
மறைந்த மலையாள குணச்சித்திர நடிகரான திலகனின் பிறந்த நாளை(ஜூலை-15) முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறை பதிவுசெய்யும் விதமாக எழுதப்பட்டதான் இந்த கட்டுரை..
திலகனை ஒரு பிறவிக் கலைஞன் என்று சொன்னால் அது உண்மையின் இன்னொரு வார்த்தையாகத்தான் இருக்கும். காரணம் நடிப்புதான் தனது வாழ்க்கை என படிக்கிற காலத்திலேயே தன்னை உருமாற்றிக் கொண்ட ஒரு மாபெரும் கலைஞன். சட்டென்று தன் உடல்மொழியை, ஆளுமையை, நடிப்பை, குரலை மாற்றி முற்றிலும் ஒரு புதிய ஆளுமையக் கொண்டு ஒரு ரசவாதத்தை நிகழ்த்தி விடக்கூடிய அற்புதமான நடிகர் திலகன்.
1935ம் ஆண்டு கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள அயிரூர் கிராமத்தில் பிறந்தவர் திலகன். அவருக்குள் நடிகனாக வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது சிறுவயதில் அவர் பார்த்த ஜூலியஸ் சீஸர் நாடகம் தான். ஆரம்பகாலத்தில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய திலகன் 1972ம் ஆண்டு கந்தர்வசேத்ரம் என்கிற படத்தில் அறிமுகமானார்.
இந்தப்படத்தில் மிகச்சிறிய வேடத்தில் தோன்றிய திலகனை பெரிதாக யாரும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவரை முன்னிலைப்படுத்திய திரைப்படம் 1979ல் கே.ஜி.ஜார்ஜின் இயக்கத்தில் வெளிவந்த உள்கடல். அதன் பிறகு திலகன் என்ற நடிகன் மக்களின் மனதை மெல்ல ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். 1981ல் யவனிகா திரைப்படத்துக்காக திலகன் தனது முதல் மாநில விருதை பெற்றார். திலகனின் நடிப்பின் நுட்பங்களை க்ரீடம் மற்றும் செங்கோல் ஆகிய இரு படங்களிலும் நாம் அனுபவிக்கலாம்.
தந்தையாக திலகன் நடித்த கதாபாத்திரங்கள்தான் கணக்கில் அடங்காதவை. மம்முட்டி, மோகன்லாலில் தொடங்கி தற்போது பிருத்விராஜ் வரை அத்தனை ஹீரோக்களுக்கும் அப்பாவாக நடித்து கேரளாவில் பெரும் புகழ் பெற்றவர். அதில் மறக்க முடியாத ஒன்றுதான் ஸ்படிகம் படத்தில் மோகன்லாலின் தந்தையாக இடம்பெற்ற கணக்கு வாத்தியார் வேடம். மகனை தவறாக புரிந்துகொண்டு அதனால்தான் அவன் ரவுடியாக மாறினான் என்று புரியாமல் மகனை எதிரியாகவே பாவிக்கும் தந்தையாக மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் திலகன். சில வருடங்களுக்கு முன்பு அந்த படம் வீராப்பு என்று ரீமேக் செய்யப்பட்டபோது பிரகாஷ்ராஜ் ஏற்றிருந்தாரே அந்த வேடம்தான். வாய்ப்பு கிடைத்தால் ஸ்படிகம் படத்தை ஒருமுறையேனும் பார்த்துவிடுங்கள்.
அதேபோல திலகன் நடித்த திரைப்படங்களில் ‘க்ரீடம்’ ஒரு மைல்கல். இப்படி ஒரு அப்பா நமக்கு இருக்கக்கூடாதா என்று ஒவ்வொரு மகனையும் ஏங்கவைக்கும் நடிப்பு. ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக கூடுவிட்டு கூடு பாய்வதில் திலகன் அசகாயசூரர். தனக்கென உடல் மொழியையோ, மேனரிஸங்களையோ அவர் உருவாக்கிக் கொண்டதில்லை. கதாபாத்திரம் எதை கேட்கிறதோ அதை மட்டுமே பிரதிபலித்தவர் திலகன்.
