படத்தின் கதை எண்பதுகளின் காலகட்டத்தில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.
சிபிஐ அதிகாரி ஆகவேண்டும், வருமானத்திற்கு அதிகமாக பணம் சேர்த்து வைப்பவர்களிடமிருந்து அவற்றை பிடுங்கி அரசாங்கத்துக்கு சேர்க்கவேண்டும் என்பது சூர்யாவின் லட்சியம். ஆனால் சிபிஐ உயர் அதிகாரியான சுரேஷ் மேனன், தனக்கு கீழே வேலைபார்க்கும் தம்பிராமையாவின் மகனான சூர்யாவுக்கு அந்த வேலையை கிடைக்கவிடாமல் செய்கிறார்,.
அதிகாரத்தில் இருந்துகொண்டு தான் சாதிக்க நினைத்ததை, அதிகாரம் இல்லாமலேயே சாதிக்க முடிவுசெய்து ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு ஆட்டத்தை ஆரம்பிக்கிறார் சூர்யா. ஊழல் பணம் சேர்த்தவர்களிடம் போலி ரெய்டுகள் நடத்தி சிபிஐக்கு தலைவலி கொடுக்கிறார்.
போலி ரெய்டு நடத்துவது யாரென கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரியாக கார்த்திக் நியமிக்கப்பட, சூர்யாவை பொறிவைத்து பிடிக்க வியூகம் வகுக்கிறார் கார்த்திக். அவரது வியூகத்தில் சூர்யா சிக்கினாரா..? சூர்யா சிபிஐ ஆபீசர் ஆகமுடியாதது மட்டும் தான் அவர் நடத்தும் போலி ரெய்டுகளுக்கு காரணமா..? இப்படி போலி ரெய்டுகள் மூலம் சூர்யா கொண்டுவர விரும்பிய மாற்றம் என்ன..? இவைகளுக்கு விடைசொல்கிறது மீதிப்படம்.
இந்தியில் ஸ்பெஷல்-26, தமிழில் ஆதிபகவன், கத்திச்சண்ட ஆகிய படங்களின் மூலம் நமக்கு ஏற்கனவே அறிமுகமான போலி ரெய்டு விவகாரத்தை, அழகான திரைக்கதையால் முழு நீள திரைப்படமாக மாற்றியுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.
கெட்டப்பை மாத்தினாலும் கேரக்டரை மாத்தமாட்டேன் என சொல்வதற்கு ஏற்றமாதிரி, விரும்பிய வேலை நிராகரிக்கப்ப்படும்போதும், அதிகாரிகளே தவறு செய்யும்போதும் கோபம் கொள்ளும் ஒரு சராசரி இளைஞன் கேரக்டர் தான் சூர்யா என்றாலும் அதில் இன்னொரு துரைசிங்கத்தை நாம் பார்க்க முடிகிறது. காதல், சென்டிமென்ட் காட்சிகளை விட சமூக கோபத்தை நன்றாகவே பிரதிபலித்திருக்கிறார் சூர்யா. க்ளைமாக்சில் நூற்றுக்கணக்கான போலீஸார் மத்தியில் சிக்கிக்கொண்ட சமயத்தில் அவர் அதை சமாளிக்கும் விதம் நம்மால் யூகிக்க முடியாத ஒன்று.
குறைந்த அளவு காட்சிகளில் வந்தாலும் அட, நீயும் இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா என சொல்லும் விதமாக கீர்த்தி சுரேஷின் கேரக்டர் அவரது முந்தைய படங்களில் இருந்து நிறையவே மாறுபட்டிருக்கிறது. கதாநாயகிக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன்.. சிபிஐ அதிகாரியாக அவர் ரெய்டு நடத்தும் காட்சிகளில் ரம்யா.. ரம்யாதான் என சொல்ல வைக்கிறார்.
நீண்டநாளுக்கு பிறகு சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார்கள் நவரச நாயகன் கார்த்திக்கும், ஒளிப்பதிவாளராக இருந்து நடிகராக மாறிய சுரேஷ் மேனனும். அலட்டல் இல்லாத கார்த்திக்கின் நடிப்பை பார்க்கும்போது இன்றும் அவரது இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும் என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். மிடுக்கான வில்லத்தனம் காட்டும் அதிகாரியாக சோடைபோகாத நடிப்பை வழங்கியிருக்கும் சுரேஷ் மேனனை தேடி இனி நிறைய வாய்ப்புகள் குவியும்.
தனது முந்தைய படத்தைப்போல இந்தப்படத்திலும் ஆனந்த்ராஜின் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். வருவது அஞ்சு நிமிடம் என்றாலும் கூட அசத்தல் ஆனந்தராஜ். யப்பா.. ரொம்பநாள் கழித்து நந்தாவின் வேறு ஒரு முகத்தை, பார்ப்பதற்கே நன்றாக இருக்கிறது.. இப்படி வேறு ஒரு ரூட்டை பிடியுங்கள் நந்தா.. நீண்டநாளைக்குப்பிறகு நகைச்சுவை நடிகர் செந்தில் நமக்கு தரிசனம் கொடுத்திருக்கிறார். அவரது பெட்ரோமாக்ஸ் லைட், வாழைப்பழ காமெடிகளை போகிற போக்கில் டச் பண்ணியிருப்பதும் நல்ல ஐடியா.
பாத்ரூம் கதவை சாத்திக்கொண்டு சூர்யாவுக்கு பகீர் கிளப்பும் தம்பிராமையாவும் சூர்யாவுக்கு உதவுவதற்காக தெலுங்கில் பேசி ஜமாய்க்கும் சிவசங்கர் மாஸ்டர் போல இந்தி பேசுபவர்களை சமாளிக்கப்போவதாக சத்யன் காட்டும் பந்தாவும் நம்மை அறியாமல் சிரிக்க வைக்க உத்தரவாதம் தருகின்றன.
சில காட்சிகளில் மட்டுமே வரும் யோகிபாபு, கலையரசன் ஆகியோரும் நியாயமான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட் என்பதுபோல இடைவேளைக்குப்பின் என்ட்ரி கொடுத்தாலும் வழக்கமான தனது நையாண்டியால் ஸ்கோர் பண்ணுகிறார் ஆர்ஜே பாலாஜி.
அனிருத் இசையில் ‘சொடக்கு மேல” பாடலுக்கு தியேட்டரே ஆடாத குறைதான். பின்னணி இசையிலும் நம்மை திருப்திப்படுத்துகிறார் மனிதர். எண்பதுகளின் லுக்கை கொண்டுவர அற்புதமாக உழைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
கடந்த படத்தைப்போல ஜாலியாக மட்டுமல்லாமல், ஒரு நல்ல கருத்தையும் அழகாக இணைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். இடைவேளைக்குப்பின் கார்த்தி-சூர்யாவின் ஆடுபுலி ஆட்டம் சுவாரஸ்யம். இப்போது நடக்கும் அரசியல் களேபரங்களை அப்போதே யூகமாக பேசிக்கொள்வது போல வைத்திருப்பதும் புது யுக்தி தான். மேலும் இத்தனை நட்சத்திரங்களை வைத்து அலுப்பு தட்டாமல் ஒரு படத்தை கொடுப்பது ஒரு சவால் தான்.. ஆனால் தானே ‘சேர்த்த’ அந்த கூட்டத்தை வைத்து அதை சாதித்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.

Comments are closed.