படைவீரன் – விமர்சனம்

209

padai-veeran-movie review

தேனி பக்கம் உள்ள கிராமம் ஒன்றில் எந்த வேலைக்கும் போகாமல் சண்டியர் போல சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஹீரோ விஜய் ஜேசுதாஸ். ஒருகட்டத்தில் போலீசாருக்கு கிடைக்கும் மரியாதையை கண்டு தானும் போலீசாக வேண்டும் என விரும்புகிறார். அதற்கு முன்னாள் ராணுவ வீரரான தனது மாமா பாரதிராஜா மூலம் காய் நகர்த்தி வேலையும் பெறுகிறார்.

சென்னையில் விஜய் ஜேசுதாஸ் பயிற்சிக்காக தங்கியிருந்த காலத்தில் இவர் ஊருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்தவர்களுக்கும் ஜாதி மோதல் உருவாகிறது. ட்ரெய்னிங் முடிவடைந்த நிலையில் அவரும் அவரது பேட்ஜ் நண்பர்களும் முதல் பணியாக அவரது ஊர் கலவரத்தை அடக்குவதற்காக அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

தனது உறவினரே தலைமை பொறுப்பில் இருந்து தனது ஜாதியினரை தூண்டி விடுவதையும் தனது நண்பர்களாக இருந்தவர்களே மோதலில் முன்னிற்பதையும் பார்க்கும் விஜய் ஜேசுதாசுக்கு நாம் எப்படி அவர்களை அடக்குவது என்கிற குழப்பம் ஏற்படுகிறது.. அதேசமயம் தனது சொந்தக்கார இளம் விதவை ஒருவரை ஜாதியை காரணம் காட்டி கௌரவ கொலைசெய்ததும் தெரியவர அதிர்ச்சியாகிறார் விஜய் ஜேசுதாஸ்.

ஆனால் அவரது மாமா பாரதிராஜாவோ நியாயத்தின் பக்கம் நின்று ஜாதி மோதலை தடுக்க சொல்கிறார். அதன்படி நடக்க முயலும் விஜய் ஜேசுதாஸ் தனது ஜாதிக்காரர்களுக்கே எதிரியாக மாறுகிறார். கலவரத்தின் முடிவில் என்ன ஆனது என்பதும் நியாத்தின் பக்கம் நின்ற விஜய் ஜேசுதாஸ் சாதித்தது என்ன என்பதும் க்ளைமாக்ஸ்.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் போலீஸ்காரனாக மாறும் விஜய் ஜேசுதாஸ் அந்த கேரக்டரில் சரியாக பொருந்தியுள்ளார். ஜாதியைவிட்டு முழுதாக வெளிவர முடியாத ஒரு போலீஸ்காரனின் மனநிலையை அவர் ஓரளவு சரியாக பிரதிபலித்துள்ளார்.

சாதி மோதல்களை தடுத்தால் தான் சமுதாயம் வளரமுடியும் என்கிற கருத்தை அடிக்கடி வலியுறுத்தும் கேரக்டரில் யதார்த்தம் பேசும் பாரதிராஜா மீது மரியாதையை வருகிறது. ட்ரய்னிங் போலீஸ் ஆபீசராக மிடுக்கு காட்டியிருக்கும் கல்லூரி அகிலின் இந்த முகம் நமக்கு புதிது.. கிராமத்து துறுதுறு நாயகி கேரக்டரில் அம்ரிதா செமையாக செட்டாகி உள்ளார். அதிலும் போட்டவை அணிந்துகொண்டு ஹீரோவை லுக் விடும் காட்சியில் நாமும் ஒரு நிமிடம் சொக்கித்தான் போகிறோம்..

சாதி மோதலை தூண்டிவிடும் கவிதா பாரதி, விஜய் ஜேசுதாஸின் நண்பர்கள் குழு என பலரும் நல்ல தேர்வுதான். ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும், கார்த்திக் ராஜாவின் இசையும் கதையின் கனத்தை நம் மீது ஏற்ற முயற்சிக்கின்றன.

சமீப காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் அடங்கி கிடந்த ஜாதி மோதலை கதைக்களமாக எடுத்துள்ளார்கள். அவற்றில் எதுவும் புதுமை இல்லை என்றாலும், ஒரு போலீஸ்காரனின் கோணத்தில் அந்த மோதலை அணுகியிருப்பது கொஞ்சம் புதுசு தான். அந்தவகையில் இயக்குனர் தனா மணிரத்னத்தின் பாசறையில் பயின்றாலும் பாரதிராஜாவின் சீடாராகவே தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

Comments are closed.