“நகரத்து குழந்தைகளுக்கான கல்வி எது…?” – பசங்க-2 மூலம் பதில் சொல்லும் பாண்டிராஜ்

217

Attakathi_Movie_Press_Meet_Stillsb42a7f236f9cb3deeca540c8db0ad5d1
டிச-4ஆம் தேதி தான் இயக்கியுள்ள ‘பசங்க-2’ படத்தின் ரிலீசுக்காக எந்தவித டென்சனும் இல்லாமல் இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். காரணம் இது வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” எனும் பாண்டிராஜ் சூர்யா, அமலாபால் இருந்தாலும் கூட இது குழந்தைகளுக்கான படம் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்.

படத்தை பற்றி அவருடன் நடத்திய நேர்காணலில் இருந்து….

‘பசங்க’ கிராமத்து மாணவர்கள் கதை.. பசங்க-2..?

பசங்க 2 படம் இங்கு நகரத்தில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழும் நம் குழந்தைகளை பற்றியது. இந்த நகரத்து குழந்தைகளின் உலகத்தையும் அவர்கள் பயிலும் கல்வி முறையைப் பற்றியும் அதில் எந்த மாதிரியான கல்விமுறை சிறந்தது என்றும் காட்டியுள்ளோம். பசங்க 1 ல் நடித்த எந்த கதாபாத்திரங்களும் இதில் இடம் பெறவில்லை

மீண்டும் ‘பசங்க’ளை பற்றி படம் எடுக்கும் எண்ணம் எப்போது வந்தது..?

இந்த படத்திற்கான கதை “வம்சம்” திரைப்படம் முடிந்த பொழுதே கிடைத்து விட்டது. ஆனால் இந்த மாதிரியான கதையை உடனே எடுத்து மக்களுக்கு சொல்ல முடியாது அதைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு இருக்க வேண்டும். அதே சமயத்தில் படத்தில் சொல்லிய கருத்துகளின் நம்பகத்தன்மை குறையாமல் இருக்க வேண்டும் அதனால் சுமார் இரண்டு வருடம் ஆய்வு நடத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அந்த சமயங்களில் சும்மாவும் இருக்க முடியாது என்பதால் மற்றொரு பக்கம் “கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தையும் இயக்கினேன்.

கொஞ்சம் அறிவியல் ரீதியான படமாக இருக்குமோ..?

படத்திற்கான ஆய்வு என்பது சின்ன சின்ன விஷயங்கள் மட்டுமே யாரும் இது அறிவியல் ரீதியாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். “அட்டன்சிவ் டைபர் ஹைபர் டி-ஆக்டிவ்” என்பது இன்றைய காலகட்டத்தில் வளரும் குழந்தைகளுக்கு அதிகமாக இருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைளைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாக கதைக்கு தேவைப்பட்டது. இவர்கள் நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அல்ல. வேண்டுமானால் ‘சூப்பர் கிட்ஸ்’ அதாவது அதீத புத்திசாலிகள் என்றும் சொல்லலாம் அதாவது சாதாரண மனிதனின் ‘ஐ க்யூ’ 110 என்றால் இந்த குழந்தைகளுக்கு 120, 130 இருக்கும்.

இந்த குழந்தைகளை பற்றிய தகவல்களை திரட்ட பெரும் முயற்சி தேவைப்பட்டிருக்குமே..?

உண்மைதான். அதற்காகத்தான் ஆய்வில் ஏதாவது இதுபோன்ற படம் வந்திருக்கிறதா என்று பார்த்தோம் அப்படி எதுவும் இதுவரை வரவில்லை. மாதிரிப் படங்கள் இல்லாத காரணத்தால் அதே போல் இருக்கும் குழந்தைகளை சந்தித்து அவர்களை பற்றிய விவரங்களை ஆய்வில் சேகரித்தோம் அதற்காக இரண்டு உதவி இயக்குனர்களை பிரத்யேகமாக வைத்து அதிகமாக மருத்துவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் மற்றும் குழந்தைகளை பார்த்து அவர்களுடன் கலந்துரையாடி விவரங்களை சேகரித்தோம். அதன் பின்னே படத்தை எடுக்க ஆரம்பித்தோம்.

இதில் சூர்யா எந்தவிதத்தில் தனது பங்கை தந்துள்ளார்..?

இதில் சூர்யாவும் ஒரு குழந்தைகள் மருத்துவராக வந்து குழந்தைகளை பற்றியும் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் மற்றும் நாம் அவர்களை எவ்வாறு பார்க்க வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு விரிவாக எடுத்துரைப்பார். அதுவும் அறிவுரை சொல்வது போல் இல்லாமல் ரசிக்கும் படியாக தான் இருக்கும். எடுத்துக்காட்டாக குழந்தைகள் சேட்டைகள் செய்யும் அதை நாம் நம் சிறுவயதில் நம் அப்பா, அம்மாவிடம் செய்த தருணங்களை நினைவுபடுத்தும் விதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் அதை விட்டுவிட்டு நாம் ஏன் கோபப்பட வேண்டும் என்பதை எடுத்துரைப்பது தான் சூர்யாவின் கதாபாத்திரம்

சூர்யாவுக்காக கதையில் மாற்றம் ஏதாவது செய்தீர்களா..?

