பெருச்சாழி (பெருச்சாளி) – விமர்சனம் (மலையாளம்)

224

நடிகர்கள் : மோகன்லால், முகேஷ், பாபுராஜ், விஜய்பாபு, டெல்லிகணேஷ், ராகினி நந்த்வனி, பூனம் பஜ்வா..

வசனம் : அஜயன் கோபாலன்

இசை : அரோரா

ஒளிப்பதிவு : அரவிந்த் கிருஷ்ணா

கதை, இயக்கம் : அருண் வைத்தியநாதன்

மோகன்லால் படத்துக்கு இப்படி ஒரு தலைப்பா என ஆச்சர்யப்படவேண்டாம்.. கதையில் அதற்கு மோகன்லாலே சரியான காரணம் சொல்லியிருக்கிறார்.. சரி கதைக்கு வருவோம்..

கேரளா மந்திரியான முகேஷுக்கு முல்லை பெரியாறு பிரச்சனையில் எதிர்க்கட்சிகளிடம் இருந்தும், தமிழக அரசிடம் இருந்தும், போதாக்குறைக்கு ஜனங்களிடம் இருந்தும் நெருக்கடி… இந்த இக்கட்டான நிலையில் மோகன்லாலின் உதவியை நாடுகிறார் முகேஷ்.. மோகன்லாலோ அரசியலில் ஒரு ‘ஐடியா’ மணி.. அரசியல்வாதிகளுக்கு ஐடியா கொடுப்பதுதான் அவரது வேலையே.. அவரது ஐடியாவால் முகேஷ் அந்த சிக்கலில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுகிறார்.

இந்த நேரத்தில் அமெரிக்காவில் இருக்கும் முகேஷின் நண்பர் விஜய்பாபு முகேஷிடம் ஒரு உதவியை நாடுகிறார். அதாவது அமெரிக்காவில் உள்ள ஒரு மாகாணத்தில் நடைபெற இருக்கும் கவர்னர் தேர்தலில் தனது முதலாளி போட்டியிடுவதாகவும் அவருக்கு வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் சொல்லி, அதனை அதிகரிப்பதற்கும் தனது முதலாளியை  வெற்றிபெற வைப்பதற்கும் நல்ல ஆலோசகர் யாராவது இருந்தால் அனுப்புங்கள் என சொல்கிறார்.

இங்கே மோகன்லாலின் திறமைக்கு கிடைக்கும் புகழால், பொறாமையில் மனதிற்குள் புழுங்கும் முகேஷ், உள்ளூர் அரசியலுக்குத்தானே இவரது ஐடியாக்கள் செட்டாகிறது, ஆனால் வெளியூர் அரசியலில் அவரது ஐடியா எப்படி செல்லுபடியாகிறது பார்ப்போம் என அவரை மாட்டிவிடும் வகையில் தனது நண்பருக்கு மோகன்லாலை பரிந்துரை செய்கிறார்.

இந்த புராஜெக்டை முடித்துக்கொடுக்க அவருக்கு 30கோடி ரூபாய் சம்பளமாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள மோகன்லால், சிறுவர்களுக்காக ஒரு கிரிக்கெட் அகாடமி ஆரம்பிக்க கோடிகளில் பணம் தேவைப்படுவதால் இதற்கு ஒப்புக்கொள்கிறார். தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தோடும் தனது சகாக்களான பாபுராஜ், அஜூ வர்கீஸ் இருவருடனும் அமெரிக்காவுக்கு பறக்கிறார்.  

வந்திறங்கியது முதல் மோகன்லால் அன் கோவினர் செய்யும் சேட்டைகளால் அவர்களை அவ நம்பிக்கையுடன் பார்க்கிறார் விஜய்பாபு. ஆனால் மோகன்லால் முதலில் சொல்லும் ஒரு திட்டத்தை விஜய்பாபு செயல்படுத்த அதனால் இவர்கள் வேட்பாளருக்கு பொதுமக்களிடம் மதிப்பு ஏறுகிறது..

