
‘பணத்தை சேர்த்து வச்சானோ இல்லையோ நல்ல பேரை சேர்த்து வச்சுருக்காண்டா’ என கிராமத்துப்பக்கம் இப்போதும் சொல்வதுண்டு. சினிமா விஷயத்தில் சசிகுமாருக்கு இந்த வார்த்தை நன்றாகவே பொருந்தும். அந்தவகையில் தனது ஆத்மதிருப்திக்காக புதிய தளத்திலான படங்களாக தயாரித்துவரும் சசிகுமாருக்கு தான் நடித்த, இயக்கிய படங்களை விட தயாரித்த படங்கள் மிகப்பெரிய கௌரவத்தை தேடிக்கொடுத்து வருகின்றன.
ஏற்கனவே ‘பசங்க’, ‘தலைமுறைகள்’ படங்களை தொடர்ந்து சசிகுமாரின் தயாரிப்பில் அவரே ஹீரோவாகவும் நடித்து வெளியான பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்திற்கும் ஒரு விருது கிடைத்திருப்பது யாருக்கும் எளிதில் கிடைக்காத கெளரவம்.. இந்த விருது சிறந்த இசையமைப்புக்காக இளையராஜாவுக்கு கிடைத்துள்ளது.
இதுகுறித்து சசிகுமார், கூறும்போது “எமது கம்பெனி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது கிடைத்திருக்கிறது. இசையுலகின் ஆகச்சிறந்த பெருமகன் இளையராஜா அவர்களின் 1000-வது படமாக ‘தாரை தப்பட்டை’ அமைந்ததே எங்களுக்கான பெரிய விருது என மகிழ்ந்திருந்த வேளையில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதும் கிடைத்திருப்பது இரட்டிப்பு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது” என பெருமிதத்துடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சசிகுமார்.
அதேபோல வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் சமுத்திரக்கனியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.. “எனக்கு இவ்விருது கிடைக்க உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும், ‘விசாரணை’ படக்குழுவுக்கும், தேசிய விருது தேர்வுகுழுவுக்கும் எனது நன்றியை இங்கு தெரிவித்து கொள்கிறேன். ‘விசாரணை’ படத்திற்கு சிறந்த தமிழ் படம் விருதும், காலம் சென்ற படத்தொகுப்பாளர் கிஷோர் அவர்களுக்கு அதே ‘விசாரணை’ படத்திற்காக சிறந்த படத்தொகுப்பாளர் விருதும் கிடைக்கப்பெற்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ‘விசாரணை’ படக்குழுவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்” என கூறியுள்ளார் சமுத்திரக்கனி.
Comments are closed.