எண்பதுகளின் இறுதியில் சினிமாவில் வில்லன்கள் புதுப்பரிமாணம் பெற்றார்கள். மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் ஒயிட் அண்ட் ஒயிட் ஜெண்டில்மேன் வில்லன்களை உருவாக்கத் தொடங்கினார்கள். ‘சத்ரியன்’ இன்றுவரை நினைவுகூறப்படுவதற்கு, விஜயகாந்தின் போலீஸ் கம்பீரத்தோடு, அண்ணாச்சி அருமை நாயகமாக நடித்த திலகனின் அலட்டிக்கொள்ளாத நடிப்பும் “நீ மறுபடியும் வரணும் பன்னீர்செல்வம்.. பழைய ஐ.பி.எஸ். பன்னீர்செல்வமா வரணும்” என்ற அவரது தனித்துவமான குரலும்தான் காரணம். கடந்த இருபது ஆண்டு காலத்தில் அவரது தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த வித்தியாசமும் ஏற்பட்டதாகவே தெரியவில்லை. 1991ல் எப்படி இருந்தாரோ அப்படியே 2011லும் இருந்தார்.
திலகன் இயல்பிலேயே கம்யூனிஸ சிந்தனைகளில் ஊறிப்போனவர் என்பதால், அவ்வப்போது மலையாள திரையுலகின் போக்கை அப்பட்டமாக கண்டித்து தன்னுடைய இடத்தை தானே அடுத்தடுத்து சிக்கலாக்கிக் கொண்டவர். ஒரு கட்டத்தில் மலையாள திரையுலகமே இவருக்கு எதிராக நின்றபோதும் கூட, ரசிகர்கள் இவரை கைவிடவில்லை.
கேரளாவில் சமீபத்தில் கமல்ஹாசனின் நடிப்பை பாராட்டி அவருக்கு ஒரு விழா எடுக்கப்பட்டது. அதற்கு மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும்,கேரளாவிலே சிறந்த நடிகர்கள் இத்தனை பேர் இருக்கும் போது தமிழ்நாட்டு நடிகர் ஒருவருக்கு பாராட்டு விழாவா என்று கூறி பலர் விழாவை புறக்கணித்தனர்.
ஆனால் திலகன் தைரியமாக அந்த விழாவில் கலந்துகொண்டார். இதனால் மலையாள திரைப்பட சங்கம் அவரை ஒதுக்கி வைத்தது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படவில்லை.. அதே சமயம் இயக்குனர்கள் தங்கள் படங்களுக்கு திலகனை ஒப்பந்தம் செய்வதும் நிற்கவில்லை.
தரவாட்டு நாயராக, ஜாதீய வெறிபிடித்த நம்பூதிரியாக, சிரியன் கிறிஸ்துவராக, மலப்புரம் முஸ்லீமாக, மன்னனாக, தாழ்த்தப்பட்டவனாக, கொள்ளைக்கும்பலின் கொடூரமான தலைவனாக, புரட்சிக்காரனாக, மந்திரவாதியாக, தச்சனாக, அப்பாவி தந்தையாக, ஏமாற்றுக்காரனாக என மலையாள சமூக வாழ்வின் அத்தனை தளங்களிலும் அவர் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கிளிப்பேச்சு கேட்கவா, ஆயுதபூஜை, மேட்டுக்குடி போன்ற தமிழ் படங்களில் அவரது நடிப்பு அசாத்தியமானது. கிளிப்பேச்சு கேட்கவா படத்தில் வெறுப்படைந்த அப்பாவாக நடிக்கும் இடங்களும், ஆயுதபூஜையில் ஒருகை இழந்த வில்லனாக அவர் செய்யும் வில்லத்தனங்களும் மறக்கவே முடியவில்லை.
ஆனால் திலகனை தமிழ் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. வசனத்திலும், தோற்றத்திலும் அப்பட்டமாக அடித்த மலையாளவாடை இதற்கு காரணமாக இருக்கலாம். இவருக்குப் பிறகு தமிழுக்கு அறிமுகமான கொச்சின் ஹனீபா, ராஜன் பி.தேவ், போன்றவர்கள் பெரிய ரவுண்டு அடித்தார்கள்.