இப்படி ஒவ்வொரு திட்டமாக கொடுத்து விஜய்பாபுவின் முதலாளி கவர்னர் தேர்தலில் ஜெயிக்க தேவையான செல்வாக்கை மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறார் மோகன்லால். தவிர அந்த வேட்பாளரான முதலாளி ஒரு பெண்ணுடனான பாலியல் விவகாரத்தில் சிக்கிக்கொள்ள, அந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்றி அதிலிருந்தும் அவரை காப்பாற்றுகிறார்.

இடையில் ஊரை சுற்றும் நேரத்தில் ஒரு சிறுவனுக்கு அம்மாவான, கணவன் விட்டுவிட்டுப்போனதால் வறுமைக்காக விபச்சாரத்தில் ஈடுபடும் ராகினி நந்த்வனியுடன் மோகன்லாலுக்கு நட்பு ஏற்பட்டு, பின்னர் அவர்களுக்குள் அதுவே காதலாக மாறுகிறது.  தேர்தல் நெருங்கும் நேரத்தில் தங்களது வேட்பாளருக்குத்தான் வெற்றி கிடைக்கும் என்கிற நிலையில் ஊருக்கு கிளம்ப நினைக்கிறார் மோகன்லால்..

இந்த நேரத்தில் ராகினியின் முன்னாள் கணவன் அவரது குழந்தையை கடத்தி வைத்துகொண்டு, ஆறு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகிறான். அவனுக்கு பணம் கொடுத்து குழந்தையை காப்பாற்றுவதற்காக  தனக்கு சேரவேண்டிய தொகையை விஜய்பாபுவிடம் கேட்கிறார் மோகன்லால். ஆனால் இந்த இடத்தில் தங்களுக்கு சாதகமாக எல்லாமே இருப்பதால் இனி எதற்கு பணம் தரவேண்டும் என நினைத்து மோகன்லாலுக்கு எதிராக திரும்பும் விஜய்பாபுவும் அவரது முதலாளியும் பணம் தர மறுக்கின்றனர்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனது காதலியின் குழந்தையை மோகன்லால் காப்பாற்றினாரா, விஜய்பாபுவின் துரோகத்திற்கு பதிலடி கொடுத்தாரா, கிரிக்கெட் அகாடமி ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு பணம் கிடைத்ததா என்பதற்கு கால்மணி நேர க்ளைமாக்ஸ் பதில் சொல்கிறது..

இதுவரை நாம் பார்த்திராத, அரசியல்வாதிகளுக்கு ஐடியா கொடுக்கும்  புதியதும் புதுமையானதுமான கேரக்டர் மோகன்லாலுக்கு.. அதில் 25% ஆக்ஷன், 75% நகைச்சுவை என தூள்பறத்தி இருக்கிறார் லாலேட்டன். குறிப்பாக அறிமுக காட்சியில் ஸ்கூல் பையன்களுடன் சேர்ந்து கிரிக்கெட் ஆட்டும் காட்சியின் மூலமாகவே ரசிகர்களுக்கு அடுத்தடுத்து எப்படி சரியான தீனி போடப்போகிறோம் என்பதை உணர்த்தி விடுகிறார்.

மக்கள் முல்லை பெரியாறு பிரச்சனையை மறந்து, அவர்களின் கவனத்தை வேறுபக்கம்  திருப்புவதற்காக, சபரிமலைக்கு வருபவர்கள் இருமுடிக்கு வரி செலுத்தவேண்டும் என புதிய பிரச்சனையை கிளப்பி தனது ஐடியாவால்  முகேஷை காப்பற்றுவது,

அமெரிக்காவில் தனது வேட்பாளரை தேர்தலில் ஜெயிக்க வைப்பதற்காக வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் நம்ம ஊர் ஸ்டைலில் பீரும் பீட்சாவும் கொடுக்கச்சொல்வது,

தனது வேட்பாளருக்கு ஓட்டு வங்கி குறைவாக இருக்கும் இடத்தில் இருதரப்பினருக்குள் பிரச்சனையை தூண்டிவிட்டு, அங்கு தனது வேட்பாளரை அனுப்பி அவர்களை சமாதானப்படுத்தs சொல்லி அவரது இமேஜை உயர்த்துவது,

வாக்காளர்களுக்கு இலவசமாக பொருட்கள் கொடுப்பது, கடைசி நேரத்தில் ஓட்டு இயந்திரத்தில் கூட குளறுபடி பண்ணுவது என நம் ஊர் ஐடியாக்களை அப்படியே அங்கே அப்ளை பண்ணும் காட்சிகளில் அப்ளாஸ் அள்ளுகிறார் மோகன்லால். சொல்லப்போனால் பெருச்சாளி செய்யும் வேலைகளையெல்லாம் அவர் அரசியல் களத்தில் பயன்படுத்துவது ஒவ்வொன்றுமே காமெடிதான்..

