கலைக்கு என்னதான் மொழி பாகுபாடு இல்லை என சொல்லப்பட்டாலும் கூட, நம் தமிழ் திரையுலகில் சில இடங்களில் அது அவ்வப்போது வெளிப்படவே செய்கிறது.. ஆனால் இதையெல்லாம் தாண்டி மக்கள் மனதில் ஒருவர் பதிந்துவிட்டால், அவர்களை யாராலும் அசைக்க முடியாது என்பதற்கு முந்தைய உதாரணம் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.. இன்றைய உதாரணம் நிச்சயமாக நடிகர் விஷால் தான்.
ஆம். பத்து வருடங்களுக்கு முன், தயாரிப்பாளரின் மகனாக ஒரு வாரிசு நடிகராக உள்ளே நுழைந்தபோது யாருடா இந்த கருத்த பையன் என பலரை புருவம் உயர்த்த வைத்தாலும், மற்ற வாரிசு நடிகர்கள் போல பத்தோடு பதினொன்றாக கரைந்து போகிறவன் தான் அல்ல என்பதை முதல் மூன்று படங்களிலேயே நிரூபித்துவிட்டார். விஷால்
மற்றவர்கள் காதல் ரூட்டில் பயணிக்க, விஷால் தனக்கு ஆக்சன் ரூட்டில் பாதையை ஏற்படுத்திக்கொண்டார். அவரது உருவமும் உடலும் குரலும் அதற்கு அழக்காக கைகொடுத்தன. ஒருகட்டத்தில் தனது முக்கியமான படம் ஒன்று மிகப்பெரிய நிறுவனம் தயாரித்தும் கூட வெளிவராமல் நின்றபோது, சுதாரித்துக்கொண்ட விஷால், தனியாக தயாரிப்பு நிறுவனமும் தொடங்கினார். அப்போது தான் சிக்கலில் மாட்டிக்கொண்ட படங்களுக்கு அப்போதைய நடிகர் சங்கமும், தயாரிப்பாளர் சங்கமும் எந்த உதவியையும் செய்ய ஆர்வம் காட்டுவதில்லை என கண்டுகொண்டார்.
விளைவு நடிகர்சங்க தேர்தலில் முழு மூச்சுடன் செயலாற்றி சரத்குமார், ராதாரவியை பதவியைவிட்டு இறக்கினார். இதுபோலவே தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியும் அவரை எளிதாக தேடி வந்தது. இதோ நடிகர்சங்கத்திற்காக புதிய கட்டம் கட்டும் பணிகளை துவக்கிவிட்டார்.
கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், அல்லது வாய்ப்புகளை புதிதாக உருவாக்கி கொள்ள வேண்டும் என்கிற இரண்டு அம்சங்களும் விஷாலுக்கு மிகச்சரியாக பொருந்தும்.. அவரது இந்த வெற்றிப்பயணம் தொடர, இன்று பிறந்தநாள் காணும் விஷாலுக்கு நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed.