முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தை ஈர்த்த சூர்யாவின் ‘ஜெய் பீம்’!

195

mks-jai-bhim
2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஜோதிகா மற்றும் சூர்யா தயாரித்திருக்கும் படம் ‘ஜெய் பீம்’. சூர்யா முதல் முறையாக வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கியிருக்கிறார். பிரகாஷ்ராஜ், மணிகண்டன், லிஜிமோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி அனைத்து மொழிகளிலும் பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் இப்படத்தை திரையுலக பிரபலங்கள் மட்டும் இன்றி அரசியல் உள்ளிட்ட அனைத்து துறையை சார்ந்த பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.

அதன்படி, ‘ஜெய் பீம்’ படத்தை பார்த்து பாராட்டியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ”பார்வையாளர்களின் மனதில் தாக்கத்தையும், அதன் விளைவாக சமூகத்தில் நல்லதொரு மாற்றத்தையும் ஏற்படுத்துவது தான் சிறந்ததொரு கலைப்படைப்பு. நேற்று நண்பர் சூர்யா வழக்கறிஞர் சந்துருவாக வாழ்ந்துள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படத்தை பார்த்தேன். அத்திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம்.” என்று பாராட்டியுள்ளார்.

படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், “’ஜெய்பீம்’பார்த்தேன். கண்கள் குளமானது. பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் த.செ.ஞானவேல். பொது சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த சூர்யா, ஜோதிகா மற்றும் பட குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டுள்ள பதிவில், “சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே, இதோ மறைக்கப்பட்ட.. மறுக்கப்பட்ட.. ராஜாகண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும். அது நம் தலை முறையை மாற்றும். ’ஜெய் பீம்’ திரைப்படத்தை கொடுத்த திரு சூர்யா, இயக்குநர் த.செ.ஞானவேல், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு பெரும் நன்றிகள்!” என்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் மட்டுமல்லாமல் படத்தை பார்வையிடும் ஒவ்வொரு பார்வையாளர்களும், ராஜாக்கண்ணு – செங்கேணி தம்பதிகள் மீது காவல் துறையினர் ஏவிய அதிகார துஷ்பிரயோகத்தை, சந்துரு போன்ற உண்மையை மட்டும் ஆதாரமாக நம்பும் வழக்கறிஞர்கள், சட்டத்தின் உதவியுடன் போராடி, அவர்களுக்கு நியாயமும், நிவாரணமும் கிடைக்கச் செய்ததைக் கண்டு, தங்களை மறந்து கரவொலி எழுப்பி வாழ்த்து தெரிவிப்பதும் தொடர்கிறது.

Comments are closed.