தான் ஜெஸ்சி எனும் பெண்ணை விரும்பியதாகவும், அவள் இவரை ஒதுக்கி விட்டு ஒரு சினிமா உதவி இயக்குனரை காதலித்ததாகவும் பின்னர் அவனையும் விட்டுவிட்டு வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு போனதாகவும் மோகன்லால் தனது லவ் பெய்லியர் கதையை ராகினியிடம் சொல்லும் காட்சியில் போகிறபோக்கில் நம்ம சிம்புவையும், த்ரிஷாவையும் லைட்டாக வாருவது காமெடி அட்ராசிட்டி..

கூடவே மோகன்லாலின் சகாக்களாக வரும் பாபுராஜூம் அஜூ வர்கீஸும் அமெரிக்காவில் இறங்கியதில் இருந்து அடிக்கும் கூத்துக்களும் சேர்ந்துகொள்ள, நான் ஸ்டாப் கலாட்டாதான் போங்கள். முகேஷின் யாதார்த்தமாக பொறாமைப்படும் நகைச்சுவையான கதாபாத்திரமும் விஜய்பாபுவின் ஜென்டில்மேன் வில்லத்தனமும் நன்றாகவே எடுபடுகின்றன.

விஜய்க்கு ஜோடியாக ‘தலைவா’ படத்தின் பின்பாதியில் நடித்தாரே ராகினி நந்த்வனி.. அவர்தான் இதில் மோகன்லாலை உருகி உருகி காதலிக்க வைக்கிறார். அமெரிக்கப்பெண்ணாக நடித்திருக்கும் அவர் தோற்றத்தை பார்க்கும்போது லாஜிக் சரியாகி விடுகிறது.

படத்தின் முக்கிய பங்கு வசனங்களுக்குத்தான். அந்தவகையில் தியேட்டரில் கிடைக்கும் கைதட்டல்கள் எல்லாம் வசனகர்த்தா அஜயன் கோபாலனுக்குத்தான் சேரும். இடையில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் கதை தொய்வாக நகர்வது போல் தோன்றுகிறதே தவிர, மொத்தப்படத்தின் காமெடியும் நமக்கு தரும் உற்சாகம் அந்த குறையை ஜஸ்ட் லைக் தட் போக்கிவிடுகிறது.

படத்தை வெகு கலகலப்பாக இயக்கியுள்ளார் அருண் வைத்தியநாதன். தமிழ்நாட்டில் சீர்காழியில் பிறந்த தமிழரான இவர் இயக்கிய முதல் படம் தமிழில்.. அதுவும் பிரசன்னா, சினேகா காதலுக்கு அச்சாரம் போட்ட ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் தான். ஒரே படத்தை மட்டுமே இயக்கியுள்ள தமிழரான இவர்மீது இரண்டாவது படமாக தனது படத்தை இயக்க வாய்ப்பு தந்த மோகன்லாலின் நம்பிக்கையை சரியானபடி காப்பாற்றியிருக்கிறார் அருண் வைத்தியநாதன்.

பின் குறிப்பு : படம் ஈகா தியேட்டரில் இரவு 10.30 காட்சியும், பி.வி.ஆரில் காலை, மற்றும் இரவு 10.15 காட்சிகளாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. மலையாளப்படம் தானே என தூரமாகவே நிற்காமல் ஒரு எட்டு போய்த்தான் பாருங்களேன்…

கடந்த இரண்டு மாதங்களாக ‘மிஸ்டர் பிராடு’, ‘கூதரா’ என இரண்டு படங்களில் கொஞ்சம் சறுக்கிய லாலேட்டன் ‘பெருச்சாழி’யின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்திருக்கிறார்.

 

 

Comments are closed.