நடிகர்கள் : பாரதிராஜா, ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, சுசீந்திரன், அப்புக்குட்டி, நக்ஷா சரன்
இசை : இளையராஜா
ஒளிப்பதிவு : வாஞ்சிநாதன் முருகேசன்
இயக்கம் : மனோஜ் கே.பாரதிராஜா
தயாரிப்பு : சுசீந்திரன்
இயக்குநர் சுசீந்திரன் கதை, தயாரிப்பில், மனோஜ் கே.பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘மார்கழி திங்கள்’. பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்க, அறிமுக நடிகர் ஷ்யாம் செல்வன் மற்றும் அறிமுக நடிகை ரக்ஷனா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
பள்ளி மாணவர்களான நாயகன் ஷ்யாம் செல்வன், நாயகி ரக்ஷனா ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். முதல் மதிப்பெண் எடுப்பதில் இருவருக்கும் கடுமையான போட்டி நிலவே அந்த போட்டியே ஒரு கட்டத்தில் இருவர் மனதிலும் காதல் மலர செய்கிறது. பள்ளி படிப்பு முடிந்தவுடன் தனது காதல் பற்றி தாத்தா பாரதிராஜாவிடம் ரக்ஷனா சொல்கிறார். பேத்தியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாலும், கல்லூரி படிப்பு முடிந்த பிறகு தான் மற்ற விசயங்கள், அதுவரை ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனை போடுகிறார். அதன்படி, இருவரும் வெவ்வேறு கல்லூரியில் படிக்க செல்ல, அவர்களுடைய படிப்பும், காதலும் என்னவானது? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் ஷ்யாம் செல்வன் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ரக்ஷனா இருவரும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
நாயகன் ஷ்யாம் செல்வன், பக்கத்து வீட்டு பையன் போல் மிக எளிமையாகவும், எதார்த்தமாகவும் நடித்திருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்.
நாயகி ரக்ஷனா, காதல் காட்சிகளிலும், தனது காதலை தாத்தாவிடம் சொல்லும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். காதலுக்காக தாத்தா போடும் நிபந்தனையை ஏற்று நடப்பவர், தனது காதலுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு எதிராக செயல்படும் காட்சிகள் மிரட்டல்.
நாயகியின் தாத்தாவாக நடித்திருக்கும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு மட்டும் அல்ல அவரது நடிப்புக்கும் வயதாகிவிட்டது பளிச்சென்று தெரிகிறது. அதிலும் சில இடங்களில் முடியாதவரை வம்பு பண்ணி நடிக்க வைத்தது போல் இருக்கிறது. இருந்தாலும், பல இடங்களில் தனது நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
நாயகியின் தாய்மாமனாக நடித்திருக்கும் இயக்குநர் சுசீந்திரன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, மிடுக்கான நடிப்பால் மிரட்டவும் செய்கிறார்.
இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காதல் கதைக்கு ஏற்றபடி மென்மையாகவும், இனிமையாகவும் பயணித்திருக்கிறது.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவில் கதைக்களம் அழகாகவும், கதாபாத்திரங்களின் உணர்வுகள் அழுத்தமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.
சுசீந்திரனின் எளிமையான காதல் கதையை ஆணவப் படுகொலை சம்பவம் மூலம் வலிமையானதாக சொல்லியிருக்கும் இயக்குநர் மனோஜ் கே.பாரதிராஜா, அழகான காதல் கதையை அழுத்தமாகவும் கொடுத்து கவனம் ஈர்க்கிறார்.
பள்ளி பருவத்தில் வரும் காதலை, கிராமத்து பின்னணியில் இயல்பாக சொல்லியிருக்கும் இயக்குநர் கதையை சாதரணமாக நகர்த்தினாலும் காட்சிகளை ரசிக்கும்படி கையாண்டிருக்கிறார். இரண்டாம் பாதியில் வரும் திருப்பம் எதிர்பார்க்காத ஒன்றாக இருப்பதோடு, படத்தை விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறது.
காதல் கதையை வழக்கமான பாணியில் நகர்த்தினாலும் இயக்குநர் மனோஜ் கே.பாரதிராஜா, அதை புதிய பாதையில் பயணிக்க வைத்து பார்வையாளர்கள் ரசிக்கும்படியான படமாக கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.