நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், ஆடுகளம் நரேன், பிரவீனா, எஸ்தர் அனில், சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா
இசை : எலன் செபஸ்டியன்
ஒளிப்பதிவு : சிவா பிரபு
இயக்கம் : அமுதவாணன்
தயாரிப்பு : டீம் ஏ வெஞ்சர்ஸ்
Team A Ventures தயாரிப்பில், அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ’V3’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
வீடு வீடாக பேப்பர் போடும் வேலை செய்து வரும் நரேனுக்கு இரண்டு பெண்கள். இரண்டு பேரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைக்கிறார். இதற்கிடையே முத்த மகள் பிரவீனாவை சிலர் கற்பழித்து எரித்துவிட்டதாக காவல்துறையிடம் இருந்து நரேனுக்கு தகவல் வருகிறது. சம்பவ இடத்திற்கு சென்று எரித்த நிலையில் இருக்கும் பெண் உடல் தனது மகள் தான் என்று நரேன் அடையாளம் காட்டுகிறார். இதற்கிடையே, இந்த சம்பவத்தால் நாட்டில் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்ட, குற்றவாளிகளை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று அரசு காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கிறது.
இதனை தொடர்ந்து கற்பழிப்புக்கு காரணமானவர்கள் என்று ஐந்து இளைஞர்களை கைது செய்யும் காவல்துறை, அவர்களை என்கவுண்டர் செய்துவிடுகிறது. அவர்களது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் உடல்களை கேட்கிறார்கள். ஆனால், காவல்துறை கொடுக்க மறுக்கிறது. இதையடுத்து போராட்டம் வெடிக்க, இந்த வழக்கு மனித உரிமை ஆணைய அதிகாரி வரலட்சுமி சரத்குமார் கைக்கு போகிறது.
கற்பழிப்பு வழக்கு மற்றும் என்கவுண்டர் சம்பவம் இரண்டையும் விசாரிக்கும் வரலட்சுமி சரத்குமார், பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார். அது என்ன? என்பது தான் ‘V3’ படத்தின் கதை.
மனித உரிமை அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், கதாபாத்திரத்திற்கு ஏற்ற கம்பீரத்தை நடிப்பில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறைவான வசனங்கள் பேசி அமைதியாக நடித்தாலும், அவருடைய கண்களும், உடல் மொழியும் பல விஷயங்களை மிக அழுத்தமாக பதிவு செய்கிறது.
விந்தியா என்ற வேடத்தில் நடித்திருக்கும் பிரவீனா, தனது நிலைக்கு காரணமான மிருகங்களை “அண்ணன்கள்” என்று கூறி தனது கோபத்தை வெளிப்படுத்தும் இடம், பாலியால் பலாத்கார கொடுமைக்கு ஆளான அனைத்து பெண்களின் குரலாக ஒலிக்கிறது.
விந்தியாவின் தங்கை வேடத்தில் நடித்திருக்கும் எஸ்தர் அனில், பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற சமூகம் பற்றி கேட்கும் கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கிறது.
விந்தியாவின் தந்தையாக நடித்திருக்கும் ஆடுகளம் நரேன், நடுத்தர குடும்பத்து தந்தையாக அனுபவமான நடிப்பு மூலம் கவனிக்க வைத்திருக்கிறார்.
மற்ற வேடங்களில் நடித்திருக்கும் சந்திரகுமார், பொன்முடி, ஜெய்குமார், ஷீபா என அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
லைவ் லொக்கேஷன்களில், கிடைத்த வெளிச்சத்தில் மிக நேர்த்தியாக காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் சிவா பிரபு, கதைக்கு ஏற்ப கச்சிதமாக காட்சிகளை கையாண்டுள்ளார்.
இசையமைப்பாளர் எலன் செபஸ்டியன் இசை கதாபாத்திரங்களின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களின் குரலாக ஒலிக்கும் வகையில் கதை எழுதி இயக்கியிருக்கும் அமுதவாணன், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதை விட, இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கான தீர்வையும் சொல்லியிருக்கிறார்.
காவல்துறையின் என்கவுண்டர் சம்பவங்களுக்கு பின்னணியில் இருக்கும் அரசியல், அந்த அரசியலால் பாதிக்கப்படும் அப்பாவிகள், குற்ற செயல்களிலும் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள் என்று பல விஷயங்களை மிக தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் அமுதவாணன், பெண்கள் பாதுகாப்பு குறித்து கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் சாட்டையடியாக இருக்கிறது.
கற்பழிப்பு சம்பவங்களை வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், அச்சம்பவத்தை சுற்றி நடக்கும் பல கசப்பான சம்பவங்களையும், அரசியலையும் மிக இயல்பாக சொல்லியிருப்பதோடு, சுவாரஸ்யமான திரைப்படமாகவும் கொடுத்ததில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார்.
ரேட்டிங் 4/5
Comments are closed.