ஷங்கருக்கு சுரேஷ்கோபி போட்ட நிபந்தனைகள்…!

240

 

ஷங்கரின் படங்களில் ஹீரோவைத்தவிர வில்லனோ அல்லது ஹீரோவுக்கு சம்மான இன்னொரு கதாபாத்திரமோ வலுவானதாக இருக்கும். அந்தவகையில் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் விக்ரமுடன் இணைந்து பிரதான கேரக்டரில் மலையாள ஆக்ஷன் கிங் சுரேஷ்கோபி நடித்திருப்பது நமக்கு தெரியும்..

இந்தப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தவேண்டும் என்பதால்தான் கடந்த இரண்டு வருடங்களில் மலையாளத்தில் தான் நடித்துவந்த படங்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டார் சுரேஷ்கோபி. அத்துடன் ‘ஐ’ படத்தில் நடிப்பதற்காக சில நிபந்தனைகளையும விதித்திருக்கிறார். அதற்கு ஷங்கர் ஒப்புக்கொண்ட பின்னரே ‘ஐ’ படத்தில் நடித்துள்ளார்.

நிபந்தனைகளில் முக்கியமானது படத்தின் எந்த புரமோஷன் நிகழ்ச்சியிலும், அல்லது நூறாவது நாள் வெற்றிவிழா நிகழ்ச்சியிலும் கூட கலந்துகொள்ள மாட்டேன் என்பதுதான். அதனால் தான் அவர் இங்கே நடைபெற்ற ‘ஐ’ படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கூட கலந்துகொள்ள வரவில்லை. பொதுவாக மலையாளத்தில் நடக்கும் நட்சத்திர விழாக்களிலேயே அவர் கலந்துகொள்வது அரிது தான்..

அடுத்த கண்டிஷன் இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் நடிக்க மாட்டேன் என்பதுதான்.. மேலும் மது அருந்துவது அல்லது புகை பிடிப்பது போன்ற காட்சிகளில் உறுதியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறிவிட்டார். அவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘தி டால்பின்ஸ்’ படத்தில் கூட பல மதுபான கடைகளுக்கு உரிமையாளராக நடித்திருந்தாரே தவிர, மது குடிக்கும் காட்சி ஒன்றில் கூட நடிக்கவில்லை.

இத்தனை நிபந்தனைகளுக்கும் சம்மதம் தெரிவித்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார் ஷங்கர். இன்னொரு ஆச்சர்யமான விஷயம் சுரேஷ்கோபியை ஷங்கர் தேர்ந்தெடுத்தது அவர் நடித்த படங்களை பார்த்து அல்ல.. அவர் நடத்திய ‘கோடீஸ்வரன்’ நிகழ்ச்சியை பார்த்து தானாம். முக்கியமான இன்னொரு விஷயம் ஊடகங்களில் வெளியாவதுபோல ஷங்கருக்கும் அவருக்கும் இடையே துளியளவு கூட கருத்து வேறுபாடு எதுவும் இல்லையாம்..

இசைவெளியீடு மற்றும் புரமோஷனால் நிகழ்ச்சிகளுக்கு வருகை தராதது போன்ற நிகழ்வுகளினால் அப்படி ஒரு தோற்றத்தை சிலர் உருவாக்கிவிட்டனர் என்கிறார் சுரேஷ்கோபி. இவையனைத்தும் சமீபத்தில் மலையாள ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த ஒரு பேட்டியின்போது கூறிய சுவராஸ்யமான தகவல்கள் தான்.

Comments are closed.