அரசியல்வாதிகளுக்கு நெத்தியடி கேள்வியுடன் இலங்கை பயணத்தை ரத்து செய்த ரஜினி..!

194

rajini 25

இலங்கையில் வீடுகளை இழந்த மக்களுக்கு லைக்கா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் சார்பில் வவுனியாவில் 150 வீடுகளை இலவசமாக வழங்கும் விழா யாழ்ப்பாணத்தில் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி நடப்பதாக இருந்தது. இந்த விழாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்டு, அந்த வீடுகளின் சாவியை பயனாளிகளுக்கு வழங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

மேலும் கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு ஆகிய இடங்களில் உள்ள மக்களைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மக்கள் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த விழாவில் கலந்துகொள்வதை ரத்துசெய்வதாக ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் ரஜினிகாந்த், மிகுந்த மண வருத்ததுடன் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளதுடன் தன்னை போகக்கூடாது என தடுத்தவர்களுக்கு நெத்தியடி கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்..

தங்களுடைய சுய நிர்ணய உரிமைக்காக போராடி தமிழர்கள் மடிந்த அந்த மண்ணைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவும் இந்த விழாவில் கூடவிருக்கும் பல லட்சக்கணக்கான மக்களைக் காண வேண்டும் என்பதற்காகவே இதில் கலந்துகொள்ள சம்மதித்ததாக ரஜினி கூறியிருக்கிறார்.

அதேபோல, இந்தப் பயணத்தின்போது இலங்கை அதிபர் மைத்திரி பால சிறிசேனவைச் சந்திக்க நேரம் கேட்டிருந்ததாகவும் அப்படி நேரம் கிடைத்தால் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்கப்படுவது குறித்து பேச நினைத்திருந்ததாகவும் ரஜினி தன் அறிக்கையில் கூறியிருக்கிறார். ஆனால் அடுத்து அவர் கூறியுள்ள விஷயம் தான் கவனிக்க வைக்கிறது.

தற்போது எதிர்ப்பு எழுந்திருப்பதால், இந்தத் தலைவர்கள் கூறும் காரணங்களை ஏற்க முடியாவிட்டாலும் அவர்களது வேண்டுகோளை ஏற்பதாக ரஜினி கூறியிருக்கிறார். “நான் அரசியல்வாதி அல்ல. மக்களை மகிழ்விக்கும் நடிகன். எதிர்காலத்தில் இலங்கை சென்று தமிழ் மக்களைச் சந்தித்து, போர் நடந்த புனித பூமியைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால், அதை அரசியலாக்கி போக விடாமல் செய்துவிட வேண்டாம்” என நெத்தியடியாக அரசியல்வாதிகளுக்கு ஒரு ‘பஞ்ச்’ பதிலடியையும் கொடுத்துள்ளார்.

Comments are closed.