
நடிகர்கள் : வினீத் சீனிவாசன், நமீதா பிரமோத், முகேஷ், அஜு வர்கீஸ், ரோகிணி, லட்சுமி, பானு, சௌமியா சதானந்தா மற்றும் பலர்..
படத்தொகுப்பு : ஜான்குட்டி
இசை : ஷான் ரஹ்மான்
ஒளிப்பதிவு : ஜித்து தாமோதர்
கதை, இயக்கம் : அன்வர் சாதிக்
மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி பேசிய புகழ்பெற்ற வசனம் தான் ‘ஓர்மையுண்டோ இ முகம்’ (இந்த முகத்தை ஞாபகம் இருக்கிறதா என அர்த்தம்).. அதை கதைக்கேற்ற பொருத்தமான டைட்டிலாக்கிவிட்டார்கள்..
கதை : ‘கஜினி’ படத்தின் ஒரு பகுதியை எடுத்து, அதை வேறுவிதமான கதைக்களத்தில் புகுத்தியிருக்கிறார்கள்.. அதாவது ஷார்ட் டைம் மெமரி லாஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு காதல் வந்தால்..? கேட்கவே சுவராஸ்யமாக இருக்கிறதல்லவா..?
ஞாபக சக்திக்கான மாத்திரைகள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளர் ரோகிணி.. அவரது மகன் வினீத் சீனிவாசன். ஆனால் நகைமுரன் என்னவென்றால் வினீத்க்கு அவ்வப்போது ஞாபகமறதி வந்துவிடும்.. தனது அண்ணன் மகள் பானுவை இவருக்கு திருமணம் செய்துவைக்க ரோகிணி முடிவு செய்ய, அதை விரும்பாத வினீத் தான் வேறு ஒரு பெண்ணை விரும்புவதாக பொய் சொல்கிறார்..
நிற்க.. இன்னொரு பக்கம், மணலில் அற்புதமான ஓவியம் வரையக்கூடிய திறமை படைத்தவர் நமீதா பிரமோத்.. பெற்றோரை இழந்து தங்கையுடன் வசிக்கும் இவருக்கு ஒரு கார் விபத்தில் ஒருவிதமான ஷார்ட் டைம் மெமரி லாஸ் ஏற்படுகிறது..
அதாவது விபத்திற்கு முன்னாள் அவரது வாழ்க்கையில் நடந்தவை யாவும் ஞாபகத்தில் இருந்து மறையாது. ஆனால் தினசரி நிகழும் சம்பவங்கள் அன்று இரவு வரை மட்டுமே ஞாபகத்தில் இருக்கும்.. இன்று அறிமுகமானவரை நாளை காலை பார்த்தால் நீங்கள் யாரென்று கேட்பார்..? அதனாலேயே ஒரு டைரியில் அன்றாடம் நடந்தவற்றை, எழுதியும் சிலரின் போட்டாக்களை ஒட்டியும் வைத்து மறுநாள் ஞாபகப்படுத்திக்கொள்கிறார்.
இதுபற்றி எதுவும் தெரியாத வினீத், இந்த பெண்ணைத்தான், தான் காதலிப்பதாக அம்மாவிடமும் தன் நண்பன் அஜு வர்கீஸிடமும் பொய் சொல்லிவிடுகிறார். அதேசமயம் அந்த பெண்ணின் பால் ஈர்க்கப்பட்டு அவரை விரும்பவும் தொடங்குகிறார்.. பார்த்த முதல் நாளே அவருடன் ஆழமாக நட்பு கொள்ளும் நமீதா, அன்றைய தினம் முழுவதும் வினீத்துடன் சுற்றுகிறார்.
ஆனால் மறுநாள் தன்னை பார்க்கவரும் வினீத்தை யாரென்று கேட்டு ஷாக் கொடுக்கிறார் நமீதா.. அதன்பின் அவரது தங்கை மூலமாக விபரம் அறியும் வினீத், மீண்டும் நமீதாவை விரட்டி, படிப்படியாக தனது நட்பை அவர் ஞாபக புத்தகத்தில் வைத்துக்கொள்ளுமாறு நண்பனாகி விடுகிறார்.
இந்நிலையில் ரோகிணி தன் மகன் காதலிப்பதாக சொல்லும் நமீதாவைப்பற்றி அறிந்துகொள்ள, தனது மகளின் நிச்சயதார்த்த விழாவை முன்னிட்டு நான்கு நாட்கள் முன்னதாகவே அழைத்து வரச்சொல்கிறார். சில சாக்கு போக்குகளை சொல்லி நமீதாவை அழைத்தும் வந்துவிடுகிறார்கள் வினீத்தும் அவரது நண்பரும்..
