நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : கோகுல பினாய்
இயக்கம் : கமல் பிரகாஷ்
தயாரிப்பு : ஜீ ஸ்டுடியோஸ், பேர்லல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் – ஜி.வி.பிரகாஷ் குமார், உமேஷ் கே.ஆர்.பன்சால், பவானி ஸ்ரீ
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தயாரிப்பு மற்றும் நடிப்பில், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘கிங்ஸ்டன்’ ரசிகர்கள் மனதில் நங்கூரமாக நிற்கிறதா அல்லது விட்டால் போதும் என்று ஓட வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.
அதன்படி, மர்மம் சூழ்ந்த அந்த கடலுக்குள் சென்று பிரச்சனையை தீர்க்க நினைப்பவர், தனது நண்பர்களுடன் கடலுக்குள் செல்ல, அவர் உயிருடன் திரும்பினாரா ? அல்லது ஊர் நம்புவது போல் பிணமாக திரும்பினாரா ? என்பதை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘கிங்ஸ்டன்’.
மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் எந்தவித மாற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை என்றாலும் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், ஆனால் அனைத்தும் கிரீன் மேட் மூலம் கொண்டு வர வேண்டும் என்பதால், அவரது முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றாலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் படத்தின் உள்ள திருப்பங்களை சுவாரஸ்யமாக சொல்லி கதையில் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறார். ஆனால், பலம் இல்லாத திரைக்கதையால் அவ்வபோது படம் சலிப்படைய செய்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் பலமான திரைக்கதை இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் ரசிகர்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல், படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்த வண்ணம் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் ஆகியவை படத்தை ரசிக்க வைத்தாலும், அழுத்தமான கதையும், கதைக்களத்தில் பிரமாண்டமும் இல்லாதது படத்தை பலவீனப்படுத்தியிருக்கிறது.
ரேட்டிங் 2.5/5
Comments are closed.