வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க – விமர்சனம்

199

ஆர்யாவும் சந்தானமும் சின்ன வயது முதல் ஒன்றாகவே வளர்ந்த நண்பர்கள். சந்தானத்திற்கு நிச்சயிக்கப்பட்ட பானுவிடம் அண்ணாமலை ரஜினி ஸ்டைலில் இண்டர்வியூ பண்ணி வெறுப்பை சம்பாதிக்கிறார் ஆர்யா. திருமணம் ஆனபின் முதலிரவில் கூட கலாட்டவை தொடரும் ஆர்யாவின் ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணினால், அன்றைக்குத்தான் முதலிரவு என சந்தானத்துக்கு செக் வைக்கிறார் பானு.

ஆரயாவுக்கு திருமண செய்துவைத்தால் பொறுப்பாக மாறிவிடுவார் என அவரை திருமண பதிவு அலுவலகத்துக்கு அழைத்துசெல்கிறார் சந்தானம்.. ஆர்யாவோ அங்கே வேலைபார்க்கும் தமன்னா மீது காதல் வயப்பட்டு அவரை லவ் பண்ண துரத்துகிறார்.. தமன்னா அவரை புறக்கணிக்க, அவரை வெறுப்பேற்றுவதற்காக தமன்னான்வின் தோழி வித்யுலேகாவை லவ் பண்ணுவதாக சும்மா பாவ்லா காட்டுகிறார் ஆர்யா.

ஆனால் வித்யுவோ ஆர்யாவை லவ் பண்ணுவதுடன் கல்யாண ஏற்பாடுகளை கவனித்து, கூடவே தனது பப்ளிமாஸ் அண்ணனுக்கு தமன்னாவையும் திருமணம் பேசி முடிக்கிறார். இந்த மாப்பிள்ளையிடம் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கும் தமன்னா, ஆர்யா மீது லவ்வாகிறார்.. ஆனால் சந்தானத்தின் ப்ரண்ட்ஷிப்பை கட் பண்ணினால் தான் கல்யாணம் என கண்டிஷன் போட, ஆர்யா என்ன முடிவெடுக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

நண்பன், நண்பனுக்கு இடைஞ்சல் கொடுக்கும் இன்னொரு நண்பன், நண்பனை கழட்டிவிட சொல்லும் காதலி, நட்புக்காக காதலை தியாகம் செய்யும் நண்பன், கூடவே சரக்கு வாசனை என வழக்கமான கிளிஷே காட்சிகளுடன் ராஜேஷ் படங்களின் அப்டேட் வெர்ஷனாகத்தான் இந்தப்படத்தை பார்க்க முடிகிறது.

ஆர்யாவுக்கும் சந்தானத்துக்கும் காமெடியில் பத்து பொருத்தமும் நன்றாகவே பொருந்துகிறது. ஆனால் நண்பனின் முதலிரவில் கூட டார்ச்சர் பண்ணும் ஆர்யாவின் கதாபாத்திரம் தான், அவர் அப்பாவியா இல்லை அடப்பாவியா என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சந்தானத்தின் டயலாக்குகள் அந்த நிமிடத்திற்கு ஒர்க் அவுட்டாகி நம்மை சிரிக்க வைத்தாலும், தியேட்டரை விட்டு வெளியே வரும்போது ஒன்றிரண்டு மட்டுமே மனதில் நிற்கின்றன.. கருணாகரனை ஆரம்பத்தில் ஊறுகாயாக தொட்டு, பின்னர் இறுதியில் பொரியலுக்கான முக்கியத்துவம் கொடுத்து ஈடுகட்டியுள்ளார்கள்.. க்ளைமாக்ஸ் ஐடியாவுடன் வந்து படத்தை முடித்துவைக்கும் கெஸ்ட் ரோல் கமிஷனராக வரும் விஷாலின் பெர்பார்மன்ஸ் படத்துக்கு பிளஸ் தான்.

தமன்னா, பானு, வித்யுலேகா என மூன்று கதாநாயகிகள்(?) இருந்தாலும் வித்யுவுக்குத்தான் ஸ்கோர் பண்ண அதிகம் வாய்ப்பு.. தமன்னா ஆர்யாவை ஒதுக்குவதில் இருக்கும் லாஜிக், அவரை லவ் பண்ணுவதில் சந்தர்ப்பவாதமாக மாறுவதால் காதல் அடிபட்டு போகிறதே.. அதுசரி ராஜேஷ் படங்களில் அதையெல்லாம் பார்க்க முடியுமா என்ன..? சந்தானத்திற்கு தடா போட்டு கடுகாக பொரியும் வேலையை மட்டும் பார்க்கிறார் பானு. இன்னும்கூட ஷகிலா பீவரில் இருந்து ராஜேஷால் விடுபடமுடியவில்லையே பாஸ்..

இமானின் இசையில் “லக்கா மாட்டிகிச்சு”, “வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க” ஆகிய பாடல்கள் ஏற்கனவே எழுதிவைத்தபடி ஹிட்டுதான். நட்பதிகாரத்தை விட்டு வெளியே வராமல் படம் இயக்கும் ராஜேஷ், காமெடி என்கிற ஜோக்கரை வைத்து புதுப்புது ஆட்டங்களை ஆட முன்வராதது ஏனோ, அவருக்கே வெளிச்சம்.. காமெடி என்றாலும் பார்த்த காட்சிகளையே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்தினால் ஒரு கட்டத்தில் போரடிக்கும்.. அதுவே தொடர்ந்தால் இன்னொரு கட்டத்தில் கோபம் கூட வரும்.. ஆக தனது ரூட்டை, ராஜேஷ் மாற்றியாக வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Comments are closed.