கார்த்தி, நாகார்ஜுனா நடிக்கும் படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகிவிட்டார் என இரண்டு நாட்களாக செய்திகள் அடிபட்டு வந்தன. இருந்தாலும் பலர் அது வழக்கம்போல வதந்திதான் என சொல்லிக்கொண்டிருந்த நிலையில் அது உண்மைதான் என்று ஆணித்தரமாக கூறும் விதமான நிகழ்வு ஒன்று அரங்கேறி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்.. அந்தப்படத்தை தயாரிக்கும் பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம், ஸ்ருதிஹாசன் மற்ற எந்த படங்களிலும் நடிக்க புதிய ஒப்பந்தம் போடக்கூடாது என நீதிமன்றம் மூலம் தற்காலிகமாக தடை வாங்கியுள்ளது. காரணம் தங்களது படத்தில் நடிக்க ஒப்பந்தமான ஸ்ருதி, தற்போது திடீரென விலகியதால் தங்களுக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறித்தான் இந்த தடையை வாங்கியுள்ளது.
ஸ்ருதி திடீரென ஒரு ஈமெயில் ஒன்றின் மூலமாக தன்னிடம் அவர்கள் கேட்ட தேதிகள் இல்லை என்றும், அவை மற்ற பட தேதிகளுடன் இடிக்கின்றன என்றும் தான் விலகுவதற்கு காரணம் சொல்லியுள்ளார். ஆனால் ஸ்ருதிஹாசனிடம் பேசி, அவருக்கு தோதான தேதிகள் இருப்பதை உறுதி செய்தபின்னர் தான், தங்கள் படத்தில் நடிக்கவே ஒப்பந்தம் போட்டோம் என்கின்றனர் பிக்சர் ஹவுஸ் நிறுவனத்தினர்.
ஸ்ருதியின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்து அவர் மீது சிவில் மற்றும் கிரிமினல் என இரண்டு வித வழக்குகளை தொடுத்துள்ளனர் இந்த நிறுவத்தினர். மனுவை விசாரித்தபோது, தயாரிப்பாளரின் பக்கம் நியாயம் இருப்பதாக கருதிய நீதிமன்றம் இந்தப்பிரச்சனையில் முடிவு தெரியும் வரை ஸ்ருதிஹாசன் படமோ, விளம்பரப்படமோ எதிலும் நடிக்க புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்து போடக்கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Comments are closed.