வாயை மூடி பேசவும் – விமர்சனம்

155

 

அதென்ன வாயை மூடி பேசவும்.. வாயை மூடி எப்படி பேசமுடியும்..? முடியும் என இரண்டுமணி நேர படம் எடுத்து சொல்லியிருக்கிறார் பாலாஜி மோகன்.

 

கேரளாவில் உள்ள பனிமலை என்கிற ஊரில் மட்டும் திடீரென ஒரு விசித்திரம் நிகழ ஆரம்பிக்கிறது. திடீர் திடீரென ஒவ்வொருவருக்காக பேச்சு வருவது நிற்க ஆரம்பிக்கிறது. மருந்து மாத்திரை கொடுக்கிறார்கள்.. மந்திரி வருகிறார்.. ஒன்றும் பலனில்லை..  திடீரென பனிமலையில் இருக்கும் யாருமே யாருடனும் பேசக்கூடாது. அதனால் தான் நோய் பரவுகிறது என அரசு உத்தரவு போடுகிறது.

 

மொத்த ஊரும், அதில் ஒவ்வொரு குடும்பமும் பேசாமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வெடிக்கின்றன, என்னென்ன பிரச்சனைகள் தீர்கின்றன என்பதை ஒரு புதுமாதிரியான கோணத்தில் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்கள்.

 

சேல்ஸ் ரெப்பாக துல்கர் சல்மான்.. மம்முட்டியின் மகனான இவர் தமிழுக்கு புதுவரவு.. ஆனால் தமிழ் சினிமாவுக்கேற்ற வசீகர முகம்.. மலையாளத்தில் இயல்பான நடிப்பால் அசத்தி முன்னணி நடிகராக இருக்கும் துல்கர் தமிழில் மட்டும் சோடைபோய்விடுவாரா என்ன..? பேச்சு, நடை உடை பாவனை, சோகம், புன்னகை என எல்லாவற்றிலுமே ஒரு கம்பீரம்..

 

முக்கியமாக துல்கருக்கு காமெடி இயல்பாக வருகிறது. அதுவே ப்ளஸ் பாயிண்ட்டாகவும் அமைந்திருக்கிறது. அதிலும் நஸ்ரியாவுக்கு ஜவ்வு மிட்டாய் கொடுக்கும் காட்சிகள் கவிதை.. சரியான கதைக்களங்களை தேர்ந்தெடுத்தால் தனது தந்தையைப்போல தமிழிலும் ஒரு முக்கியமான இடத்தை தக்கவைக்கலாம்.

 

டாக்டராக வருகிறார் அழகுப்பதுமை நஸ்ரியா.. அளந்து பேசும் அழகி.. அவர் வரும் காட்சிகளில் நம் கண்கள் திரையை விட்டு நகர மறுக்கின்றன. வசனங்களை வாயல் பேசுவதை விட கண்களிலேயே பேசிவிடுகிறார்.

 

அமைச்சராக முக்கிய வேடத்தில் பாண்டியராஜன்.. பேசமுடியாதவராக நடிக்கும் அவருக்கு கடைசியில் அப்படியே ஆகிவிடுவது காமெடி. நீண்ட இடைவெளிக்குப்பிறகு மதுபாலா.. அப்படியே இருக்கிறார்.. நடிப்பிலும்.. தனது மகனின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் இடம் அருமை.

 

குடிகாரர்கள் சங்கத்தலைவராக ரோபோ சங்கர் டயலாக்கிலும் சரி, இடைவேளைக்கு பின் சைகை பாஷையிலும் சரி கலக்குகிறார். துல்கரின் நண்பனாக வரும் இன்னொரு ரெப் ஒருவகை காமெடி பார்ட்டி என்றால் நஸ்ரியாவின் தோழியாக வரும் சிஸ்டர் இன்னொருவகை அழகு.. இந்த இருவரின் காதல் எபிசோட் இன்னொரு ஹைக்கூ. நீண்ட நாளைக்கு பிறகு வினுச்சக்கரவர்த்தி.. உறுமுகிறார். நடிகர் பூமேஷாக ஜான் விஜய் டபுள் ஓகே..

 

படத்தில் பாடல்கள் இரண்டு இடங்களில் மட்டுமே வருவது ஆறுதல். ஆனால் இடைவேளைக்கு பின் வசனம் இல்லாத அந்த முக்கால் மணிநேரம் சீன் ரோல்டனின் பின்னணி இசைதான் ராஜாங்கம் நடத்துகிறது. சௌந்தர்ராஜனின் ஒளிப்பதிவு கேரளாவின் எதார்த்த அழகை அள்ளிவந்திருக்கிறது.

 

திடீரென பேச்சு நின்று போனால் என்னவாகும் என்பதை கொஞ்சம் சுற்றிவளைத்து காமெடியாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். இடைவேளைக்குப்பின் முக்கால் மணி நேரம் யாருக்குமே டயலாக் இல்லாமல் பின்னணி இசையிலேயே கதையை நகர்த்தியிருப்பது துணிச்சல். ஆனால் எத்தனை பேருக்கு இது புரியும் என்பதைவிட பல இடங்களில் சிரிக்கவைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் அடிக்கடி தொலைக்காட்சிகளில் தோன்றி சீரியஸாகவும் காமெடி என்கிற பெயரிலும் பாலாஜி மோகனே நேரடியாக செய்தி வாசிப்பதை மட்டும் முற்றிலுமாக தவிர்த்திருக்கலாம்.

 

மொத்தத்தில் வாயை மூடி பேசவும் – வாய்விட்டு சிரிக்கலாம்.

Comments are closed.