’லைன்மேன்’ விமர்சனம்

156

நடிகர்கள் : சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன்
இசை : தீபக் நந்தகுமார்
ஒளிப்பதிவு : விஷ்ணு கே.ராஜா
இயக்கம் : எம்.உதய்குமார்
தயாரிப்பு : சூர்ய நாராயணன்

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி, ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியிருக்கும் ’லைட்மேன்’ திரைப்படம் மக்களை உலுக்கி எடுக்கிறதா? அல்லது உட்காரவே முடியவில்லை என்று புலம்ப வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள உப்பளம் மின் மையத்தில் லைன்மேனாக சார்லி பணியாற்றி வருகிறார். மின் பொறியியல் பட்டதாரியான சார்லியின் மகன் ஜெகன் பாலாஜி, தனது கண்டுபிடிப்புகள் மூலம் எளிய மக்களுக்கு உதவ நினைக்கிறார். அதற்காக மின் விளக்குகளை ஆன் மற்றும் ஆஃப் செய்வதற்கான தானியங்கி கருவி ஒன்றை அவர் உருவாக்குகிறார். அதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக முயற்சிக்கும் அவருக்கு செல்லும் இடம் எல்லாம் தோல்வி மட்டுமே கிடைக்க, துவண்டு போகாமல் தொடர்ந்து பயணிக்கிறார். ஆனால், முதலாளிகள் மூலமாக அவரது கண்டுபிடிக்கு எதிராக சில சதி வேலைகள் நடக்க, அந்த சதிகளில் இருந்து மீண்டு தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘லைன்மேன்’.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் ஒரு எளிய மனிதர் தனது புதிய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு எத்தகைய இன்னல்களை எதிர்கொள்கிறார் என்பதையும், உப்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் முதலாலித்துவத்தால் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதையும் சிறு சினிமாத்தனத்தோடு சொல்லியிருந்தாலும், அதை மிக சிறப்பாகவே செய்திருக்கிறது.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதியவர் என்றாலும், தனது நடிப்பின் மூலம் உண்மை சம்பவத்தின் வலியை தனது நடிப்பின் மூலம் நேர்த்தியாக பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்.

ஜெகன் பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் சார்லி, தனது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு அடையாளமாக பயணித்திருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அதிதி பாலன் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரது திரை இருப்பு படத்திற்கு கூடுதல் பலம். நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், உப்பளத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர்களை பிரதிபலித்திருக்கிறார். மேலும் பல கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மண்ணின் மைந்தர்களாக பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தீபக் நந்தகுமார், ஒளிப்பதிவாளர் விஷ்ணு கே.ராஜா, படத்தொகுப்பாளர் ஏ.ஆர்.சிவராஜ், கலை இயக்குநர் லோகநாதன் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் உப்பளம் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது வலியையும், அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு எளிய விஞ்ஞானியின் போராட்டத்தையும் திரைப்பட மொழியில் சிறப்பாக சொல்வதற்கு இயக்குநர் எம்.உதய்குமாருக்கு உறுதுணையாக பயணித்திருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட மனிதரின் போராட்டத்தை எதார்த்தமாக சொல்வதோடு, அதை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான திரை மொழியில் சொல்வதற்காக சில கமர்ஷியல் விசயங்களுடன் திரைக்கதை அமைத்து பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டும் இன்றி, வாழ்க்கையில் இத்தகைய போராட்டங்களுடன் பயணிக்கும் இளைஞர்களுக்கு இந்த ‘லைன்மேன்’ மூலம் நம்பிக்கை என்ற வெளிச்சத்தை காட்டியிருக்கிறார் இயக்குநர் எம்.உதய்குமார்

ரேட்டிங் 3.5/5

Comments are closed.