“தமிழோடு ஆங்கிலமும் கட்டாயம் படிக்கவேண்டும்” – மாணவர்களுக்கு சிவகுமார் அறிவுரை

203

கடந்த 34 வருடமாக நடிகர் சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் ப்ளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 35வது வருடமாக மாணவ, மாணவிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

விழாவில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா ஆகியோர் பங்கேற்று 25 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூபாய் 10 ஆயிரம் வீதம் ரூபாய் இரண்டரை லட்சம் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். ஏழை மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டு நடந்துவரும் தாய் தமிழ் பள்ளிக்கு ரூபாய் ஒரு லட்சமும், வாழை சமூக சேவை இயக்கத்துக்கு ரூபாய் இரண்டு லட்சமும் வழங்கினார்கள்.

விழாவில் சிவகுமார் பேசும்போது, “இனிவரும் காலங்களில் தமிழுடன் ஆங்கிலமும் சேர்த்து கட்டாயம் படிக்கவேண்டும். தமிழ் பெற்ற தாய் என்றால், ஆங்கிலம் கட்டிய ஆசை மனைவி.. இரண்டையுமே ஒதுக்க முடியாது.. அதேபோல காதல் மனைவிக்காக கட்டிய தாயை புறக்கணிக்கவும் கூடாது” என்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தினார்.

வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தி சூர்யா பேசுகையில், “கடந்த 34 வருடமாக சிவகுமார் கல்வி அறக்கட்டளை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. வேறு உதவிகளை விட கல்விக்கு செய்கின்ற உதவி ஒருவருக்கு காலத்திற்கும் பயன்படும். அகரம் பவுண்டேசன் அடிதட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

இந்தவருடத்துடன் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்களின் கல்லூரி கனவை நனவாக்கி இருக்கிறோம். இந்தவருடத்தில் இருந்து கல்லூரி முடித்து எதிர்கால வேலையை தேர்ந்தெடுக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் நேர்முகத்தேர்வையும் தாங்கள் சேரவிருக்கும் வேலையையும் எதிர்கொள்ளும் விதமாக பயிற்சி வகுப்புகள்(வொர்க்ஷாப்) நடத்த இருக்கிறோம். இதற்கான இடத்தை மதுராந்தகத்தில் உள்ள சாய்ராம் கல்லூரி நிறுவனம் அகரம் பவுண்டேஷனுக்கு வழங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தாய் தமிழ் பள்ளியை நடத்திவரும் பேராசிரியர் கல்யாணி மற்றும் அகரம் பவுண்டேசன் செயலாளர் ஜெயஸ்ரீ ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments are closed.