’சட்டம் என் கையில்’ விமர்சனம்

25

நடிகர்கள் : சதீஷ், பாவல் நவகீதன், அஜய்ராஜ், மைம் கோபி, ரித்திகா, வித்யா பிரதீப், ராமதாஸ், பாவா செல்லதுரை, அஜய் தேசாய்
இசை : எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்
ஒளிப்பதிவு : பி.ஜி.முத்தையா
இயக்கம் : சாச்சி
தயாரிப்பு : சண்முகம் கிரியேஷன்ஸ் – பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஆனந்தகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்யநாராயணன்

சதீஷ் நாயகனாக நடிக்க, சாச்சி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘சட்டம் என் கையில்’ ரசிகர்களை கைதட்ட வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

ஒரு விபத்து, ஒரு கொலை மற்றும் காவலர்களுக்கு இடையே நடக்கும் யூகோ போட்டி இந்த மூன்று சம்பவங்களும் ஒரே இரவில் நடக்க, இதன் பின்னணியில் பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ஆடுபுலி ஆட்டத்தை கிரைம் திரில்லர் ஜானர் சொல்வதே ‘சட்டன் என் கையில்’ படத்தின் கதை.

சதீஷ் காரில் பயணிக்கும் ஆரம்பக் காட்சியிலேயே அவரிடம் இருக்கும் பதற்றம் படம் பார்க்கும் பார்வையாளர்களிடமும் தொற்றிக் கொள்ளும் வகையில், திரைக்கதையை வடிவமைத்திருக்கும் இயக்குநர் சாச்சி, பிணத்துடன் அவரை காவல் நிலையத்தில் உட்கார வைத்து பதற்றத்தை அதிகரிக்கச் செய்வதோடு, தப்பிப்பதற்காக சதீஷ் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை பயணிக்க வைக்கிறது.

காவல் நிலையத்தை மையப்படுத்தி, ஒரு இரவில் நடக்கும் மூன்று சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது, என்பது யூகிக்க முடிந்தாலும், இயக்குநர் சாச்சியின் திரைக்கதை மற்றும் திருப்பம் நிறைந்த காட்சிகள் யூகங்களை உடைத்து படத்தை சுவாரஸ்யமாக பயணிக்க வைக்கிறது.

நகைச்சுவையை தவிர்த்துவிட்டு கதையின் நாயகனாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சதீஷ், தனது அளவான நடிப்பு மூலம் திரைக்கதைக்கு உயிரோட்டம் அளித்திருப்பதோடு, தன்னால் இப்படிப்பட்ட கதாபாத்திரங்களையும் நேர்த்தியாக கையாள முடியும், என்பதை நிரூபித்து நகைச்சுவை நடிகர் என்ற பிம்பத்தை உடைத்திருக்கிறார்.

இயக்குநர் வெங்கட் பிரபுவின் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து விட்டு கவனம் பெறாமல் பயணித்துக் கொண்டிருந்த அஜய்ராஜ், இந்த படத்தில் தனக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கவனம் ஈர்க்கிறார். மற்றொரு சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாவல் நவகீதன், வழக்கம் போல் தனது இயல்பான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வென்பா, வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் என படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் நடிப்பிலும் குறையில்லை.

ஒரு இரவில் நடக்கும் கதையின் பெரும்பாலான காட்சிகள் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நடந்தாலும், அதை வெவ்வேறு கோணத்தில் காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் பணி படத்தின் தரத்தை பல மடங்கு அதிகரிக்கச் செய்திருக்கிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் மார்டின் டைடஸ்.ஏ, இயக்குநரின் பலமான திரைக்கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.

படத்தின் ஆரம்பத்திலேயே பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்துவிடும் இயக்குநர் சாச்சி, அடுத்தடுத்த காட்சிகள் மற்றும் அதில் இருக்கும் திருப்பங்கள் மூலம் ரசிகர்களை தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவதோடு, அனைத்து விசயங்களையும் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லி படத்தை வேகமாக நகர்த்தி சென்றிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு எளிமையான கதையை தனது பலமான திரைக்கதை மூலம் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படமாக மாற்றியிருக்கும் இயக்குநர் சாச்சி, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதை நடக்கும் இடம் போல் ரசிகர்களையும் ஒரே இடத்தில் உட்கார வைத்து ரசிக்க வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 3.5/5

Comments are closed.