’மகாராஜா’ விமர்சனம்

225

நடிகர்கள் : விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, அபிராமி, மம்தா மோகன்தாஸ், சிங்கம் புலி, முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், வினோத் சாகர், காளையன், பாரதிராஜா, பி.எல்.தேனப்பன்
இசை : பி.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம் : நித்திலன் சுவாமிநாதன்
தயாரிப்பு : சுதன் சுந்தரம், ஜெகதீஷ் பழனிசாமி

சலூன் கடை நடத்தி வரும் விஜய் சேதுபதி, தாய் இல்லாத தன் மகள் மீது அளவுக்கடந்த பாசம் வைத்திருப்பதோடு, அவருக்காக எதையும் செய்யக்கூடியவராகவும் இருக்கிறார். அவரது மகள் விளையாட்டு போட்டிக்காக வெளியூர் சென்றிருக்கும் நிலையில், தன் வீட்டில் உள்ள குப்பை தொட்டி காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் விஜய் சேதுபதி, அது தன் மகளின் உயிரை காப்பாற்றியது, அவர் வருவதற்குள் அதை கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்கிறார். குப்பை தொட்டி காணாமல் போனதை புகாராக கொடுக்கும் விஜய் சேதுபதி மீது கோபமடையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் நட்டி அவரை அடித்து விரட்டுகிறார். ஆனால், அங்கிருந்து செல்லாமல் 7 லட்சம் ரூபாய் தருவாக சொல்கிறார். ஒரு குப்பை தொட்டிக்காக 7 லட்சம் ரூபாய் ஒருவன் தருகிறான் என்றால் அதில் வேறு ஏதோ பெரிதாக இருக்க வேண்டும், என்று நினைக்கும் காவலர்கள் குப்பை தொட்டி திருடப்பட்டது குறித்து விசாரிக்கிறார்கள்.

இதற்கிடையே, காவல் நிலையத்தில் யாரையோ தேடும் விஜய் சேதுபதியின் நடவடிக்கைகள் திடுக்கிட வைப்பதோடு, அவர் வெறும் குப்பை தொட்டிக்காக காவல் நிலையத்தில் வரவில்லை என்பதும் தெரிய வருகிறது. அப்படி என்றால் அவர் காவல் நிலையத்திற்கு வந்தது ஏன்?, அவர் தேடும் நபர்கள் யார்?, எதற்காக அவர்களை அவர் தேடுகிறார்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் மீதிக்கதை.

மகாராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, வழக்கமான தனது உடல் மொழி மூலமாகவும், இயல்பான நடிப்பு மூலமும் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். தன் மகள் மீது அவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் தந்தையாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து விடுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் அனுராக் காஷ்யப், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நட்டி, சிங்கம் புலி, வினோத் சாகர், அபிராமி, மம்தா மோகந்தாஸ் ஆகியோர் படத்தின் நாயகன் விஜய் சேதுபதியை தாண்டி கவனம் ஈர்க்கிறார்கள்.

அருள்தாஸ், முனீஷ்காந்த், கல்கி, பாய்ஸ் மணிகண்டன், காளையன், சஜனா நெமிதாஸ், இயக்குநர் பாரதிராஜா, பி.எல்.தேனப்பன் உள்ளிட்டவர்கள் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும், படத்திற்கு பலமாக பயணித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் பி.அஜனீஷ் லோக்நாத்தின் இசையில், பாடல்கள் அனைத்தும் கதைக்களத்திற்கு வலிமை சேர்க்கும் விதமாகவும், பின்னணி இசை திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கதையோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறது.

நான் – லீனர் முறையில் சொல்லப்படும் கதையை எந்தவித குழப்பமும் இன்றி மிக தெளிவாக நகர்த்தி செல்லும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கதாபாத்திரங்களின் உணர்வு மற்றும் நடிகர்களின் நடிப்பை முழுமையாக ரசிக்க வைத்திருக்கிறார்.

‘குரங்கு பொம்மை’ படம் மூலம் திரைக்கதைக்காக பாராட்டப்பட்ட இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், மீண்டும் தனது சிறப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களை முழுமையாக ஆட்கொண்டிருக்கிறார்.

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை பல வடிவங்களில் சஸ்பென்ஸ்களை வைத்து, அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்புடன் படத்தை நகர்த்தி செல்லும் இயக்குநர் அப்பா – மகள் பாசத்தையும் மிக அழுத்தமாக சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

குப்பை தொட்டிக்காக காவல் நிலையத்திற்கு வரும் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், இரண்டாம் பாதியின் கதை நகர்வு இப்படித்தான் இருக்கும், என்பது யூகிக்கும்படி இருப்பது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்தாலும், நான் – லீனர் முறையில் கதையை சிறப்பாக கையாண்டதோடு, எதிர்பார்க்காத சில திருப்பங்கள் மூலம் நாயகனை தாண்டி மற்ற கதாபாத்திரங்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் வடிவமைத்தது போன்றவை பாராட்டும்படி இருக்கிறது.

50 வது படத்தில் மிக அழுத்தமான கதையில் மிக இயல்பாக நடித்து மீண்டும் தன்னை சிறந்த நடிகராக நிரூபித்திருக்கும் விஜய் சேதுபதிக்கு இந்த ‘மகாராஜா’ நிச்சயம் வெற்றி மகுடம் சூட்டும்.

ரேட்டிங் 3.3/5

Comments are closed.