இல்லை.. இந்த படத்தில் சூர்யாவிற்காக எந்த மாற்றமும் கதையில் இல்லை இது முழுக்க முழுக்க பசங்களுக்கான திரைப்படம் சூர்யா, அமலாபால் போன்றவர்கள் சில முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார்கள் அவ்வளவு தான். ஆனால் இதுபோன்ற கதைகளில் சூர்யா போன்ற நாயகர்கள் நடிப்பது மிகப்பெரிய ஒன்று ஏனென்றால் அவருடைய ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கும் அவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம்.. நான் பயணத்தில் சூர்யாவிடம் கூறினேன் சீக்கிரமாக நேரடி தெலுங்கில் நடித்து உங்களுடைய ரசிகர்குக்கு விருந்தளிக்க வேண்டும் என்றேன் அப்படிப்பட்ட நடிகர் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருப்பது பெருமைக்குரியது.

சூர்யாவுடன் ஜோதிகா தான் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டதே..?

உண்மைதான்.. கதையில் சூர்யாவிற்கு ஒரு ஜோடி தேவைப்பட்ட நேரத்தில் சூர்யா ஜோதிகா என்று முடிவு செய்தோம் ஆனால் பின்பு ஜோதிகா அவர்கள் 36 வயதினிலே படத்தில் நடித்துக் கொண்டு இருந்ததால் இதில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் சூர்யாவுக்கு ஜோடி யார் என்று யோசிக்கையில் அமலாபாலிடம் பேசியதும் குழந்தைகள் படம் என்பதால் பின்னர் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே போல் பிந்துமாதவி அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் இவர்கள் அனைவரும் இணைவதற்கு காரணம் ஒன்று தான் குழந்தைகளுக்கான படம் என்ற ஒன்றுதான்.

இதை தயாரிக்கும் உந்துதல் சூர்யாவுக்கு வந்தது ஏன்..?

இந்த படத்தை எனது தயாரிப்பு நிறுவனத்தில் முதலில் துவங்கினாலும் நாம் சொல்வது ஒரு நல்ல கருத்து, நல்ல படம் இதை பணத்துக்காக இல்லாமல் ஒரு நல்ல விழிப்புணர்வுக்காக இருக்க வேண்டும் என்பதால் இதை சூர்யாவின் வாயிலாக கொண்டு செல்லும் போது இன்னும் அதிக மக்களை சென்றடையும் என்ற நல்ல எண்ணத்தில் தான் நானும் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்து பணியாற்றினோம்.

உங்களது குழந்தை பருவத்தில் பள்ளிக்காலம் இப்படி அமைந்ததா..?

என் அப்பா எனக்கு இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்தது கிடையாது நான் சுமாராக படித்ததால் என்னை அடி பின்னி எடுத்துவிடுவார் எப்போதும் என்னை என்னுடன் படித்த ஆசிரியர் மகனுடன் ஒப்பிட்டு பேசுவார். அவர் பள்ளிக்கு போகாத காரணத்தால் அவருடைய ஆசைகளை என்னிடம் திணித்து நிறைவேற்ற ஆசைப்பட்டார் ஆனால் நான் என் அப்பா போல் கிடையாது. என் அப்பாவிடம் நான் சினிமாவுக்கு போகிறேன் என்றபோது, அவர் ஜாதகம் பார்த்து விட்டு உனக்கு இரும்பு கடைதான் சரியாக வரும் என்றார். அப்பாவை எதிர்த்து சினிமாவிற்கு வந்தேன்.

குழந்தைகளுக்காக படம் எடுக்கும் நீங்கள் நிஜத்தில் எப்படிப்பட்ட தந்தை..?

குழந்தைகளுக்கான படம் என்பதில் தீவிரமாக இருக்க காரணம் எனக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கிறது. ஒருவன் பிளே ஸ்கூல் போகிறான் இன்னொருவன் யு கே ஜி படிக்கிறான். இருவரும் அளவுக்கு அதிகமாக சேட்டைகள் செய்வார்கள் அவர்களுக்கு வேலையே எங்களது வீட்டு சுவரில் பேனா, பென்சில் வைத்து கிறுக்குவது தான் நாங்கள் அவர்களுக்கு கிறுக்க பென்சில் போன்றவற்றை வாங்கி கொடுப்பதுதான் வேலையே. என் வீட்டிற்கு வந்தால் புரியும் அதுதான் என் வீட்டிற்கு அழகு. சில சமயங்களில் அவர்கள் வெளியூர் சென்றிருந்தால் அந்த ஓவியங்கள் எங்களிடம் பேசுகின்றன அதுதான் ஆனந்தம். குழந்தைகளிடம் வீட்டிலும் சரி பள்ளியிலும் சரி எதையும் திணிப்பது கிடையாது அவனுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே பள்ளிக்கு அனுப்புகிறேன் என்ன தரம் வாங்கினாலும் அவனை பாராட்டுகிறேன் அதை அவன் ரசிக்கிறான்

என்றவர், “எப்போதும் என் இயக்கத்தில் நல்ல படங்களும் வித்தியாசமான படங்களை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.பசங்க-2 குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் வந்து ரசிக்கும் படியாக இருக்கும் என்பதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை” என புன்னகைக்கிறார்.

Comments are closed.