“ஸ்ரீகாந்த் சொன்ன வார்த்தை தான் இன்றும் என் தாரகமந்திரம்” – சூர்யா

202

ஸ்ரீகாந்த்தின் அடுத்த அதிரடியாக வெளியாக உள்ள படம் தான் நம்பியார்.. ஸ்ரீகாந்த் ஜோடியாக சுனைனா நடித்துள்ள இந்தப்படத்தில் சந்தானம் ஒரு சர்ப்ரைசிங்கான கேரக்டரில் நடித்திருக்கிறார். பாலசந்தர் மற்றும் ஆர்.கண்ணனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசா சொன்ன கதையை கேட்டு மிரண்டுபோன ஸ்ரீகாந்த், சந்தானம் சொன்ன ஆலோசனைப்படி இதை தானே தயாரித்துவிடுவது என்கிற முடிவுக்கு வந்தாராம். இந்தப்படத்தின் ஆடியோ உரிமையை ‘சரிகம’ நிறுவனம் வாங்கியுள்ளது.

‘நம்பியார் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று மாலை தேவி திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. விஜய் ஆண்டனி இசையமைத்துள்ள இந்தப்படத்தின் விழாவில் சரத்குமார், சூர்யா, ஆர்யா, ஜீவா, சமுத்திரகனி, நமீதா உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்..

விழாவிற்கு சூர்யா வருகை தந்தது குறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது, “நான் யாரைப்பார்த்து அதிசயித்து, யார் நம் விழாவிற்கு வந்தால் நன்றாக இருக்கும் என மனதில் நினைத்தேனோ அவர் இந்த விழாவிற்கு வந்ததை விட எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை” என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

அதற்கு பதிலளிக்கும் விதமாக சூர்யா பேசியது ரொம்பவே டச்சிங்காக இருந்தது. “தெரிந்தவர்கள் பங்க்ஷனுக்கு கூட நான் அவ்வளவாக போனதில்லை.. ஆனால் எதோ ஒன்றுதான் இந்த விழாவுக்கு என்னை வரத்தூண்டியது. எனக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் நேரடி பழக்கம் கூட அவ்வளவாக இல்லை. ஆனால் பல வருடங்களுக்கு முன்பே எனக்கும் அவருக்குமான ஒரு மறைமுக தொடர்பு இருக்கிறது என்பது அவருக்கே கூட தெரிய வாய்ப்பில்லை. சினிமாவில் நான் மெதுவாக வளர்ந்துவந்த காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் அறிமுகமானபோது கொடுத்திருந்த ஒரு பேட்டியை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும்போது தன் தந்தை சொன்னதாக கூறிய ஒரு வாக்கியம் இன்றும் என் மனதில் அப்படியே இருக்கிறது. “நீ செருப்பு தைப்பவனாக இருந்தாலும் கூட அதிலும் முதன்மையானவனாக இருக்கவேண்டும்” என அவர் தந்தை அவருக்கு சொன்ன வாக்கியம் தான் இன்றும் கூட எனது சினிமா வாழ்க்கைக்கு தாரக மந்திரமாக இருக்கிறது. இந்த விழா ஸ்ரீகாந்த்தையும் எனது நட்பு வட்டத்தில் சேர்த்து அதை இன்னும் பெரிதாக்கி இருக்கிறது. நடிகராக மட்டுமல்லாமல் நிச்சயம் ஒரு தயாரிப்பாளராகவும் ஸ்ரீகாந்த் வெற்றி பெறுவார்” என வாழ்த்த, நெகிழ்ந்துவிட்டார் ஸ்ரீகாந்த்..

Comments are closed.