வல்லினம் – விமர்சனம்

248


இரவு ஒரு மணி.. இரண்டாம் ஆட்டம் விட்டு ரசிகர்கள் தூக்கக் கலக்கத்துடன் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் பாவம் நம்

விக்கிரமாதித்தன்.. இந்த வேதாளத்திடம் மாட்டிக்கொண்டு அவன் படும் பாடு இருக்கிறதே.. இன்று நண்பர்களின் பார்ட்டிக்கு செல்லவேண்டியவன் வேதாளத்தின் தொந்தரவு தாங்க முடியாமல் ‘வல்லினம்’ படத்துக்கு அழைத்து வந்திருந்தான். டூவீலரை ஸ்டார்ட் பண்ண வேதாளமும் பின்னால் ஏறிக்கொண்டது.

வேதாளம் : என்ன விக்கிரமா.. சைலண்ட்டா வர்றே.. ஏதாவது பேசிட்டே வண்டிய ஓட்டுறது

விக்கிரமாதித்தன் : முதல்ல உன்னை கழட்டிவிடுறது எப்படின்னு தான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்..

வேதாளம் : ரொம்ப சிம்பிள்.. இப்ப பார்த்தோமே ‘வல்லினம்’ படம் அதுல எனக்கு சில கேள்விகள் இருக்கு.. அதுக்கு சரியா பதில் சொல்லிட்டா நானே போய்டுவேன்.. நீ சிரமப்பட வேண்டாம்.

விக்கிரமாதித்தன் : சரி.. கேட்டுத்தொலை..

வேதாளம் : ரொம்ப சலிச்சுக்கிறியே.. சரி.. இந்தப்படத்துல டைரக்டர் அறிவழகன் கிரிக்கெட் விளையாட்ட வச்சு படம் எடுக்காம, எதுக்கு பேஸ்கட் பாலை கையில எடுத்தார்..

விக்கிரமாதித்தன் : முட்டாள் மாதிரி பேசுறியே.. நம்ம தமிழ்சினிமாவுல கிரிக்கெட், புட்பால், கபடின்னு எல்லாத்தையும் படமா எடுத்துட்டாங்க.. அதுனால அவர் கூடைப்பந்தை கையில எடுத்துருக்கார். இதுல என்ன தப்பு..?

வேதாளம் : அவர் எடுத்த்து சரிதான்.. ஆனா நீ சொன்ன விளக்கம் தான் தப்பு.. இன்னைக்கு கிரிக்கெட்டுக்கு தரப்படுற முக்கியத்துவம் மத்த விளையாட்டுகளுக்கு கிடைக்கிறது இல்ல.. அப்படின்னா அதுமட்டும் தான் விளையாட்டா அப்படிங்கிற ஆதங்கத்துலதான் இந்த சப்ஜக்ட்டை கையில எடுத்துருக்காரு.

விக்கிரமாதித்தன் : சரி.. நான் கேக்குறேன்.. கதாநாயகனா நகுலை நடிக்க வச்சிருக்கிறாரே.. அது ஓகே தானா..?

வேதாளம் : ஏம்ப்பா படத்தை பாத்தில.. நகுல் துறுதுறுன்னு அந்த பேஸ்கட் பால் பிளேயராவே மாறிட்டார்ல. கிரவுண்டுல சீனியரோட மோதி ஜெயிக்கிற நேரத்துல அவருக்கு விட்டுக்கொடுக்கிறது, பேஸ்கட் பால் போட்டிக்கும் நல்ல வெளிச்சம் கிடைக்கணும்னு போராடுறதுன்னு நல்லாத்தான ஒர்க் பண்ணிருக்காரு. ஆனா, காதல் காட்சிகள்ல தான் எனக்கு திருப்தி இல்ல..

விக்கிரமாதித்தன் : வேதாளம்.. ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படங்கள்ல எந்த அளவுக்கு காதல் காட்சிகள் இருக்கணுமோ அந்த அளவுக்குத்தான் வச்சிருக்காங்க.. ஹீரோயின் மிருதுளா கூட பரவாயில்லதானே..?

வேதாளம் : எப்பா.. அதுக்காக ஜெண்ட்ஸ் டாய்லெட்ல நகுல் யூரின் போறப்ப பின்னாடி வந்து நிக்கிறதுல்லாம் டூமச்ப்பா..

விக்கிரமாதித்தன் : காலேஜ்ல கூட வில்லனா வர்ற கிரிக்கெட் வீரர், நகரம் படத்துல வர்ற வடிவேல் மாதிரி தைரியமிருந்தா என் ஏரியாவுக்கு வாடா, என் வீட்டுக்கு வாடாங்கிற ரேஞ்சுல பில்ட் அப் மட்டும் தான் கொடுக்கிறாரே தவிர பெருசா ஒண்ணும் பண்ணலையே..

வேதாளம் : அதுக்குப்பதிலா தான் பேஸ்கட்பால் டோர்னமெண்ட்டை நிறுத்துறதுக்கான எல்லா வேலையையும் பார்க்குறாரே..

விக்கிரமாதித்தன் : எனக்கு ஒரு ஆச்சர்யம் என்ன்ன்னா, ஜெயபிரகாஷ் எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதுல அப்படியே ஃபிட் ஆகிர்றாரே.. அதுதான் புரியலை..

