’80ஸ் பில்டப்’ விமர்சனம்

57

நடிகர்கள் : சந்தானம், ராதிகா ப்ரீத்தி, ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், ஆர்.சுந்தரராஜன், கலைராணி, கே.எஸ்.ரவிகுமார், முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி
இசை : ஜிப்ரான்
ஒளிப்பதிவு : ஜேக்கப் ரத்தினராஜ்
இயக்கம் : எஸ்.கல்யாண்
தயாரிப்பு : ஸ்டுடியோ க்ரீன் – கே.இ.ஞானவேல்ராஜா

80 காலகட்டங்களில் கதை நடக்கிறது. ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த சந்தானம் தீவிர கமல் ரசிகர். அவருடைய தாத்தா ஆர்.சுந்தர்ராஜன் தீவிர ரஜினி ரசிகர். இவர்கள் வீட்டில் புதையல் ஒன்றின் வரைபடம் இருப்பதை அறிந்துக்கொள்ளும் மன்சூர் அலிகான், அதை கைப்பற்ற முயற்சிக்க, அவரிடம் இருக்கும் வைரக்கற்களை விழுங்கிவிடும் சுந்தர்ராஜன், திடீரென்று இறந்துவிடுகிறார். வைரத்தை மீற்பதற்காக மன்சூர் அலிகான் குழுவினர் சுந்தர்ராஜன் வீட்டுக்குள் நுழைகிறார்கள்.

இதற்கிடையே, தாத்தாவின் இறப்பிற்கு வரும் தனது உறவுக்கார பெண்ணான நாயகி ராதிகா ப்ரீத்தியை பார்த்ததும் காதலில் விழும் சந்தானம், ஒரே நாளில் அவளை தன்னிடம் காதலை சொல்ல வைக்கிறேன், என்று தனது தங்கையிடம் சவால் விடுகிறார். சந்தானம் சவாலில் ஜெயித்தாரா?, அவருடைய தாத்தா வயிற்றில் இருக்கும் வைரத்தை மன்சூர் அலிகானின் குழு எடுத்தார்களா?, இல்லையா? என்பதை காமெடி கலாட்டாவாக சொல்வது தான் ‘80ஸ் பில்டப்’.

காமெடி நாயகனாக அவதாரம் எடுத்து வெற்றி பெற்ற சந்தானம், திடீரென்று ஆக்‌ஷன் ஹீரோவாக ஆசைப்பட்டு அவஸ்த்தைப் பட்ட கதையை அனைவரும் அறிவர். அதனால் தான் இப்போது காமெடியே போதும் என்று முடிவு செய்துவிட்டவர், இந்த படத்திலும் முழுக்க முழுக்க காமெடிக்கு தான் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இறப்பு வீட்டில் நடக்கும் காமெடி கலாட்டாவை கனகச்சிதமாக கையாண்டிருக்கும் சந்தானம், வழக்கம் போல் தனது ரசிகர்களை முழு திருப்தியடைய வைத்திருக்கிறார். காதல், ஆக்‌ஷன், செண்டிமென்ட் என அனைத்து உணர்வுகளையும் காமெடியாக கொத்து ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ராதிகா ப்ரீத்தி, அழகிலும் நடிப்பிலும் குழந்தை குணம் மாறாமல் இருக்கிறார். கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பவர் பல இடங்களில் நடிப்பவர்களை வேடிக்கை பார்ப்பதையும் வேலையாக செய்திருக்கிறார்.

சந்தானத்தின் தங்கையாக நடித்திருக்கும் நடிகை நாயகியை காட்டிலும் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அவருடைய முக பாவனை, உடல் மொழி என அனைத்தும் கவனிக்க வைக்கிறது.

சந்தானத்தின் அப்பாவாக நடித்திருக்கும் நரேன் மற்றும் பெண் வேடம் போட்டு சந்தானத்தின் வீட்டுக்குள் நுழையும் ஆனந்தராஜ் இருவரும் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதிலும் நரேன் இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், நாம் பார்த்திராத பர்பாமன்ஸை கொடுத்து மொத்த திரையரங்கையே சிரிப்பால் அதிர வைத்துவிடுகிறார்.

கே.எஸ்.ரவிக்குமார், முனீஸ்காந்த், கிங்ஸ்லி, ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். மயில்சாமி மற்றும் சுவாமிநாதன் குறைவான காட்சிகளில் வந்தாலும், அவர்கள் திரையில் வரும்போதெல்லாம் ரசிகர்கள் முகத்தில் சிரிப்பு வருகிறது.

ஜிப்ரானி இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையான மொலோடியாகவும், ஆட்டம் போட வைக்கும் அதிரடி பாடலாகவும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

ஒளிப்பதிவாலர் ஜேக்கப் ரத்தினராஜ், வியக்க வைக்கும் விதத்தில் காட்சிகளை மிக நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். குறுகிய காலத்தில் எடுக்கப்பட்ட படம் என்று சொல்கிறார்கல், ஆனால் படத்தை பார்க்கும் போது அப்படி எதுவும் தெரியாதது ஒளிப்பதிவாளரின் திறமைக்கு சான்று.

முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் என்பதால் எந்தவித லாஜிக்கையும் பார்க்க கூடாது என்று இயக்குநர் கல்யாண், இந்த படத்தில் மட்டும் அல்ல தனது அனைத்து படங்களிலும் சொல்லி வருகிறார். அதனால், லாஜிக்கை பார்க்காமல் மக்களை சிரிக்க வைக்க கூடிய மேஜிக்கை மட்டுமே பார்த்தால், இயக்குநர் கல்யாண் இந்த முறையும் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதே உண்மை.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.