
ஒரு பெண்ணும் அவள் வாழ்க்கையில் காதல் மழை தூவச்செய்த நான்கு ஆண்களும் என்கிற ரிவர்ஸ் ஆட்டோகிராப் தான் இந்த சிநேகாவின் காதலர்கள்..
கல்லூரியில் படிக்கும்போது காதலிக்கும் ஒருவன் தனது சுதந்திர வாழ்க்கையில் தேவையில்லாமல் மூக்கை நுழைப்பதால் ஆரம்பத்திலேயே அவனை கட் பண்ணுகிறாள் சிநேகா. அடுத்ததாக சென்னையில் பத்திரிகையில் வேலைபார்க்கும்போது உதவி இயக்குனர் ஒருவருடன் காதல் மலர்கிறது.. ஆனால் அந்த இயக்குனர் தனது படம் காப்பியடிக்கப்பட் மன வேதனையில் சிநேகாவை விட்டும் சினிமாவை விட்டும் ஒதுங்குகிறார்.
ஆதிவாசிகளை பேட்டி எடுக்க கொடைக்கானல் சென்ற இடத்தில் தனக்கு உதவியாக வரும் இளவரசு என்பவர் மீது சிநேகாவுக்கு காதல் தோன்ற, அவரோ இறந்துபோன தனது காதலியின் நினைவாக சிநேகாவின் காதலை ஏற்க மறுக்கிறார்..
இந்நிலையில் சிநேகாவுக்கு அவரது வீட்டில் மாப்பிள்ளை பார்க்க, அந்த மாப்பிள்ளையும் இவரை திருமணம் செய்ய விரும்புகிறார். ஆனால் அதை மறுக்கும் சினேகா அவரை கொடைக்கானல் அழைத்து செல்கிறார்.. இறுதியில் சினேகாவின் காதல் யாருடன் நிறைவடைகிறது என்பதுதான் க்ளைமாக்ஸ்..
கதாநாயகர்களாக வரும் உதய்குமார், ஆதிப்ஜெய், திலக், ரத்தினகுமார் ஆகிய நான்கு புதுமுகங்களில் உதவி இயக்குனராக வருபவர் நம் கவனம் ஏற்கிறார். பாந்தமான அழகுடன் துணிச்சல் பெண்ணாக சிநேகாவாக நடித்திருக்கும் அத்வைதாதான் படத்தின் மிகப்பெரிய பலம். ஒவ்வொரு காதலின்போதும் ஒவ்வொரு வித தோற்றத்தில் மெச்சூர்டாக மிளிர்கிறார்.
பத்திரிகையாளரான முத்துராமலிங்கன் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக மாறியிருக்கிறார். வசனங்களில் தனது வார்த்தை ஜாலத்தை காட்டியிருக்கிறார் முத்துராமலிங்கன். கொடைக்கானல் காட்சிகளில் ஆனந்தின் கேமராவுக்கு நல்ல தீனி.
அத்வைதா தான் மூன்று மாத கர்ப்பம் என்று சொல்வதற்கான காரணம், உதவி இயக்குனரின் கட்டுரை வெளியானதாக சொன்ன ஒரு மாதத்தில் அவரது கதையை வேறு ஒருவர் படமாக்கி அது திரைக்கு வந்துவிடுவதாக காட்டும் இடத்தில் கால அளவில் விடப்பட்ட ஓட்டை, வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றும் இளவரசன் சம்பந்தப்பட்ட எபிசோட் ஆகியவை பல கேள்விகளை நமக்குள் எழுப்பினாலும் இந்த சினேகாவின் காதல் முகம் சுழிக்காமல் நம்மை ரசிக்க வைக்கிறது.
Comments are closed.