’பத்து தல’ விமர்சனம்

264

நடிகர்கள் : சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன், அனு சித்தாரா, டீஜே அருணாச்சலம், கலையரசன், சந்தோஷ் பிரதாப், மது குருசாமி, ரெடின் கிங்ஸ்லி, செண்ட்ராயன், சவுந்தரராஜன், கண்ணன் பொன்னையா, சாயீஷா, ஜோ மல்லூரி
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : பரூக் ஜே.பாட்ஷா
இயக்கம் : ஒபிலி என்.கிருஷ்ணா
தயாரிப்பு : ஜே.இ.ஞானவேல் ராஜா, ஜெயந்திலால் கட்டா

சிம்பு, கெளதம் கார்த்திக் நடிப்பில், ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்திலால் கட்டா இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘பத்து தல’. கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘மஃப்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

கன்னியாக்குமரி மாவட்டத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மணல் கொள்ளை மாஃபியா தலைவன் சிலம்பரசன், தமிழ்நாட்டு முதலமைச்சரை கடத்தி விடுகிறார். காணாமல் போன முதலமைச்சர் என்ன ஆனார், என்பது தெரியாமல் இருக்கும் அரசு, தகுந்த ஆதாரங்களுடன் முதலமைச்சரை கடத்தியது சிலம்பரசன் தான் என்பதை நிரூபிப்பதற்காக அண்டர்கவர் ஆபரேஷன் ஒன்றை அரங்கேற்றுகிறது. அந்த ஆபரேஷன் மூலம் சிம்புவின் கோட்டைக்குள் நுழைந்து, அவருடைய மாஃபியா கும்பலில் ஒருவராக வலம் வரும் காவல்துறை அதிகாரி கெளதம் கார்த்திக், சிம்புவுக்கு எதிரான ஆதரங்களை திரட்டி அவரை கைது செய்தாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

ஏ.ஜி.ராவணன் என்ற ஏ.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் மணல் மாஃபியா தலைவனாக சிலம்பரசன் டி.ஆர் மிரட்டியிருக்கிறார். இளமை மற்றும் முதுமை இரண்டுக்கும் நடுவில் இருக்கும் வயதில் நடித்திருக்கும் சிலம்பரசனின் ஒவ்வொரு அசைவும் மாஸாகவும், கிளாஸாகவும் இருக்கிறது. அதிலும், “நான் ஆண்ட பரம்பரை” என்று வில்லன் பேசும் வசனத்திற்கு, “நான் உங்களை அழித்த பரம்பரை” என்று சிலம்பரசன் பதில் சொல்லும் போது திரையரங்கே அதிரும் வகையில் கைதட்டல் காதை பிளக்கிறது.ஏ.ஜி.ஆர் என்ற ஆளுமை பற்றி முதல் பாதி முழுவதும் கொடுக்கப்படும் பில்டப்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் எண்ட்ரி கொடுக்கும் சிம்பு, இரண்டாம் பாதி முழுவதையும் தனது நடிப்பு மூலம் சுமந்திருப்பதோடு, தங்கை செண்டிமெண்டிலும் கவர்கிறார்.

படத்தின் மற்றொரு நாயகனாக நடித்திருக்கும் கெளதம் கார்த்திக், இதுவரை இல்லாத வகையில் தோற்றத்திலும், நடிப்பிலும் முற்றிலும் வித்தியாசத்தை காட்டி கவனம் பெறுகிறார். ஆரம்பத்தில் மாஃபியா கூட்டத்தில் ஒருவராக அறிமுகமாகி பிறகு அவரது உண்மையான கதாபாத்திரம் தெரிய வரும் போது படத்தின் வேகம் அதிகரிக்க தொடங்குகிறது. முரட்டுத்தனமான முகம், அழுத்தமான நடிப்பு, சண்டைக்காட்சிகளில் வேகமான செயல்பாடு என முழுமையான ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் கெளதம் கார்த்திக், சண்டைக்காட்சிகளில் எதை செய்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும்படி இருப்பது படத்திற்கு மட்டும் இன்றி அவருடைய கதாபாத்திரத்திற்கும் பலம் சேர்த்திருக்கிறது.