வேதாளம் : இதுலயும் அந்த தொழிலதிபர் கேரக்டர் கச்சிதம்.. குறிப்பா தன்னோட பார்ட்னரையே எதுத்துக்கிட்டு அவர் போட்டியை நடத்த ஸ்பான்சர் பண்றது சூப்பரான சீன்

விக்கிரமாதித்தன் : நகுலோட ஃப்ரண்ட்ஸா வர்றவங்களும் படம் முழுக்க நல்லாவே நடிச்சிருக்காங்கப்பா.. அதுலயும் நம்ம ஜெகன் கேப் கிடைக்குற இடத்துல எல்லாம் காமெடி பண்ணிருக்காரு.. ஆனா எனக்கு நிறைய இடங்கள்ல சிரிப்பே வரலை..
வேதாளம் : அவர் முயற்சியை அவர் பண்ணிருக்கார்.. அதேமாதிரி பேஸ்கட் பால் ‘கோச்’சா வர்ற அதுல்குல்கர்னியை ஆரம்பத்துல இருந்தே நல்லா பயன்படுத்தி இருக்கலாம்.. கடைசியில முக்கியத்துவம் கொடுக்குற மாதிரி கொடுத்து ஹாஸ்பிடல்ல படுக்க வச்சிர்றாங்களே..

விக்கிரமாதித்தன் : நட்புக்காகன்னு ரெண்டு சீன்ல வந்தாலும் ஆதியும், ‘கழுகு’ கிருஷ்ணாவும் நிறைவா பண்ணிருக்காங்கள்ல..

வேதாளம் : ஆமாம்ப்பா.. அதே மாதிரி ஹீரோவோட கேர்ள்ஃப்ரண்ட்டா ஒரு பொண்ணு நடிச்சிருக்கே.. அதுகூட நல்லாத்தான்ப்பா இருக்கு.. ஹி.ஹி..

விக்கிரமாதித்தன் : அதானே பாத்தேன்.. தமன் மியூசிக்ல ரெண்டு பாட்டு நல்ல இருந்துச்சுல்ல.. அதுல ‘மாமன் மச்சான்’னு ஒரு பாட்டு வந்துச்சுல்லா.. அத நம்ம சிம்புதான் பாடியிருக்கார்.. அதேமாதிரி பாஸ்கரனோட ஒளிப்பதிவு பேஸ்கட் பால் போட்டி நடக்குற காட்சிகள்ல மிரட்டலா இருக்குதுப்பா..

வேதாளம் : இதெல்லாம் சரி தான்.. ஆனா காலேஜ்ல சீனியர் ராக்கிங் பண்றது, புதுசா வர்ற ஹீரோ பக்கம் எல்லோருமே சாயுறது, பெட் கட்டி போட்டி வைக்கிறதுன்னு ஏற்கனவே பல படங்கள்ல பார்த்த காட்சிகள் மாதிரி வர்றதுதான் சலிப்பா இருக்குது.

விக்கிரமாதித்தன் : படம் எடுத்து கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் கழிச்சு ரிலீஸாகி இருக்கிறதால நிறைய சீன்கள் அப்படி பழசாத்தான் தெரியும்.. அதேமாதிரி கிரிக்கெட், கபடி மேட்ச் பத்தி எடுக்கப்பட்டிருந்த படங்கள்ல க்ளைமாக்ஸ்ல இருந்த அந்த ஸ்பீட் இதுல குறைஞ்சிருக்கு பாத்தியா..?

வேதாளம் : அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்.. கிரிக்கெட், கபடி ரெண்டுமே கிட்டத்த்ட்ட எல்லோருக்கு தெரிஞ்ச, எல்லோரும் விளையாடின, இப்பவும் விளையாடிக்கிட்டு இருக்குற விளையாட்டு.. அதனால சுவராஸ்யமா இருக்கும். பேஸ்கட் பால் விளையாடுறவங்களுக்கு இது இண்ட்ரெஸ்டாத்தான் இருக்கும்.. அதனால தான் டைரக்டர் அறிவழகன் கூட கிரிக்கெட் ஒண்ணுமட்டுமே விளையாட்டு இல்ல.. எல்லா விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்க.” அப்படிங்கிற விஷயத்தை அழுத்தமா பதிவு செய்ய மெனக்கெட்டிருக்காரு..

விக்கிரமாதித்தன் : நல்ல விஷயம் தான்.. ஆனா காட்சிகள்ல இன்னும் வேகமும் சுவராஸ்யமும் கூட்டியிருந்தா வல்லினம் இன்னும் வலுவா இருந்திருக்கும்.. ஆனாலும் போரடிக்காம இருக்கிறதால ரசிகர்கள் தாராளமா ஒரு தடவை பாத்துட்டு வரலாம்..

வேதாளம் : ‘ஈரம்’ படம் பண்ணின டைரக்டரோட அடுத்த படம்ங்கிற எதிர்பார்ப்புல போகவேணாம்னு சொல்றே.. அப்படித்தானே..?

விக்கிரமாதித்தன் : யெப்பா.. நான் அப்படி சொல்லவே இல்லையே.. என்னை வம்புல மாட்டி விட்றாத..

வேதாளம் : சரி சரி.. வண்டிய நிப்பாட்டு.. என்னோட இடம் வந்துருச்சு.. அப்புறம் ‘தெகிடி’ன்னு ஒரு படம் ரிலீஸ் ஆகிருக்குல்ல. அதுக்கு நாளைக்கு டிக்கெட் எடுத்துட்டு வந்துரு.. நான் ரெடியா இருப்பேன்..

என்று கூறிய வேதாளம் விக்கிரமாதித்தன் பதிலை எதிர்பாராமல் மரத்தில் போய் ஏறிக்கொண்டது.

Leave A Reply

Your email address will not be published.