தனது கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமி. இரண்டாம் பாதியில் இருந்த கொஞ்சம் விறுவிறுப்பு, முதல் பாதியில் இருந்திருந்தால் இன்னும் சுவராஸ்யம் கூடியிருக்கும்.
Comments are closed.