நமீதாவின் இந்த குறைபாடு எதையும் அறியாமல், சோதனையாக, இந்த ஐந்து நாட்களில் வரும் விருந்தினர்களை கவனிக்கும் பொறுப்பை நமீதாவிடம் ஒப்படைக்கிறார் ரோகிணி.. வினீத்தின் பாட்டி லட்சுமி தரும் பட்டன் கேமரா உதவியுடன், நான்கு நாட்களும் தினசரி நடந்தவற்றை ரெகார்ட் செய்து பார்த்து, வந்தவர்களை அடையாளப்படுத்தி, நன்கு உபசரித்து ரோகிணியின் மனதில் இடம்பிடிக்கிறார் நமீதா..
எல்லாமே நன்றாக போய்க்கொண்டு இருந்தால் எப்படி..? பிரச்சனையும் வரவேண்டும் தானே..? தன் அம்மாவிடம் நல்லபெயர் வாங்கிவிட்ட நமீதாவை ஜீப்பில் தனியே அழைத்துக்கொண்டு செல்லும் வினீத், அவரிடம் காதலை சொல்ல, நமீதாவும் அதை ஏற்றுக்கொள்கிறார்.. இரவெல்லாம் ஜாலியாக ஜீப்பில் சுற்றிவிட்டு, காலையில் வீட்டுக்குள் நுழைய, அப்போது தான் தூங்கிக்கொண்டிருக்கும் நமீதாவுக்கு விழிப்பு வருகிறது…
வினீத்தை பார்த்து யாரோ தன்னை கடத்திக்கொண்டு வந்துவிட்டதாக கூப்பாடு போட்டு அங்கிருந்து ஆட்டோ பிடித்து தன் வீட்டிற்கு கிளம்புகிறார் நமீதா. இதனால் ரோகிணிக்கும் மற்றவருக்கும் நமீதாவின் குறைபாடு தெரிந்து விடுகிறது. நன்றாக பழகிய என்னிடம் கூட அவளது குறையை சொல்லாமல் மறைத்துவிட்டாளே என குமுறும் ரோகிணி, நமீதாவை திருமணம் செய்தால் வாழ்க்கை இனிக்காது என அறிவுரை சொல்கிறார்..
தனது டைரி மூலம் வினீத் தனது நண்பன் தான் என்று அறிந்து திரும்பி வரும் நமீதாவின் காதில் இது விழ, பிற்பாடு வினீத்தை தனியே அழைத்து தன்னை திருமணம் செய்தால் வினீத்தின் வாழ்வு பாழாகிவிடும் என்றும் தன்னை மறந்துவிடும்படியும் கூறி வினீத்தை பற்றிய பக்கங்களை தனது டைரியில் இருந்து கிழித்தெறிந்துவிட்டு விலகிச்செல்கிறார். இறுதியில் இருவரின் காதல் என்னதான் ஆனது என்பதுதான் க்ளைமாக்ஸ்..
தமிழில் வந்த கஜினி, தீபாவளி, சந்தோஷ் சுப்ரமண்யம் ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸ் செய்து புதுசாக ஒரு ஜூஸ் தயார் செய்திருக்கிறார்கள்.. அனுதாபம் தேடும் காதலன் கேரக்டருக்கு வினீத் சீனிவாசன் நன்றாகவே பொருந்துகிறார்.
ஆனாலும் எந்நேரமும் புன்னகை ததும்ப பாந்தமான முகத்துடன், மறதி நோயுடன் வலம் வரும் நமீதா பிரமோத் தான் நம் மனதை அள்ளுகிறார்.. அவரின் தங்கையாக வரும் பாப் கட்டிங் தலை சௌமியாவும் அசத்துகிறார்.. மோகன்லால், குஞ்சாக்கோ, ஜெயசூர்யா என ஹீரோக்களின் நண்பனாக மாறிவிட்ட அஜு வர்கீஸின் காமெடி இதில் முதலுக்கு மோசமில்லை ரகம் தான்..
டாக்டராக வரும் முகேஷ், அழகான அம்மாவாக ரோகிணி, அட்ராசிட்டி பாட்டியாக அதகளம் பண்ணும் லட்சுமி, முறைப்பெண்ணாக வந்து ஏமாற்றத்தை தழுவும் பானு (தாமிரபரணி பானு தான்) எல்லோருமே சரியான தேர்வு தான்..
ஞாபக மறதி கதைகள் எவ்வளவோ வந்துவிட்டாலும் அதில் ஒரு சிறிய மாற்றத்தை வைத்து படத்தை கலகலப்பாகவும் எதிர்பார்ப்புடனும் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் அன்வர் சாதிக். இது கஜினி மாதிரி இருக்கே என நாம் நினைக்கும்போதே டாக்டர் மூலமாக, இந்த மாதிரி நோய் உள்ளவர்கள் காதலிப்பது சினிமாவில் தான் சாத்தியம் என்று இரண்டு மூன்று ஆங்கிலப்படங்களுடன் கஜினியையும் குறிப்பிட்டு லாஜிக்கை சரி செய்திருக்கிறார். மொத்தத்தில் இரண்டு மணி நேரம் ஜாலியாகவே படம் நகர்வதால் பாஸ்மார்க்கை தாண்டுகிறார் இயக்குனர் அன்வர் சாதிக்.
Comments are closed.