இவர் நடித்த மலையாள படங்களில் ரிதுபேதம், ஏகாந்தம், பெருந்தச்சன், சந்தனகோபாலம், காட்டதொரு பெண்பூவு வரவேல்பு, மதிலுகள், மணிச்சித்திரதாழ், வீண்டும் சில வீட்டுகாரியங்கள், சந்தேஷம், பவித்ரம், சிந்தாமணி கொலகேஸ், பழசிராஜா போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்றன. கடந்த வருடம் இவர் இந்தியன் ருபீ என்கிற படத்தில் கணக்கியல் வல்லுனராக அற்புதமாக நடித்திருந்தார்.
இந்த வருடமே அவர் நடித்த எட்டு படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் மூன்று நான்கு படங்கள் வெளியாகவிருக்கின்றன. இவர் பலமுறை சிறந்த துணை நடிகருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டார். இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள திலகன், 2முறை தேசிய விருதும், 9முறை கேரள மாநில அரசு விருது, 2முறை பிலிம்பேர் விருதும் உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். மேலும் திரைத்துறையில் இவரது சேவையை பாராட்டி கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது திலகனின் உடல்நிலை குறித்து மோசமான செய்திகள் வரும். அவ்வளவுதான், முடிந்தது அவரது மூச்சு என்றெல்லாம் கேள்விப்படும்போது, மீண்டும் பீனிக்ஸ் பறவையாய் எழுந்துவந்து மேக்கப்போடு படப்பிடிப்புத் தளத்தில் நிற்பார். இதய நோயோடு மிகக்கடுமையாக அவர் போராடிக்கொண்டிருந்த கடைசி காலக்கட்டதிலும்கூட முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, நடிகனுக்குரிய கடமையை நிறைவு செய்தார் திலகன்.
மலையாள சினிமாவின் குணச்சித்திர நடிகர்ளின் பட்டியலில் முரளி, கொச்சின் ஹனீபா, ராஜன்.பி.தேவை தொடர்ந்து திலகனின் மறைவும் தென்னிந்திய சினிமாவுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான்.
குரூர பார்வைக்கு கிடைத்த தேசியவிருது
பெரும்பாலும் அனைத்து இயக்குனர்களும் தங்கள் படங்களில் திலகன் நடிக்கும் கதாபாத்திரத்தின் தன்மையை சொல்லிவிட்டு ஒதுங்கி கொள்வார்கள். காரணம் திலகன் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழியால் அந்த இயக்குனர்கள் விரும்பியதை விட சிறப்பாக செய்து கொடுப்பார். அப்படித்தான் 1987ஆம் வருடம் ஒருமுறை பிரதாப் போத்தன் இயக்கிய ரிதுபேதம் படத்தில் ஒரு காட்சியின்போது ஒரு குரூரமான ‘லுக்’ ஒன்றை கொடுத்த்தை இயக்குனர் கவனிக்கவில்லை.. ரஷ் பார்க்கும்போது அவராகவே சொன்னதும்தான் பிரதாப் போத்தனுக்கே தெரிந்திருக்கிறது. ஆனால் அந்த படத்தில்தான் முதன்முதலாக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது திலகனுக்கு கிடைத்தது. அதன்பிறகு இரண்டாம் முறையாக ஏகாந்தம் என்ற படத்தில் சிறந்த நடிகருக்கான(சிறப்பு ஜூரி) தேசிய விருது கிடைத்தது.
சாணக்யன்..! சத்ரியன்…!
மலையாளத்தில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ள திலகன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் மற்றும் கமலுடன் தலா ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்திருக்கிறார். 1990ல் அண்ணாச்சி அருமை நாயகமாக அவர் சத்ரியன் மூலம் தமிழுக்கு வருவதற்கு முன்னரே, 1989ஆம் வருடம் கமலுடன் சாணக்யன் என்ற படத்தில் நடித்திருந்தார். அதேபோல 1997ல் பிரியதர்ஷன் எழுதி பிரதாப் போத்தன் இயக்கிய ஒரு யாத்ராமொழி என்ற மலையாள படத்தில் நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து நடித்தார் திலகன். இரண்டு காட்சிகளே வந்தாலும் திலகனே நடிக்கவேண்டும் என்று சிவாஜியும் மோகன்லாலும் இயக்குனர் பிரதாப் போத்தனிடம் வலியுறுத்தினார்களாம்.
சின்னமனூர் விஜயகுமார்
Comments are closed.