
பொதுவாக ஒருகாலத்தில் பிரபலமாக உலா வந்த இயக்குனர்கள் தங்களது படங்கள் தொடர்ந்து தோல்வி அடைய ஆரம்பித்தாலோ, அல்லது படங்களை இயக்கிக்கொண்டிருக்கும்போதே நடிக்க அழைப்பு வந்து அதில் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டாலோ டைரக்சனை அப்படியே கை கழுவிவிட்டு நடிப்பு பக்கம் தாவி விடுவார்கள். முன்பு மணிவண்ணன் இந்த ரூட்டை போட்டு வைத்தார். அதன் பிறகு, மனோபாலா, ராஜ்கபூர், தம்பி ராமையா ஆகியோர் இந்த வழியாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர்களாக மாறிவிட்டார்கள்.
தற்போது இந்தப்பட்டியலில் லேட்டாக இணைந்திருக்கிறார் இயக்குனர் ஆர்.வி உதயகுமார். ஒருகாலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த் உட்பட முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி சாதனை படைத்த ஆர்.வி.உதயகுமார், அந்த சமயத்திலேயே தனது படங்களில் லைட்டாக ஏதாவது ஒரு சின்ன கேரக்டரில் நடித்துவிட்டு போவார்.
இடையில் டைரக்சன், நடிப்பு இரண்டையும் விட்டு ஒதுங்கியவரை, இப்போது நடிக்கும் வாய்ப்புகள் தேடிவர, தற்போது முழுநேர நடிகராகிவிட்டார் ஆர்.வி.உதயகுமார். பாண்டிராஜ் இயக்கும் ‘ஹைக்கூ’ படத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக, பாபி சிம்ஹா நடிக்கும் ‘பாம்புசட்டை’ படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கிறார்.
இதுதவிர ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ உட்பட பெயரிடப்படாத மூன்று படங்களிலும் நடிக்கிறார். கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து கேரக்டர் ரோல்களிலும், வில்லனாகவும் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஆர்.வி.உதயகுமார். காலம் கடந்து எடுத்தாலும் நல்ல முடிவைத்தான் எடுத்திருக்கிறார்.
Comments are closed.