’குய்கோ’ விமர்சனம்

59

நடிகர்கள் : விதார்த், யோகி பாபு, இளவரசு, ஸ்ரீபிரியங்கா, துர்கா, முத்துக்குமார்
இசை : அந்தோணி தாஸ்
ஒளிப்பதிவு : ராஜேஷ் யாதவ்
இயக்கம் : டி.அருள் செழியன்
தயாரிப்பு : ஏ.எஸ்.டி பிலிம் எல்.எல்.பி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யோகி பாபு அரேபிய நாட்டில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்க்கிறார். அவரது தாய் இறந்துவிட, அவர் வருவதற்கு மூன்று நாட்கள் ஆகும் என்பதால் பீசர் பாக்ஸை வாடகைக்கு எடுக்கிறார்கள். சென்னைக்கு போக வேண்டிய விதார்த், பீசர் பாக்ஸுடன் அந்த கிராமத்திற்கு வருகிறார். அரேபியாவில் இருந்து கிராமத்துக்கு வரும் யோகி பாபு, உயிருடன் இருக்கும் போது தனது தாயை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தத்தில், அவருடைய இறுதி சடங்கை திருவிழா போல் நடத்துவதோடு, தன் தாயின் உடல் வைக்கப்பட்டிருந்த பீசர் பாக்ஸை பெரும் தொகை கொடுத்து வாங்கி, அதை வணங்கவும் செய்கிறார்.

இதற்கிடையே, சிக்கல் ஒன்றில் சிக்கிக்கொள்ளும் விதார்த், சில நாட்கள் யோகி பாபுவின் ஊரில் தங்க வேண்டிய சுழல் ஏற்படுகிறது. அதன்படி அவர் அந்த ஊரில் தங்க, திடீரென்று யோகி பாபு தனது தாயின் கோவிலாக பாவித்த பீஸர் பாக்ஸ் காணாமல் போய் விடுகிறது. யார் அந்த பீஸர் பாக்ஸை எடுத்தார்கள்?, விதார்த்தின் சிக்கல் என்ன?, அது தீர்ந்ததா? என்பதை நகைச்சுவையாக மட்டும் இன்றி நையாண்டியாகவும் சொல்வது தான் ‘குய்கோ’.

அரேபிய நாட்டில் சம்பாதித்த பணத்தை கணக்கு பார்க்காமல் செலவு செய்யும் யோகி பாபு, தனது ஒவ்வொரு அசைவுகளையும் அசால்டாக வெளிப்படுத்தி நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருப்பதோடு, டைமிங் காமெடி மூலம் அரங்கையே அலற விடுகிறார். அம்மா உயிருடன் இருக்கும் போது அவரை கவணிக்க முடியவில்லையே! என்ற தனது கவலையை வெளிப்படுத்தும் இடங்களில் படம் பார்ப்பவர்களுக்கும் தங்களது அம்மாவை நினைத்துக்கொள்ளும் நடித்திருப்பவர், என்னதான் செண்டிமெண்ட் காட்சிகளில் உணர்வுப்பூர்வமாக நடித்தாலும், அடுத்த நொடியே தனது நையாண்டி வசனம் மூலம் சிரிக்க வைத்து விடுகிறார்.

சென்னைக்கு போக வேண்டிய சூழலில், 1500 ரூபாய்க்காக பீஸர் பாக்ஸுடன் வந்து சிக்கலில் சிக்கிக்கொள்ளும் விதார்த், எப்போதும் போல் தனது கதாபாத்திரத்திற்கு 200 சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

விதார்த்துக்கு ஸ்ரீபிரியங்கா ஜோடி, யோகி பாபுக்கு துர்கா ஜோடி என இரண்டு நாயகிகள். இருவரும் தங்களுக்கான வேலையை சரியாக செய்து, படம் சுவாரஸ்யமாக நகர உதவியிருக்கிறார்கள்.

இளவரசுவின் அனுபவம் வாந்த நடிப்பும், அவரது கதாபாத்திரமும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ் கதாபாத்திரங்கள் மற்றும் அவர்களுடைய உணர்வுக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

ஆண்டனி தாசனின் இசையில் பாடல்கள் இனிமையாக இருப்பதோடு, வித்தியாசமான முயற்சியாகவும் இருக்கிறது. மிகப்பெரிய ஹிட்டான இந்தி பாடல் மெட்டை காதல் பாடலாக போட்டவர், திருமண பாடலை பாகவதர் குரலில் ஒலிக்க வைத்து ரசிக்க வைத்திருக்கிறார். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறது.

சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை நக்கல் நையாண்டியோடு காட்சிகளாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் அருள்செழியன், வசனங்களிலும் அதே ஃபார்மூலாவை பயன்படுத்தி படம் முழுவதும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.

மாலை நாளிதழ் மறுநாள் காலையும், காலை நாளிதல் அன்று மாலையும் கிடைக்க கூடிய ஒரு கிராம். தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்றால் அந்த மக்களின் வாழ்க்கை எப்படி இருக்கும், என்பதை சோகமாக சொல்லாமல் நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் படம் முழுவதுமே இதுபோன்ற சமூக சிக்கல்களை சிரிக்கும்படி சொல்லி பல இடங்களில் கைதட்டல் பெறுகிறார்.

மொத்தத்தில், இந்த ’குய்கோ’ சமூக பிரச்சனைகளை சோகமாக சொல்லாமல், சிரித்து மகிழும்படி முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறது.

ரேட்டிங் 4\5

Comments are closed.