தமிழ்த் திரை இசை ரசிகர்களின் மனதில் ராஜ சிம்மாசனம் போட்டு இன்றும் அமர்ந்திருப்பவர்; மௌனத்தையும் இசையாக மொழி பெயர்த்தவர்; முதன் முதலில் தமிழ் திரை இசைக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்தவர்; வேறு யார்? அது இளையராஜாதான்.
இளையராஜாவை, இசையின் மறுவடிவம் என்றும் சொல்லலாம் ஒரு நாளில் 5 நிமிடமாவது, இவரது இசையை நாம் செவிமடுக்காமல் இருக்க முடியாது. இது இசை உலகின் வரலாறு; இயற்கையின் விதி. டேஸ்ட் ஆஃப் சினிமா என்ற இணையதளம் உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பாளர்களை பட்டியலிட்டுள்ளது. அதில் 9-வது இடத்தை பிடித்துள்ளார் நம் இசைஞானி இளையராஜா.. அதில் இடம்பெற்றுள்ள ஒரே இந்தியரும் நம் இசைஞானி தான்.
‘நூறுவாது நாள்’ படத்தின் மொத்த ரீரிகார்டிங்கையும் வெறும் அரைநாளில் செய்து முடித்தவர் இளையராஜா’. அன்றைய தினம் அதே ஸ்டுடியோவிற்கு டாகுமென்ட்ரி ஒன்றின் ரிகார்டிங்குக்காக வந்திருந்த வெளிநாட்டு இயக்குனர் ஒருவர் இதைகேள்விப்பட்டு அசந்துபோய் இளையராஜாவை பாராட்டிவிட்டு சென்றார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் 950 படங்களில் 4500 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்துள்ளார் நம் இசைஞானி.
லண்டன் பி.பி.சி உலகின் 155 நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியதில், ‘தளபதி’ படத்தில் இவரது இசையில் உருவான “ராக்கம்மா கையத்தட்டு” பாடல், அதிகம் பேர்களால் கேட்கப்பட்ட உலகின் சிறந்த 10 பாடல்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டது.
லண்டன் “ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவில் சிம்பொனிக்கு இசையமைத்த, ஆசிய கண்டத்தின் முதல் இசையமைப்பாளர் நம் இசைஞானி தான். அவர் ‘மேஸ்ட்ரோ’ என அழைக்கப்பட இதுவே காரணம். தனக்கு முன்பிருந்த இசையமைப்பாளர்கள் உருவாக்கி வைத்திருந்த மரபுகளை உடைத்தெறிந்தவர் இளையராஜா. ஒரு வரலாற்றை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு போன பெருமை இளையராஜாவிற்கு உண்டு.
‘தோனி’ பட இசைவெளியீட்டு விழாவில் பிரகாஷ்ராஜ் ஒரு புதுமையை செய்துகாட்டினார். பின்னணி இசை சேர்க்காமல் ஒரு சீரியஸான காட்சி முதலில் போட்டுக்காட்டப்பட்டது… பின்னர் உடனடியாக இளையராஜாவின் பின்னணி இசையோடு போட்டுக்காட்டியபோது ஒன்று புரிந்தது.. இசை ரசிகர்கள் ஏன் அந்த மனிதரை கடவுளாக வழிபடுகின்றனர் என்பது!