நடிகர்கள் : ரங்கராஜ், ஸ்ருதி நாராயணன், அனு, டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா, அறந்தாங்கி நிஷா
இசை : ஜோஷ் ஃபிராங்ளின்
ஒளிப்பதிவு : மனோஜ்
இயக்கம் : ரங்கராஜ்
தயாரிப்பு : ஜெயபாரதி ரங்கராஜ்
நாயகன் ரங்கராஜ் பிறக்கும் போது அவரது தந்தை மர்ம நபர்களால் கொலை செய்யப்படுகிறார். அவர் வளரும் போது அவரது தாயும் கொலை செய்யப்படுகிறார். சிறு வயதில் தாய், தந்தையை இழந்த நாயகன் படித்து போலீஸ் இன்ஸ்பெக்டராகிறார். மனைவி, ஒரு பெண் குழந்தை என மகிழ்ச்சியாக வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது, அவரது மனைவி கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். மனைவியின் மரணத்திற்குப் பிறகு தன்னை தானே அழித்துக் கொண்டு வாழும் நாயகனுக்கு, அவரது மனைவியை கொலை செய்தது யார்? என்ற உண்மை தெரிய வருகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? அவரது மனைவி எதற்காக கொலை செய்யப்பட்டார்?, கொலை செய்தது யார்? ஆகிய கேள்விகளுக்கான பதிலை, நாயகனின் தந்தை கொலையின் பின்னணியோடு சேர்த்து சொல்வது தான் ‘கட்ஸ்’.
விவசாயி பெத்தனசாமி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் கதாபாத்திரங்களில், அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் அறிமுக நடிகர் ரங்கராஜ், காதல், ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்து ஏரியாவிலும் சிக்சர் அடித்து அசத்தியிருக்கிறார். முதல் படத்திலேயே இரட்டை வேடங்களில் நடித்திருப்பதோடு, பலவிதமான கெட்டப்புகளோடு, நடிப்பிலும் வேறுபாட்டை காண்பித்து நடித்திருக்கும் ரங்கராஜின் நடிப்பு ஆர்வம் மற்றும் உழைப்புக்காகவே தனியாக பாராட்டலாம்.
அப்பா கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ருதி நாராயணன், கிராமத்து பெண்மணியாக தனது பணியை நிறைவாக செய்திருக்கிறார். மகன் கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நான்ஸியின் நடிப்பிலும் குறையில்லை.
மூத்த காவலராக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும் வயது முதிர்வும், அவர் முடியாமல் நடித்ததும் தெரிகிறது.
குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் சாய் தீனா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பிர்லா போஸ், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் காவலராக நடித்திருக்கும் அரந்தாங்கி நிஷா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அளவாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் கதைக்களத்திற்கு ஏற்றவாறும், பட்ஜெட்டுக்கு ஏற்றவாறும் பணியாற்றியிருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜோஸ் பிராங்கிளின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
அப்பா மற்றும் மகன் இருவரது வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று இரண்டு கதைகள் இருந்தாலும், அவற்றை சரியான முறையில் படத்தொகுப்பாளர் ரஞ்சித் தொகுத்திருந்தாலும், திரைக்கதையை சற்று வேகமாக பயணிக்க வைத்திருக்கலாம்.
அப்பா – மகன் கதையில், அப்பா – மகள் செண்டிமெண்ட், ஆதரவற்றவர்கள் தங்களைப் போன்ற ஆதரவற்றவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும், என்ற கருத்தை அழுத்தமாக சொன்ன விதம், விவசாயத்தை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் தொழிற்சாலைகளின் ஆபத்து என சமூகத்திற்கான ஒரு கதையை, கமர்ஷியல் திரைக்கதை மூலம் அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரங்கராஜ்.
நாயகனாக நடித்திருப்பதோடு, படத்தை எழுதி இயக்கவும் செய்திருக்கும் ரங்கராஜ், ஒரு நடிகராக தனது திறமையை நிரூபித்திருந்தாலும், இயக்குநராக சில தடுமாற்றங்களை எதிர்கொண்டிருப்பது திரையில் சில இடங்களில் தெரிகிறது. இருந்தாலும், பொருளாதார ரீதியிலான இத்தகைய சிறிய குறைபாடுகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், இந்த ‘கட்ஸ்’ பார்வையாளர்களை நிச்சயம் கவரும்.
ரேட்டிங் 3/5
Comments are closed.