
மிர்ச்சி செந்தில் ஐ.ஏ.எஸ். படிக்க ஆசைப்படுகிறார். மின்சார வாரியத்தில் வேலைபார்க்கும் ‘ஆடுகளம்’ நரேன்-சரண்யாவின் மகளானா துஷாராவை காதலிக்கிறார். ஆனால் ரோட்டோரம் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் அவரது தந்தை இளவரசு மகனை ஒரு ஹோட்டல் முதலாளி பொண்ணுக்கு கட்டி வைத்து அதன் மூலம் தானும் பல ஹோட்டல்களுக்கு சொந்தக்காரர் ஆக ஆசைப்படுகிறார்.
தன் கணவநின் ஐ.ஏ.எஸ் லட்சியம் தங்கள் காதல் திருமணத்தால் கலைந்துபோனதை நினைத்து குற்ற உணர்வுடன் வாழும் சரண்யா, தனது மகளின் வாழ்க்கையும் அதுபோல ஆகக்கூடாது என நினைத்து, தனது மகள் விரும்பியவனையே திருமணம் செய்துவைப்பதோடு அவனது ஐ.ஏ.எஸ் கனவை நனவாக தனது கணவருடன் சேர்ந்து முயற்சி எடுக்கிறார். ஒரு பக்கம் தனது தந்தையின் எதிர்ப்பு, மற்றொரு பக்கம் தேர்வில் தொடர் தோல்வியால் ஆரம்பத்தில் துவளும் செந்தில் இறுதியில் எப்படி ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆகிறார் என்பதுதான் ‘பப்பாளி’யின் கதை.
மிர்ச்சி செந்தில் தான் கதாநாயகன்.. ஹீரோவாக முதல் படம். பாதிப்படம் வரை சீரியல் ஞாபகத்திலேயே கலாட்டா செய்பவர் இடைவேளைக்குப்பின் பொறுப்புணர்ந்து நடித்திருக்கிறார். என்றாலும் அவரை தங்களது பண்பட்ட நடிப்பால் ஓவர்டேக் செய்து விடுகிறார்கள் ஆடுகளம் நரேனும் இளவரசுவும். அதிலும் தன மகன் தன்னை எதிர்த்து திருமணம் செய்து, தன கனவை தரைமட்டமாக்கிவிட்டான் என்பது தெரிந்ததும் இளவரசுவின் அட்ராசிட்டி இருக்கிறதே.. சூப்பர்..
இந்த இருவரின் கதாபத்திரங்கள் மூலமாக பாசிடிவ், நெகட்டிவ் என எதிர்மறையான குணாதிசயங்களை சரியாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் கோவிந்த மூர்த்தி. சரண்யா பொன்வண்ணன் தான் இந்தக்கதையின் மையத்தூணே.. தனது மகளின் காதலுக்கு துணை நிற்பது, மருமகனை மகனாக நினைத்து அவரது லட்சியத்தை அடைய உறுதுணையாய் இருப்பது என ஜொலித்திருக்கிறார்.
கதாநாயகி துஷாரா பேரழகி இல்லை. அதற்காக அவரை குறை சொல்லவும் முடியாது. இடைவேளைக்குப்பின் தான் அவரது கேரகடர் மேல் மரியாதை வருகிறது. ஜெகன், சிங்கம்புலி என காமெடிக்கு இருவர் இருந்தாலும் காதல் தீவிரவாதியாக வந்து காட்சிக்கு காட்சி கைதட்டலை அள்ளுகிறார் சிங்கம்புலி.
கருப்பசாமி குத்தகைதாரர் படத்தை எடுத்த கோவிந்த மூர்த்தியா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறார் என இடைவேளை வரையிலான சுரத்தில்லாத காட்சிகள் நம்மை நம்பிக்கை இழக்க வைப்பது உண்மை. அற்புதமான ஒரு மெசேஜை சொல்லியிருக்கும் இயக்குனர் முதல் பாதியில் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து, தான் சொல்லவந்த விஷயத்தால் இன்டர்வெல்லுக்குப் பின் நம்மை அப்படியே கட்டிப்போட்டு விடுகிறார் மனிதர்.
இதுவரை ஒருவனின் வெற்றிக்கு அவனது பெற்றோர்களோ, அண்ணனோ, நண்பர்களோ அல்லது மனைவியோ, காதலியோ உதவி செய்வதாக வந்த படங்களை பார்த்திருப்பீர்கள். ஆனால் கானல் நீராகப்போன தங்களது சிறு வயது கனவை தங்களது நிறைவேற்ற மருமகனுக்கு துணை நிற்கும் மாமனார் மாமியாரைப் பற்றி இதுவரை படம் எதுவும் வந்ததில்லை. அந்தக்குறையை போக்கியிருக்கிறது ‘பப்பாளி’. அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒரு படம் இது.
Comments are closed.