கதாநாயகனுடன் டூயட் பாடல் இல்லாத கதாநாயகி வேடம் என்றால் பிரியா பவானி சங்கர் தான் இயக்குநர்களின் நினைவுக்கு வருவார் போலிருக்கிறது. இந்த படத்திலும் கதாநாயகனை காதலிக்கும் அம்மணி அவருடன் டூயட் பாடமல் பயணித்திருக்கிறார். இருந்தாலும் கதையுடன் பயணிக்கும் தாசில்தார் கதபாத்திரத்தில் குறையில்லாமல் நடித்திருப்பதோடு, ஒரு சிறு காட்சியில் குட்டை டவுசர் போட்டு ரசிகர்களை ஏங்கவும் வைத்திருக்கிறார்.

நாஞ்சிலார் குணசேகரன் என்ற அரசியல் தலைவர் கதபாத்திரத்தில் நடித்திருக்கும் கெளதம் மேனன், மன்னர் பரம்பரை என்ற ஆணவத்தோடு வலம் வரும் அரசியல்வாதி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். தொடர் தோல்வியால் துவண்டு போவதோடு, சிம்பு மீது இருக்கும் தனது கோபத்தை தனது உதவியாளர் மீது காட்டும் காட்சியில் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறார்.

அனு சித்தாரா, சந்தோஷ் பிரதாப், கலையரசன், கன்னட நடிகர் மது குருசாமி, டீஜே அருணாச்சலம், கண்ணன் பொன்னையா, செண்ட்ராயன், ஜோ மல்லூரி என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இருந்தாலும் அனைவரும் அளவாக பயன்படுத்தப்பட்டிருப்பதோடு, கவனம் ஈருக்கும் வகையிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

’ராவடி…” பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் நடிகை சாயிஷா, படம் முழுவதும் வந்திருக்கலாமே!, என்று ரசிகர்கள் ஏங்கும் வகையில் தனது நடன அசைவுகள் மூலம் அசத்தியிருக்கிறார். அவரது வேகமான நடன அசைவுகளும், கவர்ச்சியான தோற்றமும் பாடலை ரசிக்க வைப்பதோடு, திரையரங்கில் ஒன்ஸ்மோர் கேக்க வைக்கிறது.

ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷாவின் ஒளிப்பதிவு படத்தை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறது. சிலம்பரசன், கெளதம் கார்த்திக் ஆகியோரை இதுவரை பார்க்காத ஒரு லுக்கில் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷா, படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை முழு படத்தையும் ஆக்‌ஷன் உணர்வோடு பயணிக்க வைத்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் செண்டிமெண்டையும் ரசிகர்கள் மனதில் பதிய வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் வகையில் ஹிட்டாகி விட்டது. காட்சிகளுடன் சேர்ந்து பார்க்கும் போது பாடல்கள் கூடுதல் சிறப்பை பெறுகிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

சிம்புவின் வயதுக்கு மீறிய கதாபாத்திரம் என்றாலும் அதில் அவரை ஏற்றுக்கொள்ளும்படி செய்திருக்கும் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா, முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக இயக்கியிருந்தாலும், அதிலும் காதல், செண்டிமெண்ட், காமெடி, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளை சேர்த்து அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாக கொடுத்திருக்கிறார்.

சிம்பு ரசிகர்கள் கொண்டாடும் வகையில் காட்சிகளை மாஸாக வடிவமைத்திருக்கும் இயக்குநர் ஒபிலி என்.கிருஷ்ணா, கதையை சிதைக்காமல் பார்த்துக்கொண்டதோடு, சிம்பு ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாகவும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இதில் சில காட்சிகள் ரசிகர்களை திருப்திபடுத்தினாலும், சில படத்திற்கு தொய்வை கொடுக்கிறது.

ரேட்டிங் 3/5

Comments are closed.