‘2.O’ விழாவுக்கு செல்லாத காரணத்தை ‘6 அத்தியாயம்’ விழாவில் உடைத்த பார்த்திபன்..!

337

6 athiyayam audio

தமிழ் சினிமாவில் பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘ஆந்தாலஜி’ படங்களாக வெளியிடும் முறை சூடுபிடித்துள்ளது. அதில் அடுத்த வெளியீடு தான் ‘6 அத்தியாயம்’ திரைப்படம் அதிலும் முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ளனர்.

இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. சங்கர் தியாகராஜன் என்பவர் தயாரித்துள்ள இந்தப்படத்தில் பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.

இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்..

விழாவில் பேசிய பலரும் இந்தப்படத்தில் எடுக்கப்பட்டுள்ள புதிய முயற்சியை பாராட்டி பேசினார்கள்.. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாக அமைந்தது பார்த்திபனின் பேச்சு. “6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

மேலும் “தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும். துபாயில் நடைபெற்ற 2.O ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். ஆனால் அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். காரணம் இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை” என புதிய தகவல் ஒன்றையும் பதிவு செய்தார் பார்த்திபன்.

Comments are closed.