திருச்சியில் ரஜினி ரசிகர்களால் களைகட்டிய மாநாடு…!

279

rajini maanadu in trichy

ஒருபக்கம் அதிமுக அணிகளின் இணைப்பு, இன்னொரு பக்கம் அரசாங்கத்தின் மீது தொடரும் கமலின் விமர்சனங்கள் என அரசியல் அரங்கு பரபரப்பாகி கொண்டிருக்க, இந்தநிலையில் ரஜினியின் அரசியல் நுழைவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் விதமாக மாநாடு ஒன்றை நடத்தியுள்ளார் தமிழருவி மணியன்..

நடத்தியது அரசியல்வாதியான தமிழருவி மணியன் தான் என்றாலும், நடத்தப்பட்டது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காத்தான்.. நேற்று மாலைநடைபெற்ற மாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு வந்து அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தனர்.

மாநாட்டில் பேசிய தமிழருவி மணியன், “மக்களின் பிரச்னையை தீர்க்கவேண்டும் என்பதே தனது நோக்கம் என்று ரஜினி தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார். மேலும் காமராஜரின் ஆட்சியை மீண்டும் காணவேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் நதிகள் இணைப்பை பத்து ஆண்டுகளில் செய்து முடிக்கமுடியும் என்றும் ஊழல் இல்லாத ஆட்சி அமைய வேண்டும் என்பதே தனது இலக்கு என்றும் நிச்சயமாக அரசியலுக்கு வருவதற்கு முடிவு எடுத்துவிட்டதாகவும் ரஜினிகாந்த் கூறியதாக தமிழருவி மணியன் தெரிவித்தார்.

ரஜினி நேரடியாக அழைப்பு விடுக்க வில்லை. அவர் ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை. தமிழருவி மணியனும் இது அரசியல் விழிப்புணர்வு மாநாடு என்று மட்டும்தான் அறிவித்து இருந்தார். ரஜினியின் அரசியல் தேவையா என்ற கேள்வியை முன்னிறுத்தி நடத்தப்பட்ட மாநாடு.

ஆனால் ரஜினி ரசிகர்கள் தாங்களாகவே வாகனங்களில் வந்து திருச்சியை திணறடித்து விட்டனர். நீண்ட காலத்திற்குப் பிறகு பணமும் மதுவும் இல்லாமல் தமிழகம் கண்ட மாநாடு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.

ஆயிரக்கணக்கான வாகனங்களில் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திராவிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் யாரும், மதுக்கடைப் பக்கம் போகாமல் காந்திய மக்கள் இயக்கத்தின் கோட்பாடுகளை கடைப்பிடித்துள்ளனர்.

மாநாட்டுக்கு வருவதற்கு முன்பாகவோ அல்லது முடிந்து வீடு திரும்பும் வழியிலோ, யாருமே டாஸ்மாக் பக்கம் போகவில்லை. குறைந்த அளவிலேயே போலீசார் பாதுகாப்பிற்கு வந்திருந்த போதிலும், அவர்களுக்கு எந்த சிரமமும் கொடுக்காமல் கட்டுக்கோப்புடன் நடந்து கொண்டார்கள்.

வாகனங்களை நிறுத்தி, விவரங்கள் சேகரித்த போலீசாருக்கும், அவர்கள் கடமையைச் செய்ய ஒத்துழைப்பு கொடுத்தனர். மாநாட்டு திடலிலும், சிறப்புரை ஆற்றிய அனைத்து தலைவர்களுடைய பேச்சுக்களையும் நன்றாக கவனித்து உள்வாங்கிக் கொண்டனர்.

Comments are closed.