சிறுவயதில் அம்மா சித்தாராவின் பாசம் தம்பியின் பக்கம் திரும்ப இருவர் மீதும் வெறுப்பாக வளர்கிறார் ஹரீஷ்.. வளர்ந்ததும் எப்படியோ உள்ளூர் தாதா அர்ஜுனாவின் செல்லப்பிள்ளையாக மாற, தாதாவின் சொந்த மச்சான் பாவெலுக்கோ ஹரீஷ் மீது எரிச்சல் உண்டாகிறது. ஆனால் இந்த கூட்டணிக்கே குழி தோண்ட காத்திருக்கிறார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஷிஜாய் வர்கீஸ்..
இந்தநிலையில் தம்பியின் கல்லூரி தோழி யாமினி மீது ஹரீஷுக்கு காதல் வர, எதிர்பாராத விதமாக தான் வெறுக்கும் தம்பி மூலமாக அந்த காதல் கைகூட, அதன்மூலம் தம்பியின் அன்பை புரிந்துகொள்ளும் ஹரீஷ் தாதாவிடம் இருந்து விலகி குடும்ப வாழ்க்கைக்குள் நுழைய நினைக்கிறார்.. ஆனால் அதன்பின் நடக்கும் நிகழ்வுகள் தாதாவிற்கு எதிரானவராக ஹரீஷை காட்சிப்படுத்த, அதனால் ஒரு உயிர்ப்பலியும் நிகழ்கிறது..
பலியானது யார்..? அதன்பின் தாதா, ஹரீஷ் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன…? போலீஸ் அதிகாரி வைத்த குறியில் இருந்து அவர்களால் தப்பிக்க முடிந்ததா என்பது க்ளைமாக்ஸ்.
கதாநாயகன் ஹரீஷ் புதுமுகம் என்றாலும் துறுதுறு நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்.. ஆனால் அவரது கேரக்டரை ஓவர் பில்டப் ஆக காட்டியதை தவிர்த்திருந்தால் இன்னும் இயல்பாய் இருந்திருக்கும். கங்காரு படத்தில் பார்த்த அர்ஜுனாவா இது..? தாதா மந்திரமூர்த்தியாக அசால்ட்டான நடிப்பு.. தமிழ்சினிமாவுக்கு புது வில்லன் ரெடி.. ஒரு ஆக்சன் கமர்ஷியல் படத்தில் கதாநாயகிக்கு என்ன வேலையோ அதுதான் யாமினி பாஸ்கருக்கும்.. பெரிய அளவில் மனதில் ஓட்ட மறுத்தாலும், நடிப்பில் குறைசொல்லவும் வழியில்லை.
அர்ஜுனாவின் மச்சானாக பாவெல் நவகீதன் எகத்தாளமான நடிப்பு.. ஆனாலும் எந்நேரமும் நக்கலாகவே பேசுவதுதான் எரிச்சலூட்டுகிறது.. கம்பீர போலீஸாக மிரட்டுகிறார் மலையாள நடிகர் ஷிஜாய் வர்கீஸ். கதாநாயகன் கொலையாளியை தேடி ஒருபக்கம் ஓட, ஆனால் இறுதியில் யார் கொலைகாரன் என தெரியவருவது ட்விஸ்ட் தான்.
யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் எஸ்.பி.டி.ஏ குமார்.. ‘முன்னோடி’ என டைட்டில் வைத்துவிட்டு யாரும் சொல்லாத புதுக்கதை ஒன்றையும் அவர் சொல்லவில்லையே என்பதில் கொஞ்சம் ஏமாற்றம் தருகிறார்… இருந்தாலும் முதல் படம் போல இல்லாமல் ஒரு அனுபவ இயக்குனர் போல கமர்ஷியலாக படத்தை கொடுத்த விதத்தில் வெற்றிக்கோட்டை தொட்டுள்ளார் என்றே சொல்லலாம்..

Comments are closed.