சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற ரஜினிகாந்த், நேற்று எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் அவரிடம் ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் அரங்கில் இன்னும் சில அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
1994ல் வெளியான ‘பாட்ஷா’ ரஜினியின் மிகப்பெரிய வெற்றிப் படம். இந்தப்படத்தை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். அப்போதையை அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். அந்தப்படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த், “தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது. அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசினார். அரசியல் ரீதியாக ரஜினி பேசிய அந்த முதல் பேச்சு அரங்கேறியபோது ஆர்.எம்.வீரப்பன் அதே மேடையில் இருந்தார்.
யாரும் சற்றும் எதிர்பாராத பேச்சு அது. ஆர்.எம்.வீரப்பன் முன்னிலையில் ரஜினிகாந்த் அவ்வாறு பேசியது அந்த காலகட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிகாந்தின் இந்த பேச்சால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளான ஆர்.எம்.வீரப்பன் பதவியும் இழந்தார். அதை தொடர்ந்துதான் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது எனப் பேசி பரபரப்பை கிளப்பினார் ரஜினி.
இப்படி இவர்கள் இருவருக்கும் வலுவான பிளாஸ்பேக் உள்ள நிலையில் இவர்கள் இருவரின் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.

Comments are closed.