நேற்று இன்று – விமர்சனம்

241


சுட்டுக்கொள்ளப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனை மையப்படுத்தி கதை பின்னப்பட்டுள்ளது.  சந்தனக்கடத்த்ல் மன்னனான வீராவை அதிரடிப்படையினர் என்கௌண்டரில் சுட்டுக்கொல்கின்றனர். ஆனால் அதோடு ஆபரேஷன் முடியவில்லை என்றும் வீராவை தேடப்போய் பின்னர் அவனுடைய ஆளாய் மாறி பல அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட காரணமாக இருந்த முன்னாள் டி.எஸ்.பி டேவிட் (பிரசன்னா) இன்னும் காட்டுக்குள் தான் இருக்கிறார் என்றும் அவரையும் ஒழித்துக்கட்டவேண்டும் என்றும் மேலிடம் உத்தரவிடுகிறது.

அவரைத்தேடி காட்டுக்குள் சத்யா (ரிச்சர்டு) தலைமையில் அறிவு (பரணி), குரு (நிதிஷ்) மற்றும் இருவர் என ஐவர் அணி உள்ளே நுழைகிறது. அங்கே எதிர்ப்படும் இளம்பெண் அகிலாவின்(அருந்ததி) உதவியுடன் தேடல் நடக்கிறது. ஆனால் தேடப்போன இடத்தில் வீரா புதைத்து வைத்திருந்த பணம் அவர்கள் கண்களுக்கு தட்டுப்பட, ரிச்சர்டை தவிர அனைவரும் பணத்தை சுருட்ட நினைக்கிறார்கள்.

இதற்காக ரிச்சர்டை ஒழித்துவிடும் அளவுக்கு திட்டம்போட, ஏதேச்சையாக ரிச்சர்டே கன்னிவெடியை மிதித்து சிக்கிக்கொள்கிறார். இதுதான் சமயம் என மற்றவர்கள் அவர் ஒழியட்டும் என நிர்க்கதியாய் விட்டுவிட்டு புறப்பட்டு செல்கிறார்கள். அப்போது இந்த குழுவினர் தேடும் பிரசன்னா, எதிர்பாராத விதமாக ரிச்சர்டை காப்பாற்றுகிறார்.

அதன்பின்னர்தான் பிரசன்னா நிரபராதி என தெரியவருகிறது.. ஆனால் பிரசன்னவுக்கோ மற்ற நால்வரும் கொண்டுசெல்லும் பணம் தேவைப்படுகிறது. இருவரும் சேர்ந்து மற்றவர்களை தேடிப்போகிறார்கள். பணத்தை கைப்பற்றினார்களா..? பிரசன்னா என்ன ஆனார் என்பது படத்தின் ஒரு பக்கமாக நகரும் கதை.

இன்னொரு பக்கம் இவர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் நகர்கிறது. மனோசித்ராவின் கார் காட்டுப்பகுதில் நின்றுவிட அருகில் கார்வைத்திருக்கும் மெக்கனிக்கான விமலிடம் தான் சொல்லும் இடத்திற்கு கொண்டுவந்து விடச்சொல்கிறார்.

சதா குடிக்கின்ற, பெண்களை போதை வஸ்துவாக பார்க்கின்ற விமல் சிலபல தேவையில்லாத சீண்டல்களுடன் மனோசித்ராவுடன் பயணிக்கிறார். ஆனால் அவர்களது காட்டு வழி பயணத்திலும் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுகின்றன.

மனோசித்ரா எதற்காக இந்தப்பயணம் மேற்கொள்கிறார், தொடர்ந்து தொந்தரவு கொடுக்கும் விமலிடம் இருந்து தன்னை தற்காத்துக் கொண்டாரா என்பது இன்னொரு பக்கம் நகரும் கதை. ஆனால் இரண்டு கதைகளும் க்ளைமாக்ஸில் ஒன்று சேர்கின்றன. அது எப்படி என்பதை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விமல், ரிச்சர்டு இருவருக்குமே சம அளவுள்ள ஆனால் முற்றிலும் மாறுபட்ட பாத்திரங்கள்.. விமல் படம் ஆரம்பத்திலிருந்து குடித்துக்கொண்டே இருக்கிறார். இரட்டை அர்த்தமெல்லாம் இல்லை.. நேரடியாகவே என்கூட படுக்கிறியா என்றெல்லாம் பேசுகிறார்.

நேர்மையான அதிரடிப்படை வீரராக ரிச்சர்டின் பாத்திரப்படைப்பு கண்ணியம்.. தன்னை அழிக்க நினைப்பவர்களிடம் கூட நட்பு பாராட்டுகிறார். அதேபோலத்தான் பிரசன்னாவும், எதிரியை பிடிப்பதற்காக அவர் காட்டுக்குள் சுற்றும் காட்சிகள் பரபரப்பு. ரிச்சர்டுடன் கூடவே வரும் சபலிஸ்ட்டுகளான பரணி, நிதிஷ், ஹரிஷ், ஜெமினி பாலாஜி உட்பட நான்கு பேரும் தங்களுக்கு வழிகாட்டும் அருந்ததியுடன் காமரசத்தில் ஈடுபடுவது ஒவர்டோஸ்.

மனோசித்ரா க்யூட் அண்ட் சிம்பிள்.. அவர் காரில் பயணம் செய்யும்பொது அவருடன் நாமும் பயணம் செய்வது போலவே சுகமாய் இருக்கிறது. ஆனால் அருந்ததி தான் படம் முழுவதும் ஒரு கருப்பு பனியனை மட்டும் அணிந்துகொண்டு சும்மா காட்டு காட்டென்று கவர்ச்சியை கடை விரித்துக் கட்டுகிறார். ஆமாம் என்னதான் அவர்  துப்பறிய மாறுவேஷத்தில் வந்த பெண் அதிகாரி என்றாலும் அவரைப்பற்றி உண்மை தெரியாத மற்ற வீரர்களுடன் காம களியாட்டங்களில் (ஓரளவுக்குத்தான் என்றாலும்) ஈடுபடுவார்களா என்ன?

தமிழக, கர்நாடக வனப்பகுதியில் காட்டுக்குள் படமாக்கப்பட்ட காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தினேஷ் ஸ்ரீயின் கடின உழைப்பு தெரிகிறது. ரெஹான் இசையில் குத்துப்பாட்டு குத்தாட்டம் போட வைக்கிறது. பல்லவன், அம்முவாகிய நான் படங்களை இயக்கிய பத்மாமகன் தான் படத்தை இயக்கியுள்ளார். ரிச்சர்டுடன் வரும் நால்வர் கூட்டணியின் விரசக்காட்சிகளை சற்றே மட்டுப்படுத்தியிருந்தால் பெண்களும் தாராளமாக படம் பார்க்க வருவார்கள்.. அதனால் என்ன? இளைஞர்கள் பட்டாளத்திற்கு தீனி இருக்கிறது அதுபோதும் என்று நினைத்துவிட்டார் போலும். சில சுவராஸ்யங்களுக்காக இந்தப்படத்தை பார்க்கலாம்.

Comments are closed.