காணாமல்போன ஆறு வயது மகனை தேடும் தந்தையின் வலி நிறைந்த பயணம்தான் 6 மெழுகுவர்த்திகள் படத்தின் ஒருவரிக்கதை. ஆனால் அதை படமாக்கிய விதத்தில் நம்மை இரண்டுமணிநேரம் கட்டிப்போட்டுவிட்டார் இயக்குனர் வி.இசட்.துரை.
ஷாம் தானா இது..? வழக்கமான ஷாம் படம்தானே என்று படம் பார்க்க வரும் ரசிகன் கொஞ்சம் மிரண்டுதான் போவான். ஏனென்றால் ஷாம் இந்தப்படத்தில் கொட்டியிருக்கும் உழைப்பு அப்படி. மகனை பறிகொடுத்த ஒரு தந்தையாகவே மாறிப்போய்விட்டார் ஷாம்.
சோறு தண்ணியில்லாமல் மகனைத்தேடி ஆந்திரா, புனே, போபால், மும்பை என மொழி புரியாத மாநிலங்களில் ஒவ்வொரு கடத்தல் கும்பலாக தேடிப்பிடித்து அவர்களிடம் சாதாரண தகப்பனாக கெஞ்சுவதும் அவர்கள் மிஞ்சும்போது அடித்து துவம்சம் பண்ணுவதும் என எங்கேயும் எதார்த்தம் மீறாத நடிப்பை தந்திருக்கிறார் ஷாம். தன் பையனை மீட்க வந்த இடத்தில் இன்னொரு பெண்குழந்தையை காப்பாற்றப்போய் பணத்தையும் மகனையும் பறிகொடுத்து நிற்கும் காட்சியில் தனது மனப்போராட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஷாம்.
படம் ஆரம்பத்திலிருந்தே ஷாமுடன் நாமும் கூடவே பயணிப்பது போன்ற உணர்வில் இருக்கும் நம்மால், கடைசியில் பையனை மீட்கும்வரை அந்த உணர்வில் இருந்து வெளிவர முடியவில்லை. ஷாமின் உழைப்பு நிச்சயம் வீண்போகவில்லை. இதுமாதிரி கதைகளை தேடிப்பிடிக்காமல் இத்தனை நாட்களை வீணடித்துவிட்டீர்களே ஷாம். இதுதான் உங்களது இரண்டாவது படம் என்று நினைத்துக்கொண்டு இனி வெற்றிப்பாதையில் நடைபோடுங்கள் ஷாம்.
ஷாமின் மனைவியாக வரும் பூனம் கவுர் மகனை பறிகொடுத்த தாயின் கதறலை நமக்கும் தொற்றிக்கொள்ள வைத்திருக்கிறார். குறிப்பாக தன் குழந்தையை ஒப்படைத்துவிடும்படி ஒரு பிச்சைக்காரனின் காலைப் பிடித்துக்கொண்டு அண்ணே என கதறும் ஒரு இடம்போதும், இவரது நடிப்புக்கு. ஷாமின் மகனாக வரும் அந்த துறுதுறு பையனும் அவ்வளவு அழகு.
படத்தில் ஒவ்வொரு ஏரியாவுக்கும் ஒரு வில்லன் என நிறைய வில்லன்கள். பின்னே குழந்தைகளை ஈவு இரக்கம் இல்லாமல் கடத்துகிறவனை எப்படி வர்ணிப்பது? கால்வராத மெரினா பீச் பிச்சைக்கார நாயனார், ஆந்திரா நல்லம ரெட்டி, கான்பூர் மாட்டு இறைச்சி வியாபாரி யாத்கிரி, இவர்களுக்கெல்லம் தலைவனாக போபால் நபும்சகனாக வரும் திவாகர் என குழந்தை கடத்தல் கும்பலைச்சேர்ந்தவர்களாக வரும் அனைவருமே சரியான தேர்வு. குழந்தைகள் காணாமல் போவதின் பின்னணியில் இத்தனை பெரிய நெட்வொர்க்கா என நம்மை அதிர்ச்சியில் உறையவைக்கிறார்கள் அனைவரும்.
இன்னும் முக்கியமான மூன்று நபர்களைப் பற்றி சொல்லவேண்டும். குழந்தை காணமல் போனதிலிருந்து எந்தவித பிரதிபலனும் பார்க்காமல் ஷாமுக்கு ஆறுதலாக கூடவே வரும் அந்த மனிதர், குழந்தையின் தேடுதல் வேட்டையில் படம் நெடுகிலும் கூடவே வந்து கடைசியில் பரிதாபமாக உயிரைவிடும் மூணார் ரமேஷ், க்ளைமாக்ஸில் முன்பின் அறிமுகம் இல்லாத ஷாமுக்கு உதவி செய்யும் மும்பை பாய் என இந்த மூன்று பேருமே யதார்த்ததின் மறு உருவங்களாகத்தான் நமக்கு தெரிகிறார்கள்.
கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவும் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் ஜெயமோகனின் வசனமும் படத்தை தொந்தரவு செய்யாமல் அதன்போக்கிலேயே கூடவே வருகின்றன. படம் ஆரம்பத்திலிருந்து இண்டர்வல் வரை வழவழவென கதையை நகர்த்திச்செல்லும்இன்றைய இயக்குனர்கள் மத்தியில் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே கதையை ஆரம்பித்து, கதையுடன் நம்மை ஐக்கியமாக வைத்து, இரண்டுமணி நேரம் விறுவிறுப்பாக படமாக்கியிருக்கும் இயக்குனர் வி.இசட்.துரையை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
கதாபாத்திர தேர்வில் மிகுந்த கவனம் காட்டியிருக்கும் துரை படத்தில் பாடல்களை குறைத்து விறுவிறுப்பை கூட்டியிருப்பது உண்மையில் தைரியமான செயல் தான். குழந்தை கடத்தலின் கொடூரத்தை, அதைச்சுற்றி பின்னியிருக்கும் மாஃபியாவை இதுவரை யாரும் இவ்வளவு நேர்த்தியாக காட்டியதில்லை. அந்தவகையில் படம் முடியும்போது தியேட்டரில் எழுந்த ரசிகர்களின் கைதட்டல்தான் துரைக்கும் ஷாமுக்கும் கிடைத்த உண்மையான வெற்றி என்று சொல்லவேண்டும்.
பின்குறிப்பு:
குழந்தை கடத்தல் பற்றிய விழிப்புணர்வுடன் முகம் சுழிக்கவைக்கும் எந்தவித காட்சிகளும் இல்லாத இந்தப்படத்தை தவறாமல் தியேட்டருக்கு மட்டுமே சென்று அவசியம் பாருங்கள். எங்கே சென்றாலும் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்.