‘விருந்து’ விமர்சனம்

812

நடிகர்கள் : அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யார், ஹரிஷ் பெராடி
இசை : ரதீஷ் வேகா
ஒளிப்பதிவு : ரவிச்சந்திரன், பிரதீப் நாயர்
இயக்கம் : தாமர கண்ணன்
தயாரிப்பு : கிரீஷ் நெய்யர்

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நிக்கி கல்ராணி, கிரீஷ் நெய்யார் ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் ‘விருந்து’ ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக நிறைவை கொடுத்ததா? அல்லது மருந்தாக கசக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

நாயகி நிக்கி கல்ராணியின் தந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட, அவரை தொடர்ந்து அவரது அம்மாவும் கொலை செய்யப்படுகிறார். இந்த இரண்டு கொலைகள் பற்றி போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் நிலையில் நிக்கி கல்ராணியை ஒரு கும்பல் கடத்த முயற்சிக்கிறது. அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை அர்ஜுன் காப்பாற்றுவதோடு, அவரது அம்மா, அப்பாவை கொலை செய்தது யார்?, நிக்கி கல்ராணியை கடத்த முயற்சிப்பது யார்? என்பதை கண்டுபிடிக்க களத்தில் இறங்குகிறார். அதன் பிறகு நடப்பவைகளை விறுவிறுப்பும், பரபரப்பும் மிக்கதாக சொல்வதே ‘விருந்து’ படத்தின் மீதிக்கதை.

சஸ்பென்ஸ் திரில்லராக பயணிக்கும் கதையில் அதிரடி எண்ட்ரி கொடுக்கும் அர்ஜுன், மீண்டும் மிகப்பெரிய ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். கதாநாயகியுடன் டூயட் பாடி பிறகு அதிரடி காட்டும் வேடம் இல்லை என்றாலும், படத்தின் ஆக்‌ஷன் ஏரியா முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு ஆக்‌ஷன் காட்சிகளிலும், தனது அனுபவமான நடிப்பின் மூலமாகவும் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

கதையின் மையப்புள்ளியாக பயணித்திருக்கும் நிக்கி கல்ராணி உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தந்தை மற்றும் தாயை இழந்து அவர் தவிப்பதும், தன்னை துரத்தும் மர்மத்தின் பின்னணி தெரியாமல் குழம்புவது, தனது பெற்றோரின் கொலைக்கு பழிவாங்க துடிப்பது என அனைத்து ஏரியாவிலும் அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கிரீஷ் நெய்யார், திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். அவருக்காக படத்தில் வைக்கப்பட்டிருக்கும் கிளை கதையும், அதில் வரும் அவரது தந்தை மற்றும் தங்கை செண்டிமெண்ட் கவனம் ஈர்க்கிறது.

சிறிய வேடம் என்றாலும் ஹரிஷ் பெராடியின் கதாபாத்திரமும், நடிப்பும் மிரட்டல். பாலண்ணா என்ற கதாபாத்திரத்தில் கம்யூனிச தலைவராக நடித்திருக்கும் நடிகரின் திரை இருப்பு, திரைக்கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

ரதீஷ் வேகாவின் இசையில், ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளின் அழகு கண்ணுக்குள் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக் கொள்கிறது. இயற்கையின் அழகோடு திகில் காட்சிகளின் பதற்றத்தையும் இவர்களது கேமரா பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறது.

படத்தின் ஆரம்பத்திலேயே நம்மை கதைக்குள் அழைத்துச் செல்லும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் வி.டி.ஸ்ரீஜித், இறுதி வரை அடுத்தது என்ன நடக்கும்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு காட்சியையும் எதிர்பார்ப்புடன் பயணிக்க வைத்திருக்கிறார்.

பத்திரிகை செய்தியை கருவாக வைத்துக் கொண்டு அதற்கு மிக சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் திரைக்கதை அமைத்திருக்கும் தாமர கண்ணன், படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவரையும் மிக சரியாக பயன்படுத்தி காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை கதைக்குள் இழுத்து விடும் இயக்குநர், அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்க்காத திருப்பங்கள் மூலம் விறுவிறுப்பாக நகர்த்தி செல்பவர், இறுதிவரை என்ன நடந்திருக்கும், பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருக்கும், என்று ரசிகர்களை யூகிக்க முடியாதபடி முழு படத்தையும் மிக நேர்த்தியாக கொடுத்திருக்கிறார்.

எந்தவித எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாமல் வெளியாகியிருக்கும் இந்த ‘விருந்து’ ரசிகர்களுக்கு மிகப்பெரிய சஸ்பென்ஸ் திரில்லர் விருந்து என்பதை மறுக்க முடியாது.

ரேட்டிங் 4/5

Comments are closed.