
மும்பை டான்களான ராஜு பாய்(சூர்யா), சந்துரு(வித்யுத் ஜாம்வால்) இருவரும் நண்பர்கள்.. இவர்களது வளர்ச்சி பிடிக்காத இன்னொரு பெரிய டான் இவர்களை அழைத்து இதற்கு மேல் வளர நினைத்தால் இருவரையும் அழித்துவிடுவேன் என எச்சரிக்கிறார். அதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் தன்பனை சமாதானப்படுத்த, இம்ரான் பாயை கடத்திவந்து அவமானப்படுத்தி அனுப்பி வைக்கிறார் ராஜுபாய்.
இதனால் கோபமான இம்ரான் பாய், ராஜு ஊரில் இல்லாத நேரமாக பார்த்து அவரது ஆட்கள் மூவரை கைக்குள் போட்டுக்கொண்டு சந்துருவை தீர்த்துக்கட்டுகிறார். சூர்யா திரும்பி வந்ததும் அவரையும் அதே துரோகிகளில் ஒருவனின் மூலம் சுட்டு வீழ்த்துகிறார்..
இப்போது தனது அண்ணன் ராஜு என்னவானார் என அறிந்துகொள்ள திருநெல்வேலியில் இருந்து கிளம்பி வருகிறார் அவரது தம்பி கிருஷ்ணா(இவரும் சூர்யா தான்). உண்மையை அவர் கண்டறிந்தாரா..? இம்ரான் பாயையும் துரோகிகளையும் பழிவாங்கினரா என்பதுதான் க்ளைமாக்ஸ்..
இரண்டுவிதமான கேரக்டர்களில் சூர்யா நம்மை ரசிக்க வைத்தாலும், ராஜுபாயாக வித்தியாசமான ஹேர்ஸ்டைலில் அசத்துகிறார்.. நட்புக்கு விசுவாசம் காட்டுவதிலும் ஆக்ஷன் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுவதிலும் காதல் காட்சிகளில் கலாட்டா பண்ணுவதிலும் சூர்யா சூர்யா தான்.
ரவுடியை காதலிக்கும் கமிஷனர் மகளாக சமந்தா.. கிளாமரில் கலக்கோ கலக்கென்று கலக்குக்கிறார்.. வித்யுத் ஜாம்வாலுக்கு இதில் அன்பு நண்பனாக புதிய முகம்.. அழகான பெர்பார்மன்ஸில் அசத்தும் வித்யுத்துக்கு இனி கதாநாயகன் வாய்ப்புகள் கதவை தட்டலாம்.
இம்ரான் பாயாக வரும் மனோஜ் பாஜ்பாய் 1960களில் வந்த வில்லனின் முகத்தை பிரதிபலிக்கிறார். நான்கு காட்சிகளில் வந்தாலும் சூர்யாவை கலாய்க்கும் காட்சிகளில் சூரியின் காமெடி ரசிக்க வைக்கிறது. ஒரு டானுக்கு பக்கபலமான வலதுகையாக ஜில்லா மூலம் புரமோஷன் வாங்கிய ஜோ மல்லூரி இதிலும் அதை தக்கவைக்கிறார்.
சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மும்பை முழுக்க சுழன்றடித்து நம்மை சுற்றுலா அழைத்து செல்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் இயக்குனருக்கு விசுவாசம் காட்டிருக்கிறது அவரது கேமரா. பின்னணியில் மிரட்டும் யுவனின் இசை பாடல்களில் மட்டும் பம்முகிறது.
நட்பு, காதல், ரவுடியிசம் விசுவாசம் என கலந்துகட்டி கதை செய்திருக்கிறார் லிங்குசாமி. படத்தில் சூர்யாவின் ட்விஸ்ட் புதுசு. சூர்யாவுடன் க்ளைமாக்ஸில் நூறு கார்களுக்கு மேல் பங்குபெறும் அந்த காட்சியும் ‘அட’ போட வைக்கிறது. ஆனால் மும்பை கதைக்களமும் ரவுடியிசமும் நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்திருப்பதால் சுவராஸ்யம் கூட்ட மறுக்கின்றன. படத்தின் நீளத்தை வெகுவாக குறைத்து, பாடல் காட்சிகளிலும் கத்திரி போட்டிருந்தால் இன்னும் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
Comments are closed.